* சிக்கிவிடக்கூடாதென்பதற்காகவே போட்டியிடவில்லை; தமிழ்க்கூட்டமைப்பு அறிவிப்பு
தமிழ் மக்களின் பாரம்பரிய பிரதேசத்தில், அவர்களை குழிதோண்டிப் புதைக்க திட்டமிட்டிருக்கும் அரசாங்கத்தின் பயங்கரமான பொறிக்குள் தமிழ் பேசும் மக்கள் அகப்படக்கூடாதென்பதற்காக மிகக் கவனமாக ஆராய்ந்த பின்பே கிழக்குத் தேர்தலில் போட்டியிடுவதில்லையென தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தீர்மானித்திருப்பதாக அக்கட்சி தெரிவித்துள்ளது.
கடந்த அரைநூற்றாண்டுகளுக்கு மேலாக தமிழ் மக்கள் கடைப்பிடித்துவந்த அடிப்படைக் கொள்கைகளுக்கு மாறாக செயற்பட முடியாதென்பதால் இத்தீர்மானத்தை எடுத்திருப்பதாக இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பாராளுமன்றக் குழுத் தலைவர் இரா. சம்பந்தன், பொதுச் செயலாளர் மாவை சேனாதிராஜா ஆகியோர் இணைந்து கையெழுத்திட்டு தேர்தலில் போட்டியிடாத காரணத்தை உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளனர்.
அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது;
1.2005 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் இடம்பெற்ற ஜனாதிபதித் தேர்தலில் ஜாதிக ஹெல உறுமய, மகா ஜன எக்சத் பெரமுன, ஜனதா விமுக்தி பெரமுன போன்ற கட்சிகளின் ஆதரவுடன் நூலிழையில் பதவிக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ, ஒரு தீவிர சிங்கள தேசியவாதப் போக்கை கடைப்பிடித்து அரசியல் ரீதியாக, இராணுவ ரீதியாக அல்லது மனிதாபிமான ரீதியாக எடுத்த ஒவ்வொரு முடிவிலும் தீவிர சிங்கள தேசியவாதத்தை கட்டியெழுப்புவதை நோக்கமாகக் கொண்டே செயற்பட்டு வந்திருக்கின்றார். அதன்மூலம் அவர் தன்னை தீவிர சிங்கள தேசியத் தலைவராக அடையாளம் காட்டி வந்திருக்கின்றார்.
2.18 மாதங்களாக கலந்து ஆலோசனை செய்யப்பட்டதன் பின்பு 19 வருடங்களுக்கு மேலாக இலங்கை அரசியல் சாசனத்தில் இருந்து வந்த விதிகளையே நடைமுறைப்படுத்த வேண்டும் என்ற பிரேரணை தேசியப் பிரச்சினைக்கு ஓர் அரசியல் தீர்வைக் காண வேண்டுமென்று எடுக்கப்பட்டதாகக் கூறப்படும் முயற்சிகள் ஒரு போலித்தனமான பாசாங்கு என்பதை தெளிவாக எடுத்துக் காட்டுகின்றது. தற்பொழுது நடைமுறைக்கு வருவதற்கு பிரேரிக்கப்பட்டிருப்பது, தற்பொழுது இருக்கும் விதிகளுக்கு குறைவானதே. ஆரம்பத்தில் இருந்த இணைந்த வடக்கு - கிழக்கிற்குப் பதிலாக தற்பொழுது பிரிக்கப்பட்ட வடக்கு - கிழக்கு. பொலிஸ் அதிகாரங்கள், காணி அதிகாரங்கள் மறுக்கப்பட்டு நீதிமன்ற தீர்மானங்களின் மூலமாகப் பெருமளவில் தரங்குறைக்கப்பட்ட ஏனைய விதிகள்.
