* ஆளும் கட்சியில் இணைந்த ஹிஸ்புல்லா கூறுகிறார்
தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளின் தலைவர் பிள்ளையானை கிழக்கு மாகாண சபையின் முதலமைச்சர் வேட்பாளராக அறிவிப்பதாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஒரு போதுமே வாக்குறுதி அளிக்கவில்லையென ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் அங்கம் வகிக்கும் முஸ்லிம் பிரமுகர்கள் தெரிவித்தனர்.
இலங்கை மன்றக் கல்லூரியில் நேற்று புதன்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் ஆளும் கட்சியில் இணைந்துள்ள எம்.எஸ். எம்.ஹிஸ்புல்லா தெரிவித்ததாவது;
கிழக்கு தேர்தலில் முஸ்லிம் ஒருவரை முதலமைச்சராக்க வேண்டுமென்பதில் ரவூப் ஹக்கீமை தவிர ஏனைய சகலரும் உறுதியாக உள்ளனர். ஆனால் முஸ்லிம் ஒருவர் கிழக்கின் முதலமைச்சரானால் தமது இருப்புக்கு ஆபத்து ஏற்படுமென அஞ்சியே முஸ்லிம் ஒருவர் முதலமைச்சராவதை ஹக்கீம் விரும்பவில்லை. இதன் மூலம் அஷ்ரப்பின் கனவை அவர் தகர்த்தெறிந்துவிட்டார்.
முஸ்லிம் காங்கிரஸ் தற்போது ஐக்கிய தேசியக் கட்சியுடன் கூட்டுச் சேர்ந்ததன் மூலம் எதிர்வரும் தேர்தலில் அவர்களின் தோல்வி உறுதியாகியுள்ளது. 7 ஆசனங்களுக்கு மேல் அவர்களினால் கைப்பற்ற முடியாது.
பிள்ளையானுக்கு முதலமைச்சர் பதவி வழங்கப்படுமென ஜனாதிபதி ஒரு போதுமே வாக்குறுதி வழங்கவில்லை. ஆளும் தரப்பில் கூடிய ஆசனங்களைப் பெறுபவர்களுக்கு முதலமைச்சர் பதவியை வழங்கலாமென்பதே ஜனாதிபதியின் விருப்பமாகும் என்றார்.
அமைச்சர் றிஷாட்
இங்கு அமைச்சர் றிஷாட் பதியுதீன் கருத்து தெரிவிக்கையில்,
மட்டக்களப்பு மாவட்டத்தைச் சேர்ந்த ஹிஸ்புல்லாவை கிழக்கு மாகாண முதலமைச்சர் வேட்பாளராக நிறுத்த ஆளும் தரப்பிலுள்ள முஸ்லிம் கட்சிகள் தீர்மானித்துள்ளன. இத் தேர்தலில் நிச்சயம் நாம் வெற்றி பெறுவோம்.
கிழக்கு மாகாணத்தில் முஸ்லிம்கள் அதிகமாக வாழும் நிலையில் முஸ்லிம் முதலமைச்சரைப்பெற அச் சமூகத்திற்கு பூரண உரிமையுண்டு. வடக்கில் தமிழ் முதலமைச்சரும் ஏனைய மாகாணங்களில் சிங்களவர்களும் தெரிவாக வாய்ப்புள்ள நிலையில் கிழக்கு முதலமைச்சராக முஸ்லிம் ஒருவரை உறுதிப்படுத்துவது அவசியமாகும்.
முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் தமிழ்-முஸ்லிம் உறவை சீர்குலைக்கும் வகையில் செயற்படுகிறார். அவரின் இனவாதச் செயற்பாடுகளுக்கு எக் காரணம் கொண்டும் பலியாகி விட வேண்டாமென நாம் இரு சமூகங்களையும் வலியுறுத்துகிறோம் என்றார்.