இரணைமடு பிரதேசத்தில் புலிகள் இயக்கத்தின் சிறிய ரக விமானங்கள் நிறுத்தப்படும் தளமும் அதற்கான ஓடுபாதையும் அமைந்திருந்தது பற்றியும் பாதுகாப்புப் புலனாய்வுப் பிரிவினரின் தகவல்களுக்கேற்ப மேற்படி புலிகளின் முக்கிய நிலையங்கள் இரணைமடு காட்டுப் பிரதேசத்தில் அமைந்திருந்த கேந்திரப்பகுதி தொடர்ந்து விமானப்படையினரின் விமானக் கண்காணிப்புகள் மூலம் கண்டுபிடிக்கப்பட்டு தீவிர விமானத் தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டு அழிக்கப்பட்டது பற்றியும் முன்னர் அறிவிக்கப்பட்டிருந்தது.
தற்போது இவ்வாறே முல்லைத்தீவு நகரத்தை அண்டிய பிரதேசத்திலும் புலிகளின் விமானங்கள் நிறுத்தப்படும் எனச் சந்தேகிக்கப்பட்ட நிலையமும் விமான ஓடுபாதையும் அண்மையில் விமானப்படை புலனாய்வுப் பிரிவினரால் விமானக் கண்காணிப்புகள் மூலம் கண்டுபிடிக்கப்பட்டிருந்தன.
முல்லைத்தீவு பிரதான பகுதியில் அமைந்திருந்த இந்த விமான ஓடுபாதை நிலையத்தின் மீதும் தற்போது விமானப்படையினர் தீவிர விமானக்குண்டு வீச்சுகள் மேற்கொண்டு முற்றாக அழித்துள்ளனர்.
இந்த விமானக் குண்டுவீச்சு விமானப்படையின் தாக்குதல் ஜெற் விமானங்கள் மூலம் கடந்த 31 ஆம் திகதி காலை 9.45 மணிக்கு மேற்கொள்ளப்பட்டதாகவும் குறித்த கேந்திரப் பகுதி மீது விமானப்படையினர் இலக்கு வைத்துக் குறிதவறாது மேற்கொண்ட தாக்குதலில் புலிகளின் விமான ஓடுபாதை முற்றாக அழிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விமான ஓடுபாதை முல்லைத்தீவு நகரப் பகுதியின் குறித்த ஒரு இடத்திலிருந்து ஆரம்பமாகி மேற்கே 10 கிலோமீற்றர் வரையில் நீண்ட ஓடுபாதையாக அமைக்கப்பட்டிருந்ததாகவும் விமானக் குண்டு வீச்சுகள் இந்த ஓடுபாதை நெடுகத் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு முழுப்பாதையும் அழிக்கப்பட்டுள்ளது.
31 ஆம் திகதி காலை விமானக் குண்டுவீச்சு நடத்தப்பட்ட பின்னர் சேதம்பற்றிய தகவல்களை அறிவதற்காக விமானங்கள் மூலம் செய்யப்பட்ட கண்காணிப்புகளிலிருந்தும் மற்றும் விமானப்படை புலனாய்வுத் தகவல்களிலிருந்தும் முல்லைத்தீவுப் பிரதேசத்தில் இரகசியமான முறையில் அமைக்கப்பட்டிருந்த புலிகளின் இந்த இரண்டாவது விமான ஓடுபாதையும் முற்றாக அழிக்கப்பட்டுள்ளது சந்தேகத்திற்கிடமின்றித் தெரிய வந்துள்ளதாகப் படையினர் தரப்பில் இராணுவத்துறை ஊடக அறிவிப்பாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார அறிவித்துள்ளார்.
லங்காதீப:1.3.2008