3. மிகவும் பெரும்பான்மையாகத் தமிழ் மொழி வாரியானதும், தொடர்ச்சியானதுமான வடக்கு - கிழக்கு மாகாணங்கள் 1987 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட, இந்திய - இலங்கை சர்வதேச ஒப்பந்தத்தின் பிரகாரம் ஒன்றாக இணைக்கப்பட்டன. இணைக்கப்பட்ட இப்பிரதேசம் 18 வருடங்களுக்கும் மேலாகத் தொடர்ந்து நிலைபெற்று அடுத்தடுத்து வந்த 4 ஜனாதிபதிகளால் அங்கீகரிக்கப்பட்டு ஏற்றுக்கொள்ளப்பட்டது. 18 வருடங்களுக்குப் பின்பு இணைப்பை ஏற்படுத்திய நடைமுறையில் ஒரு தவறு இருப்பதாக அடிப்படை மீறல் வழக்கு ஒன்றின் மூலம் ஜே.வி.பி. யினால் நீதிமன்றத் தீர்ப்பொன்றை பெற முடிந்தது. சரித்திர ரீதியாக கிழக்கில் வாழ்ந்து வந்த தமிழ் குடிமக்கள் வழக்கில் தலையிட்டு தங்கள் நியாயத்தை முழுமையாகவும், நற்பயன் பெறக் கூடியவகையிலும் முன்வைக்க கோரப்பட்ட கோரிக்கைக்கு அனுமதி மறுக்கப்பட்டது. தன்னுடைய முன்னோடிகளான 4 ஜனாதிபதிகளால் ஏற்றுக்கொள்ளப்பட்ட இணைப்பில் இருப்பதாக கூறப்பட்ட நடைமுறைத் தவறைத் திருத்தி, சர்வதேச ஒப்பந்தத்தைக் கடைப்பிடிப்பதற்குத் தேவையான சட்ட திருத்தத்தைக் கொண்டு வந்தால் அதை பாராளுமன்றத்தில் நிறைவேற்றுவதற்கு தயார் நிலையில் உள்ளதாக ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவுக்கு அறிவிக்கப்பட்டது. சமாதான முயற்சிகளைத் தொடர்வதற்கு, நடைமுறையில் இருக்கும் இணைந்த வடக்கு - கிழக்கு பிரதேச ஒழுங்கு ஓர் அத்திவாரக் கல்லாக அமையும் என்றும், அது எவ்விதத்திலும் குழப்பப்படக் கூடாதென்றும் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவுக்கு சர்வதேச சமூகத்தால் வலியுறுத்திக் கூறப்பட்டது. இருப்பினும், ஜனாதிபதி தீவிர தேசியவாதப் போக்கைக் கடைப்பிடித்து தன்னைத் தீவிர சிங்கள தேசியத் தலைவராக அடையாளம் காட்டிக்கொண்டார். அதன் மூலமாக இந்திய - இலங்கை சர்வதேச ஒப்பந்தத்தின் மூலம் சரித்திர ரீதியாக வாழ்ந்து வந்த தமிழ் பேசும் மக்களுக்கு கிடைக்கப்பெற்ற நன்மைகள் மறுக்கப்பட்டன.
4. பெரும்பான்மையான தமிழ்மொழி வாரியானதும், தொடர்ச்சியானதுமான வடக்கு - கிழக்குப் பிரதேசத்தில் தமிழ்க் குடிமக்கள் வாழும் கிராமங்கள் மீது மிகக் கடுமையான விமானத் தாக்குதல்கள், கண்மூடித்தனமான பல்குழல் எறிகணை வீச்சுகள் உட்பட தீவிரமான இராணுவத் தாக்குதல்களை மகிந்த ராஜபக்ஷ அரசாங்கம் ஆரம்பித்தது. குறிப்பிட்ட இராணுவத் தாக்குதல்கள் புலிகளின் இனங் காணப்பட்ட இலக்குகள் மீதானவை எனக் கூறப்பட்ட பொழுதும் பலியானவர்கள் மிகக் கூடுதலாக தமிழ்ப் பொது மக்களும், சில சமயங்களில் முஸ்லிம் மக்களும் ஆவர். பல நூற்றுக்கணக்கான குடிமக்கள் கொல்லப்பட்டார்கள். பல நூற்றுக்கணக்கானவர்கள் அங்கவீனப்பட்டும், படுகாயமடைந்தும் உள்ளார்கள். குடிமக்களின் சொத்துகள், வீடுகள், தோட்டங்கள், பயிர்கள், கால்நடைகள், விவசாயம், கடற்றொழில் உபகரணங்கள் அழிக்கப்பட்டன. ஐந்து இலட்சத்துக்கும் மேற்பட்ட தமிழ் மக்கள் குடிபெயர்ந்து வாழ்வாதாரங்களை இழந்து அநாதைகளாகவும், அகதிகளாகவும் ஆக்கப்பட்டனர். வணக்க ஸ்தலங்கள், பாடசாலைகள் போன்ற பொதுக் கட்டிடங்களும் அழிக்கப்பட்டன. அதேவேளை, இலங்கை அரசுப் படைகளினாலும், அரசுப் படைகளுடன் இணைந்து செயற்படும் துணை இராணுவக் குழுக்களினாலும், விசேடமாக வடக்கு - கிழக்கிலும் நாட்டின் ஏனைய பகுதிகளிலும் தமிழ் மக்கள் சட்டத்திற்கு விரோதமான கொலைகளுக்கும், பலவந்தமான ஆட்கடத்தல்களுக்கும் தொடர்ச்சியாக உட்படுத்தப்பட்டு வருகின்றார்கள். இச் செயல்களின் நோக்கம் தமிழ் மக்களைப் பயமுறுத்தி அவர்களை நாட்டை விட்டு வெளியேறச் செய்வதாகும்.
