*விடிவை நோக்கி.... என்ற தலைப்பில் கடந்த சனிக்கிழமை யாழ்ப்பாண மாநகர சபை பொதுநூலகக் கேட்போர் கூடத்தில் ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதியரசர் சி.வி.விக்னேஸ்வரன் நிகழ்த்திய தந்தை எஸ்.ஜே.வி.செல்வநாயகம் நினைவுப் பேருரை
(நேற்றைய தொடர்ச்சி)
1945 ஆம் ஆண்டின் ஐக்கிய நாடுகள் சாசனம் அதன் முதலாம் உறுப்புரையின் இரண்டாம் உப உறுப்புரையில் ஐக்கிய நாடுகளின் குறிக்கோள்களை எடுத்தியம்பும் போது "சம உரித்துக்கள், மக்கட்கூட்டத்தினரின் சுய நிர்ணய உரித்துக்கள் என்ற கோட்பாட்டின் அடிப்படையில் நாடுகளுக்கிடையில் சிநேகபூர்வமான உறவுகளை ஏற்படுத்துவது" அக் குறிக்கோள்களுள் ஒன்று என்று கூறப்பட்டது.
அதேபோல், 55 ஆவது உறுப்புரையிலும் இந்தச் சொற்றொடர் பாவிக்கப்பட்டது. அதாவது, மனித உரிமைகளைப் பேணிப் பாதுகாத்து, அடிப்படைச் சுதந்திரங்களை இன, மத,மொழி, பால் சார்ந்த வேற்றுமைகளுக்கு இடமளிக்காது வலியுறுத்தி, சம உரித்துக்கள், மக்கட் கூட்டத்தினரின் சுய நிர்ணய உரித்துக்கள் போன்றவற்றின் அடிப்படையில் நாடுகளுள் சமாதானத்தையும் சிநேக பூர்வமான உறவுகளையும் ஏற்படுத்தி, ஸ்திரமான, நலமான சூழலை வருவிக்க ஆவன செய்ய வேண்டும் என்று கூறப்பட்டது.
அது மட்டுமல்ல, 73 ஆவது உறுப்புரையில் ஐக்கிய நாடுகள் சபையைச் சேர்ந்த நாடுகளின் மீது ஒரு கடப்பாடு விதிக்கப்பட்டது. அதாவது, சுயாட்சியை வளரச்செய்யவும் அவ் வந்த நாட்டின் வெவ்வேறு மக்கட் கூட்டத்தினரின் அரசியல் அபிலாஷைகளைக் கருத்தில் எடுத்து அவர்களுக்கு ஆவன செய்யவும் அவர்களின் சுதந்திரமான அரசியல் நிறுவனங்களை முன்னேற்றி வழிநடத்தவும் ஆவன செய்ய வேண்டும் என்று இந்தக் கடப்பாடு அமைந்திருந்தது. ஆனால், அம்மக்கட்கூட்டத்தினரின் அரசியல் அபிலாஷைகளைக் கருத்தில் எடுக்குமாறே கூறப்பட்டிருந்தது. கருத்தில் எடுத்துள்ளோம் என்று கூறிவிட்டுக் கழுத்தை அறுப்பது பல நாடுகளின் அரசாங்கங்களுக்குக் கைவந்த கலையாகிவிட்டது. அண்மைக் காலங்களில், உண்மையில் ஒரு வலுவற்ற அல்லது பிழையான சட்டம் கூட ஒரு மனிதாபிமானமுள்ள அரசியல் நிர்வாகியின் கையில் மக்களுக்கு நன்மையைக் கொடுக்க வல்லது. வலுவுள்ள அல்லது முறையான நற்சட்டங்கள் கூட ஒரு துவேஷமனப்பான்மை கொண்ட அரசியல் நிர்வாகியின் கையில் மக்களுக்குத் தீமையை விளைவிக்கக் கூடும் என்பதை நாங்கள் புரிந்து கொள்ள வேண்டும். இன்று 13 ஆம் 16 ஆம் அரசியல் யாப்புத் திருத்தங்களுக்குப் பிறகு தமிழ் மொழிக்குப் போதிய உரித்துக்கள், சலுகைகள் கொடுக்கப்பட்டுள்ளன. ஆனால், அவை அரசியல் யாப்பில் அச்சில் உள்ளனவே தவிர அரச நிர்வாகியின் ஆணையில் காணப்படவில்லை. பிரிவினை எண்ணங்கள் ஏற்படுவதற்கு மூல காரணமே இந்தத் துவேஷ மனப்பான்மை தான் என்று கூறினால் அது மிகையாகாது.
