* அஷ்ரப்பின் அடக்கத்தலமருகே ஹக்கீம்
எம்.ஏ.எம்.நிலாம்
கிழக்கில் ஜனநாயகத்தை நிலைநாட்டவே பாராளுமன்ற உறுப்பினர் பதவிகளைத் தூக்கியெறிந்துவிட்டு மாகாண சபைத் தேர்தல்களத்தில் குதித்திருப்பதாக முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.
பாராளுமன்ற பதவிகளை இராஜிநாமாச் செய்த பின்னர் ஷ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் , செயலாளர் ஹஸன்அலி, தவிசாளர் பஷீர் சேகுதாவூத் ஆகியோர் கொழும்பு ஜாவத்தை முஸ்லிம் மையவாடிக்குச் சென்று மர்ஹும் அஷ்ரபின் அடக்கத்தலத்தில் துஆப் பிரார்த்தனையிலீடுபட்ட பின்னர் அங்கு கூடியிருந்த பெருந்தொகையான கட்சி ஆதரவாளர்கள் , தொண்டர்கள் முன்னிலையில் கருத்துத் தெரிவிக்கையிலேயே ரவூப் ஹக்கீம் மேற்கண்டவாறு கூறினார்.
அவர் அங்கு தொடர்ந்து பேசுகையில் கூறியதாவது;
கிழக்கு மாகாண சபைத் தேர்தலின்மூலம் ஜனநாயகத்தைக் குழி தோண்டிப் புதைப்பதற்கு அரசு முனைகிறது. கிழக்கிலுள்ள தமிழ், முஸ்லிம் வாக்குகளை கொள்ளையிடும் முயற்சியைத் தடுத்து நிறுத்தி ஜனநாயகத்தைப் பாதுகாப்பதற்கான போராட்டக் களத்தில் இன்று நாம் குதித்துள்ளோம்.
ஜனநாயகத்தை வெற்றியடையச் செய்யும் இந்தப் போராட்டத்தில் கிழக்கில் வாழும் மூவின மக்களும் எம்மோடு ஒன்று திரளத்தயாராகவிருக்கின்றனர் என்ற உத்தரவாதத்தை இந்த இடத்தில் உறுதிப்படுத்திக் கூறி வைக்கின்றேன்.
கிழக்கில் வாழும் மூவின மக்களும் சமாதானமாக வாழும் நிலையை உருவாக்கி அந்த மண்ணை சமாதான பூமியாக மலரச் செய்வதே ஷ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் இலட்சியக் கனவாகும்.
இந்த தேர்தலில் தாம் வெற்றியடைவோம் என்பதற்கப்பால் அரசாங்கத்தின் அராஜகத்தை முறியடித்து அங்கு ஜனநாயக விழுமியங்களை பாதுகாப்பதே எமது ஒரே குறிக்கோளாகும். கிழக்கு மக்கள் எமது பக்கம் இருக்கின்றார்கள் என்பதை இத் தேர்தலில் நாம் நிரூபித்துக் காட்டுவோம்.
ஹிஸ்புல்லா போன்றோரின் பச்சோந்தித்தனமான பசப்பு வார்த்தைகளை நம்புவதற்கு கிழக்கு முஸ்லிம்கள் இனியும் தயாராக இல்லை. நாம் யாருடைய பதவிகளையும் தட்டிப்பறிக்க மாட்டோம். ஜனநாயக சக்திகளை ஒன்றிணைத்து பறிபோகும் ஜனநாயகத்தை பாதுகாப்பதற்காகவே ஒன்றிணைந்துள்ளோம்.
முஸ்லிம் காங்கிரஸிலிருந்து எவரும் வெளியேறுவதால் கட்சி பாதிக்கப்படப் போவதில்லை . கட்சிக்குத் துரோகமிழைத்தவர்களை மக்கள் உரிய நேரத்தில் கவனித்துக் கொள்வார்கள் என்றும் ரவூப் ஹக்கீம் தமதுரையில் தெரிவித்தார்.