5. மகிந்த ராஜபக்ஷ அரசின் கடும் இராணுவத் தாக்குதல்கள் தொடர்ந்தும் நடைபெறுகின்றன. இவ்வரசின் இறுதி இலக்கு தமிழ் மக்களை இராணுவ ரீதியாக அடிபணிய வைத்து அடக்கி ஆட்சி புரிவதேயாகும். ஏற்றுக்கொள்ளக்கூடிய ஓர் அரசியல் தீர்வை உருவாக்குவதற்கு விருப்பமற்ற, வல்லமையற்ற ராஜபக்ஷ அரசு ஒரு பெறுமதியற்ற அரசியல் ஒழுங்கை வடக்கு - கிழக்கில் வாழும் தமிழ் பேசும் மக்கள் மீது திணிப்பதற்கு முயற்சிக்கின்றது.
6. பிரிக்கப்பட்ட கிழக்கில், அவசரம் அவசரமாக நடத்தவிருக்கும் இத்தேர்தல் ஒரு திட்டமிட்ட கொடூரமான சதி நடவடிக்கையாகும்.
7. தமிழ் மக்கள் மீது நிறைவேற்றப்படும் பாதகமான செயல்களை மறைப்பதற்கு ஒரு புகைமண்டலமாக, தன்னுடைய தீய நோக்கங்களை அடைவதற்காக ராஜபக்ஷ அரசு தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் என்ற ஆயுதத் தமிழ் துணைக் குழுவுடன் இணைந்து செயற்படுகின்றது.
8. உள்ளக சுயநிர்ணய உரிமையின் அடிப்படையில் தாங்கள் சரித்திர ரீதியாக வாழ்ந்து வந்த பிரதேசத்தில் போதிய சுயாட்சி என்ற தமிழ் பேசும் மக்களின் நியாயபூர்வமான அரசியல் அபிலாஷைகளைத் தடை செய்வதே ராஜபக்ஷ அரசின் திடமான நோக்கம். மேலும், இப்பாதையில் இடம்பெற்றிருக்கும் முன்னேற்றங்களைப் பின்நோக்கித் தள்ளுவதும் ராஜபக்ஷ அரசின் நோக்கமாகும். அபிவிருத்தி என்ற போர்வையில் வடக்கு - கிழக்குப் பிராந்தியத்தின் கிழக்குப் பகுதியில் குறிப்பிட்ட பிரதேசங்களை உயர் - பாதுகாப்பு வலயங்களாகவும், தொழில் வளர்ச்சி வலயங்களாகவும், சுற்றுச் சூழல் பாதுகாப்பு வலயங்களாகவும், பிரகடனம் செய்து கிழக்குப் பகுதியை சிங்கள மயமாக்குவதே ராஜபக்ஷ அரசின் நோக்கமாகும். கிழக்குப் பகுதியை சிங்கள மயமாக்கும் நோக்கத்துடன் அபிவிருத்தி வேலைகளை ஆரம்பிப்பதற்கு தேவையான நிதி உதவியினைத் திரட்டுவதற்காக அரசுக்கு ஒரு தமிழ் கையாள் தேவைப்படுகின்றது.