சட்டம் இருந்தும் அது எம்மைச் சட்டை பண்ணவில்லையானால் சார்ந்திருந்து எதைச் சாதிக்கப் போகின்றோம் என்ற சந்தேகம் மனதில் எழுவதால் தான் பிரிவினை எண்ணம் வெறியாக மாறுகிறது மக்கள் உள்ளங்களில்.
சுயநிர்ணய உரித்தானது மிகத் தெளிவாக ஐக்கிய நாடுகள் ஆவணங்களில் இடம்பெற சில காலமெடுத்தது. அங்கத்துவ நாடுகளில் வாழ் மக்கட்பிரிவினருக்கு அத்தகைய சுயநிர்ணய உரித்து இருப்பதாக 1960 ஆம் ஆண்டில் வெளிவந்த குடியேற்ற நிலப்பகுதிகள், மக்கட்கூட்டங்களுக்கான சுதந்திரம் வழங்கும் ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் 1514 ஆவது தீர்மானத்தின் இரண்டாவது விளம்பலுரை அறிவித்தது. (Declaration 2 of Resolution 1514 of the UN General Assembly, Declaration on the Granting of independence to colonial Territories and peoples in 1960)
அதன் படி "சகல மக்களுக்கும் சுயநிர்ணய உரித்து ஏற்புடையதாகும்; அந்த உரித்தின் அடிப்படையில் அவர்களுக்குத் தங்கள் அரசியல் நிலை அல்லது அந்தஸ்தை நிர்ணயிக்கவும் தமது பொருளாதார, சமூக, கலாசார மேம்பாட்டில் ஈடுபடவும் உரிமையுண்டு" எனப்பட்டது.
இந்த கால கட்டத்தில்தான் குடியேற்ற நாடுகளாய் இருந்த பல நாடுகள் குடியேறிய நாடுகளிடம் இருந்து சுதந்திரம் பெறத் தொடங்கியிருந்தன. இந்தியாவும் இலங்கையும் இதற்கு முன்னரே அந்தப் பேற்றினைப் பெற்றிருந்தன.
1966 ஆம் ஆண்டில் ஐக்கிய நாடுகள் சபையால் சர்வதேச ரீதியிலான கட்டுப்படுத்தும் ஒப்பந்தங்கள் இரண்டு ஏற்கப்பட்டன. பொருளாதார, சமூக, கலாசார உரித்துக்கள் பற்றிய சர்வதேச ஒப்பந்தம் (ICESCR) ஒன்று, அடுத்தது குடியியல், அரசியல் உரித்துக்கள் பற்றிய சர்வதேச ஒப்பந்தம் (ICCPR), இவை 1976 ஆம் ஆண்டில் இருந்து நடைமுறைக்கு வந்தன. இவை இரண்டினதும் முதலாவது உறுப்புரை முன்னர் குறிப்பிட்ட 1514 ஐக்கிய நாடுகள் கூட்டத் தீர்மானத்தின் 2 ஆவது விளம்பலுரையின் உருப்படிவங்களே. இன்று கூட ஐ.சி.சி.பி.ஆர்.ஒப்பந்தங்களின் சகல உறுப்புரைகளுக்கும் இலங்கை கட்டுப்பட்டுள்ளதா என்பது சட்டச் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.
எனினும் மக்கட்கூட்டமென்பது குடியேற்ற நாடுகளையே குறிப்பிட்டதாகவும் மக்கட்கூட்டத்தினருக்குச் சுயநிர்ணய உரித்து இருப்பதாகக் கூறும் போது இறைமை கொண்ட நாடொன்றின் மக்களின் ஒரு சாராரை அவ்வுரித்துக்கு உரியவர்களாகச் சட்டங் கருதவில்லை என்றும் வியாக்கினம் கொடுத்தது இந்தியா. காஷ்மீரை நினைத்து அப்படிக் கூறியிருக்க வேண்டும். ஆனால் இவ்வியாக்கியானத்தை நெதர்லாந்து,பிரான்ஸ், ஜேர்மனி போன்ற நாடுகள் மிகக் கடுமையாக எதிர்த்து விமர்சித்தன. இன்றும் இந்தியாவிற்கு இதே பிரச்சினை இருந்து வருகிறது. இலங்கையில் வடகிழக்குச் சுயநிர்ணய சுதந்திரம் என்றால் இந்தியாவில் காஷ்மீருக்கும் போதிய சுதந்திரம் அளிக்க வேண்டும் என்ற நிர்ப்பந்தம் ஏற்படலாம் என்பதால் வியாக்கியானங்களை விதண்டைகளாக்கியுள்ளனர். இத்தகையவர்களுக்கு சுயநிர்ணய உரித்து இருப்பதாகக் கூறவில்லை.
