பாகிஸ்தான் கிரிக்கெட் சபையின் நடத்தை விதியை மீறிய சொயிப் அக்தருக்கு 5 ஆண்டுகள் போட்டியில் விளையாட பாகிஸ்தான் கிரிக்கெட் சபை தடைவிதித்துள்ளது.
பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் அதி வேகப்பந்து வீச்சாளர் சொயிப் அக்தர். `ராவல்பிண்டி எக்ஸ்பிரஸ்' என்று அழைக்கப்படும் அக்தருக்கு சர்ச்சையில் சிக்குவது சகஜமான ஒன்று. சர்ச்சை மற்றும் காயத்தால் அவரது கிரிக்கெட் வாழ்க்கையில் பெரும் பாதிப்பு ஏற்பட்டது. கடந்த ஆண்டு 20 ஓவர் உலகக் கிண்ணப் போட்டிக்காக தென் ஆபிரிக்காவுக்கு அழைத்துச் செல்லப்பட்ட போது, போட்டி தொடங்குவதற்கு ஒரு நாள் முன்பாக சக வீரர் முகமது ஆசிப்பை தாக்கினார்.
இந்த விவகாரத்தில் அக்தருக்கு 13 போட்டியில் விளையாடத் தடையும், பெரிய தொகை அபராதமும் விதிக்கப்பட்டது. மேலும் அக்தரின் நடத்தை 2 ஆண்டுகள் கண்காணிக்கப்படும். இந்தக் காலகட்டத்தில் நடத்தை விதியை மீறினால் ஆயுள்தடையை சந்திக்க நேரிடும் என்று எச்சரிக்கப்பட்டார்.
தடை முடிந்த பின் கடந்த ஆண்டு இறுதியில் இந்தியாவில் நடந்த டெஸ்ட் மற்றும் ஒரு நாள் போட்டித் தொடரில் அக்தர் விளையாடினார். ஓரளவு நல்லபிள்ளையாக நடந்து கொண்டாலும், இந்தப் போட்டியில் அக்தரின் பந்து வீச்சு எடுபடவில்லை. பாகிஸ்தான் அணி தோல்வியை சந்தித்தது.
இந்தத் தொடர் முடிந்த பின் உடல்தகுதியுடன் இல்லை என்று கூறி அணியில் அக்தருக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டது. மேலும் கிரிக்கெட் சபை ஒப்பந்தத்திலிருந்தும் நீக்கப்பட்டார். இதை தொடர்ந்து பாகிஸ்தான் கிரிக்கெட் சபையின் கொள்கைகளை அவர் வெளிப்படையாக விமர்சித்தார். மேலும், உள்ளூர்ப் போட்டி ஒன்றில் உத்வேகத்தை கெடுக்கும் வகையில் நடந்து கொண்டதாகவும் குற்றச்சாட்டுக்குள்ளானார்.
இதையடுத்து வீரர்களின் நடத்தை விதிமுறைகளை மீறியதற்காக அவர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுப்பது உறுதியானது. பாகிஸ்தான் கிரிக்கெட் சபையின் ஒழுங்கு நடவடிக்கைக் குழுமுன் நேற்று முன்தினம் அக்தர் ஆஜராகி தனது விளக்கத்தை அளித்தார்.
அதன் பின் மாலையில் அக்தரின் தண்டனை விவரம் வெளியிடப்பட்டது. மீண்டும் மீண்டும் அக்தர் பிரச்சினையை ஏற்படுத்துவதால் அவர் மீது இப்போது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 5 ஆண்டுகள் போட்டியில் விளையாட அக்தருக்கு தடை விதிக்கப்பட்டிருப்பதாக பாகிஸ்தான் கிரிக்கெட் சபைத் தலைவர் நசிம் அஷ்ரபுல் நிருபர்களிடம் தெரிவித்தார்.
மேலும் அவர் கூறுகையில், `அக்தர் 5 ஆண்டுகள் பாகிஸ்தான் அணிக்காகவோ அல்லது பாகிஸ்தானில் எந்த ஒரு இடத்திலேயோ விளையாட முடியாது. அக்தர் எந்த வகையான போட்டியில் ஆடினாலும் பாகிஸ்தான் கிரிக்கெட்டுக்கு பாதிப்பை தான் ஏற்படுத்தினார். எனவே எந்த வகையான கிரிக்கெட் போட்டியிலும் (உள்ளூர் போட்டி உள்பட) அவர் பங்கேற்க முடியாது. அவர் மீது வைத்த நம்பிக்கையை பாகிஸ்தான் சபை இழந்து விட்டது.
இந்த நாள் அவருக்கும் எனக்கும் வருத்தமான நாள். அவர் திறமையான வீரர்.அதே சமயம் இந்திய பிரிமியர் லீக்கில் (ஐ.பி.எல்.) அவர் தாராளமாக விளையாடலாம். ஐ.பி.எல்.எங்கள் அதிகார வரம்புக்குள் வரவில்லை' என்றார்.