9. ராஜபக்ஷ அரசினுடைய தயவில் தங்கியிருக்கும் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள், ராஜபக்ஷவின் கட்டளைகளை நிறைவேற்றத் தயாராக உள்ளனர். ராஜபக்ஷ அரசாங்கம் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகளைப் பயன்படுத்தி அவர்கள் தமிழ் மக்கள் மீது பிரயோகிக்கும் வற்புறுத்தல், பலவந்தம் மூலமாக தமிழ் மக்களை, தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளுக்கு கட்டாயப்படுத்தி வாக்களிக்கச் செய்து, அதன்மூலம் பெறப்படும் ஆதரவை தமிழ் மக்கள் தனது அரசின் கொள்கைகளுக்கு வழங்கிய ஆதரவாகக் காட்டுவதற்கு முற்படுகின்றது. மிகவும் கொடூரமான இராணுவத் தாக்குதல் மூலம் மோசமாகப் பாதிக்கப்பட்டும், தொடர்ந்தும் இராணுவ மயமாக்கப்பட்ட சூழலில் வாழ்ந்துவரும் தமிழ் மக்கள், தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளின் பலவந்தமான கோரிக்கைகளுக்கு அடிபணிந்து செயற்படுவார்கள் என்று அரசாங்கம் எதிர்பார்க்கின்றது. தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் ஆயுத பலம் பெற்ற அரச துணை ஆயுதக் குழு. தமது பலவந்தமான கோரிக்கைகளை மீறும் தமிழ் பேசும் மக்களைத் தேர்தலுக்குப் பின் தண்டிப்பதற்கு, தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் அரசு அனுமதி பெற்றவர்களாகக் கருதப்படுகின்றார்கள். சட்ட ஒழுங்குக்குப் பொறுப்பான அரச கட்டமைப்பு, தமிழ் மக்கள் விடுதலைப்புலிகளின் அடுத்தடுத்து இடம்பெற்ற சட்டமீறல்கள் சம்பந்தமாக உரிய நடவடிக்கைகளை ஒருபோதும் எடுக்கவில்லை. இதைத் தமிழ் மக்களும், தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளும் நன்கு அறிவார்கள்.
10. கடந்த 2 வருடங்களுக்குள் இந்த அரசாங்கத்தால் தமிழ் மக்களுக்கு இழைக்கப்பட்ட அளவற்ற தீங்குகளும், சேதங்களும், நாடு சுதந்திரமடைந்த பின் ஆட்சியிலிருந்த எந்த அரசாங்கத்தாலும் செய்யப்படவில்லை. அவர்கள் சரித்திர ரீதியாக வாழ்ந்து வந்த பிரதேசத்தில் அவர்களைக் குழிதோண்டிப் புதைப்பதற்காக, அரசாங்கத்தால் திட்டமிடப்பட்டுள்ள பயங்கரமான பொறிக்குள் தமிழ் பேசும் மக்கள் அகப்படக்கூடாது. தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளினதும், அரச ஆயுதப்படைகளினதும் வெளிப்படையான அல்லது வெளிப்படையற்ற ஆயுத பலம் ஏனைய பலவந்தமான பலங்களின் ஊடாக இத்தேர்தல் மூலம் தனது கபடமான அரசியல் நிகழ்ச்சித் திட்டத்தை நிறைவேற்ற ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ அவர்கள் எத்தனிக்கின்றார்.
11. மிகவும் கவனமான ஆலோசனைகளின் பின்பு, எமது அடிப்படை அரசியல் கொள்கைகளைப் பாதகமான முறையில் விட்டுக் கொடுப்பதையோ அல்லது அடிப்படைக் கொள்கைகளுக்கு முற்று முழுதாக எதிராக நடத்தப்படும் தேர்தலில் பங்கெடுப்பதையோ, கடந்த அரை நூற்றாண்டுகளுக்கு மேலாகத் தமிழ் மக்களால் கடைப்பிடிக்கப்பட்டு வந்த அடிப்படை கொள்கைகளுக்கு மாறாகவே நாம் செயற்பட முடியாது என்பதால் கிழக்குத் தேர்தலில் நாம் போட்டியிடுவதில்லை என்ற தீர்மானத்தை எடுத்திருக்கின்றோம்.