ஆனால், இந்த இந்திய வியாக்கியானம் ஓரளவிற்கு மற்றைய நாடுகளால் காலக்கிரமத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்டதென்றே கூறவேண்டும். ஏனென்றால் 1992 ஆம் ஆண்டு டிசெம்பர் 18 ஆம் திகதி ஐக்கிய நாடுகளால் ஏற்கப்பட்ட தேசிய அல்லது இன,மத, மொழிசார் சிறுபான்மையினர்களின் உரித்துக்கள் பற்றிய விளம்பலில் (Declaration on the Rights of Persons belonging to National or Ethnic, Religious and linguistic Minorities adopted by the UN General Assembly on 18th December 1992 அதன் 2 ஆம் உறுப்புரையின் முதலாவது உப உறுப்புரை பின்வருமாறு கூறிற்று.
"எவ்வித பாகுபாடும் இன்றி வெளியார் தலையீடும் இன்றி சுதந்திரமாகத் தமது கலாசாரத்தை முன்னெடுக்கவும் தமது மதத்தில் நின்று அதைப் பின்பற்றவும் தனித்தும் பகிரங்கமாகவும் தமது மொழியைப் பாவிக்கவும் தேசிய அல்லது இன,மத,மொழி சார் சிறுபான்மையினருக்கு உரித்துண்டு"
இதன் அடிப்படையில் முன்னைய சர்வதேச உடன்பாடுகள் இரண்டிலும் "மக்கள் கூட்டம்" என்ற பதம் ஒரு இறைமையுள்ள நாட்டின் சிறுபான்மையினரைக் குறிக்கவில்லை என்று கொள்ள இடமளித்தது. மக்கள் கூட்டத்திற்குக் கொடுக்கப்பட்ட சுய நிர்ணய உரித்து ஒரு இறைமையுள்ள நாட்டின் சிறுபான்மையினருக்கு வழங்கப்படவில்லை என்றே கொள்ளப்பட்டது. ஆகவே, ஒரு நாட்டின் சிறுபான்மையினர் மக்கள் கூட்டம் என்ற சொற்றொடருக்குப் பாத்திரவாதிகள் ஆக வேண்டுமாயின் வேறு சில தகைமைகளை அவர்கள் பெற வேண்டியிருந்தது. உதாரணமாக, இரு இனங்களை உள்ளடக்கி ஒரு நாடு உருவாக்கப்பட்டு அதன் காரணத்தால் ஒரு இனம் சிறுபான்மையினராக மாறும் ஒரு சந்தர்ப்பம் எழுந்திருந்தால் அந்தச் சிறுபான்மையினரை வெறும் சிறுபான்மையினர் என்ற வரையறைக்குள் இருந்து வெளிக் கொண்டு வந்து "மக்கள் கூட்டம்" என்ற சொற்றொடரின் அர்த்தத்திற்குப் பாத்திரமாக்கலாம் எனப்பட்டது.
இலங்கையைப் பொறுத்தவரையில் இந்த வாதமே தமிழர்களுக்குப் பொருந்துவதாக அமைகின்றது. அதாவது, காலாதிகாலமாக புவியியல், நடை, உடை பாவனை, மதம், மொழி, கலாசாரம் ஆகிய பலவற்றினால் வேறுபட்டு நின்ற சமூகங்கள் இரண்டு, தத்தமது மன்னர்களால் ஆளப்பட்டு வந்த சமூகங்கள் இரண்டு 1833 ஆம் ஆண்டில் நிர்வாகக் காரணங்களுக்காக ஒரு குடைக்கீழ் ஆங்கிலேயரால் கொண்டுவரப்பட்டு அதன் பின் சுதந்திரம் கிடைத்த பின்னர் ஜனநாயக அடிப்படையில் என்ற போர்வையின் கீழ் தமிழ் பேசும் மக்களும் அவர்கள் வாழ் பிரதேசங்களும் சிறுபான்மையோர் என்ற முத்திரை குத்தப்பட்டு பாகுபாட்டுக்கு இலக்காக்கப்பட்டனர். உண்மையில் வடக்கு, கிழக்கு மக்கள் சிறுபான்மையினர் அல்லர். அவர்களின் பாரம்பரிய இடங்களில் அவர்கள் பெரும்பான்மையினர். இதை முதன் முதலில் அரசியல் அரங்கில் பகிரங்கமாக வெளியிட்டவர்களுந் சிங்கள அரசியல் தலைவர்களே.
