பெய்ஜிங்கில் நடைபெறும் ஒலிம்பிக் போட்டிகளின் தொடக்க விழாவில் அமெரிக்க ஜனாதிபதி ஜோர்ஜ் புஷ் பங்கேற்பதை தவிர்க்கும் சட்ட மசோதா அமெரிக்க மக்கள் பிரதிநிதிகள் சபையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
திபெத்தியர்கள் மீது சீனா நடத்தி வரும் அடக்கு முறைகள் மற்றும் மனித உரிமை மீறல்களுக்கு எதிராக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இந்த மசோதாவை குடியரசுக் கட்சியை சேர்ந்த கொள்கைகள் குழுவின் தலைவர் தாடிஸ் மெக்காட்டர் அறிமுகம் செய்துள்ளார். பல்வேறு உறுப்பினர்கள் இந்த மசோதாவுக்கு ஆதரவு தெரிவித்திருப்பதாக மெக்காட்டரின் உதவியாளர் கூறியுள்ளார்.
அமெரிக்க அரசு அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் ஒலிம்பிக் போட்டிகளின் தொடக்க விழாவில் பங்கேற்பதை தடுக்க வேண்டும் என்று மசோதாவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
திபெத் பிரச்சினையில் சீனாவின் நடவடிக்கைகளுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள பல்வேறு உலக நாடுகளின் தலைவர்களும் ஒலிம்பிக் தொடக்க விழாவில் ஜனாதிபதி புஷ் பங்கேற்கக் கூடாது என்று கோரிக்கை விடுத்துள்ளனர். ஆனால், ஒலிம்பிக் தொடக்க விழாவில் கலந்து கொள்ள புஷ் திட்டமிட்டுள்ளார்.