Thinakkural Tamil News Paper - The Independent Voice in Tamil

The Independent Voice in Tamil
Thursday, April 03, 2008


Download latha tamil font
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
  Sri Lanka Forecast
 
 
 
 
 
 
 
HOT NEWS
Main News
கிழக்குத் தேர்தல் களத்தில் ஹக்கீம், ஹசன் அலி, பசீர்
[03 - April - 2008] [Font Size - A - A - A]
* எம்.பி.பதவியை துறந்தனர்; இன்று வேட்பு மனு

கிழக்கு மாகாணசபைத் தேர்தலில் போட்டியிடுவதற்காக ஷ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் உட்பட மூன்று எம்.பி.க்கள் தமது பதவியை நேற்று புதன்கிழமை இராஜிநாமா செய்ததுடன் இன்று வியாழக்கிழமை வேட்புமனுக்களை தாக்கல் செய்யவுள்ளனர்.

முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ஹக்கீமுடன் கட்சியின் செயலாளர் நாயகம் ஹசன் அலி, தவிசாளர் பசீர் சேகு தாவூத் ஆகியோரே இராஜிநாமா செய்திருக்கின்றனர்.

இவர்கள் மூவரும் நேற்று புதன் கிழமை பிற்பகல் பாராளுமன்ற பதில் செயலாளர் நாயகம் தம்மிக கித்துல்கொடவிடம் தமது பதவி விலகல் கடிதங்களை கையளித்தனர்.

கிழக்கு மாகாணசபைத் தேர்தலில் களமிறங்குவதற்காகவே தமது பாராளுமன்ற உறுப்பினர் பதவிகளை இராஜிநாமா செய்வதாகவும் அம்மூவரும் தெரிவித்தனர்.

ஐ.தே.க.வுடனான தேர்தல் உடன்பாட்டுக்கமைய திருகோணமலை மாவட்டத்தில் ஐக்கிய தேசியக் கட்சி தலைமை வேட்பாளராக ரவூப் ஹக்கீமும், அம்பாறை மாவட்ட தலைமை வேட்பாளராக ஹஸன் அலியும், மட்டக்களப்பு மாவட்ட தலைமை வேட்பாளராக பஸீர் சேகு தாவூத்தும் களமிறங்கவுள்ளனர்.

இன்று வியாழக்கிழமை இவர்கள் மாவட்டங்களுக்குச் சென்று வேட்பு மனுக்களை தாக்கல் செய்யவுள்ளனர்.

இதேவேளை, ரவூப் ஹக்கீமின் பாராளுமன்ற உறுப்பினர் வெற்றிடத்திற்கு கடந்த பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றியீட்டத் தவறிய எம். நவ்ஸாத் (சம்மாந்துறை) நியமிக்கப்படவுள்ளார்.

ஏனைய இரு பாராளுமன்ற உறுப்பினர் வெற்றிடங்களுக்கு எவரை நியமிப்பதென முஸ்லிம் காங்கிரஸ் மிக விரைவில் தீர்மானிக்குமென தெரிவித்த அக்கட்சியின் செயலர் ஹஸன் அலி மேலும் தெரிவித்ததாவது;

முஸ்லிம் காங்கிரஸை அழிக்க காத்திருக்கும் சக்திகளுக்கு தக்கபாடம் புகட்டவும், முஸ்லிம் முதலமைச்சர் கனவை நனவாக்கவுமே இத்தீர்மானத்தை நாம் மேற்கொண்டோம்.

முஸ்லிம் சமூகத்தின் நலன்கருதி மேற்கொள்ளப்பட்ட இத் தியாகம் அரசாங்கத்திற்கு அதிர்ச்சி வைத்தியமளித்திருக்கும். கிழக்கு மாகாண தமிழ் பேசும் மக்களுடைய அபிலாஷைகளை நிறைவேற்ற இதன்மூலம் மேலும் பலன்கிட்டியுள்ளது என்றார்.

இதேசமயம், இராஜிநாமா செய்த முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் உள்ளிட்ட பிரமுகர்கள் நேற்று ஜாவத்தை முஸ்லிம் பள்ளியில் சமய நிகழ்வில் ஈடுபட்டனர். இதில் பெரும் எண்ணிக்கையிலான கட்சி ஆதரவாளர்களும் கலந்துகொண்டனர்.

Email this page Your Opinion Print this page
 
 
 
   
 
 
   
Home - Important News - Foreign News - Sports News - Sinhala News - Articles - Editorial - DR - Cartoon - Archives - Obituaries
© 2008. All Rights Reserved. Thinakkural.com / Thinakural.com - Site By Evosof.com