இதுகாலவரை புலிகள் இயக்கத்தின் கட்டுப்பாட்டிலிருந்த பிரதேசம் எனக் கருதப்பட்ட பண்டிவிரிச்சான் பிரதேசம் முழுவதும் தற்போது அரச படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது. மன்னார் மாவட்டத்தைச் சேர்ந்த இந்த பிரதேசப் பகுதிகளில் அண்மைக்காலமாக அரச படையினருக்கும் புலிகள் இயக்கத்தினருக்குமிடையே கடுமையான மோதல்கள் நிகழ்ந்து வந்துள்ளன. இறுதியில் கடந்த 30 ஆம் திகதி மன்னார் இராணுவப் படையணியினர் பண்டிவிரிச்சான் பிரதேசத்திலிருந்து புலிகள் இயக்கப் பயங்கரவாதிகளை விரட்டியடித்த பிரதேசம் முழுவதையும் தமது கட்டுப்பாட்டுக்குக்கீழ் கொண்டு வந்திருப்பதாக இராணுவத் தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதைத் தொடர்ந்து பண்டிவிரிச்சான் பிரதேசசபை அலுவலகத்தின் கட்டடம் புனித குடும்பக் கன்னியாஸ்திரிகள் நிலையம் அரசாங்கப் பாடசாலைகள், கூட்டுறவு நிலையக் கட்டடங்கள் உட்பட பண்டிவிரிச்சான் பிரதேசத்திலுள்ள அனைத்து முக்கிய கட்டடங்களையும் இராணுவத்தினர் பொறுப்பெடுத்துள்ளனர் எனவும் தாக்குதல்களைத் தொடர்ந்து பண்டிவிரிச்சானில் புலிகளின் முகாம்கள் நிலையங்கள் அனைத்தும் அழிக்கப்பட்டதுடன் புலிகளின் பாரிய பதுங்கு குழி நிலையங்களும் அழிக்கப்பட்டுவிட்டதாகவும் இராணுவத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னர் புலிகள் இயக்கப் பயங்கரவாதிகள் கன்னியாஸ்திரிமடம் மற்றும் பாடசாலையை அண்டிய பகுதிகளையே அவர்களின் மோட்டார் ஏவுகணை நிலையமாகப் பயன்படுத்தி வந்துள்ளனர்.
இவ்வாறு மன்னார் இராணுவப் பிரிவைச் சேர்ந்த 55 ஆவது படையணியும் பீரங்கிப்பிரிவு, மோட்டார் ஏவுகணைப் பிரிவுகளுமே மேற்படி பண்டிவிரிச்சான் களமுனையில் தீவிர யுத்தத்தில் ஈடுபட்டிருந்ததாகவும் தற்போது பண்டிவிரிச்சான் பிரதேசம் 55 ஆவது படையினரின் முழுமையான கட்டுப்பாட்டுக்குக் கீழ் இருப்பதாகவும் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில், மடுமாதா தேவாலயம் படையினரின் புதிய கட்டுப்பாட்டுப் பிரதேசத்திலிருந்து 3 கிலோமீற்றர்கள் தூரத்தில் மட்டுமே இருப்பதாக படையினர் தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
லங்காதீப: 31.03.2008