சேர் பொன்னம்பலம் அருணாச்சலத்திற்கு அன்றைய சிங்கள அரசியல் தலைவர்களான சேர்.ஜேம்ஸ் பீரிசும், ஈ.ஜே. சமரவிக்கிரமவும் ஒரு உறுதி மொழி அளித்திருந்தனர். அதாவது, கொழும்பு நகரத்தில் தமிழருக்கென ஒரு ஆசனம் ஒதுக்கி வைக்கப்படும் என்று அவர்கள் உறுதி அளித்திருந்தார்கள். இதன் பொருட்டு இனரீதியான தேர்தலுக்குப் பதில் இட ரீதியான பிராந்தியத் தேர்தல்களை நடத்தத் தமிழ்த் தலைவர்கள் சம்மதிக்க ஆவன செய்ய வேண்டும் என்று வேண்டுகோள் விடுக்கப்பட்டது. அந்த உறுதி மொழியின் அடிப்படையில் யாழ். தமிழர்களின் பிரதிநிதியாக இருந்த அ.சபாபதி அவர்களுடன் பேசி சம்மதம் பெறப்பட்டது. காரியம் முடிந்தவுடன் சேர் பொன் அருணாச்சலத்திற்குக் கொடுத்த வாக்குறுதி காற்றில் பறக்க விடப்பட்டது. வாக்குறுதி கொடுத்த காலத்தில் தாம் வகித்த பதவிகள் வேறு இலங்கையரின் ஏகோபித்த சிபாரிசுகளை ஆங்கிலேயர் ஏற்றுக்கொண்ட பின் தமது பதவிகள் வேறு என்று கூறி தாம் வகிக்கும் முன்னைய வாக்குறுதிகளை மதிக்கத் தவறினார்கள் இந்தச் சிங்கள அரசியல்த் தலைவர்கள். ஆனால், அதன் பின் அவர்கள் கூறியவை தான் இங்கு கவனிக்கப்பாலன. தமிழர்களுக்கு கொழும்பில் விஷேட சலுகைகள் எவற்றையும் அளிக்க வேண்டிய அவசியமில்லை என்றும் அவர்களும் சிங்களவர் போல் தமது பாரம்பரிய இடங்களில் பெரும்பான்மையினரே என்றும், தமிழர்களைச் சிறுபான்மையினராகக் கணிக்க வேண்டிய அவசியமில்லை என்றும் கூறினர். இது பற்றி சாவகச்சேரி இந்துக்கல்லூரியின் முன்னைய அதிபர் எம்.வைத்திலிங்கம் அவர்கள் ""The Life of Sir Ponnambalam Ramanathan' என்ற தமது நூலின் இரண்டாம் பாகத்தில் பக்கம் 534 இல் கூறியதை ஆங்கிலத்தில் அப்படியே உங்களுக்கு அறியத் தருகின்றேன்.
""In saying so sinhalese leaders gave utterance to a solemn and stupendous truth, long since forgotten, that the tamils, far from being a minority, have from remote ages been and continue to be a full blooded majority in their ancient homelands, where their own kings and potentates had held unquestioned sway. It was when the evilgenius of a foreign conqueror subdued the whole Island with its separate and sovereign peoples, pulled down age old national frontiers and for no other reason than his own "supervisory convenience' made the Island a single political and administrative unite, that the Tamil became a minority in the conglomerate mass of the Island's population'.
தமிழ்ப்பேசும் மக்கள் தாங்கள் பாரம்பரியமாக வாழ்ந்த பிரதேசங்களில் பெரும்பான்மையினராகவே தொன்றுதொட்டு இருந்து வந்துள்ளனர் என்ற அடிப்படை உண்மையை சிங்களத் தலைவர்கள் அன்றே கூறியிருந்தனர். ஆகவே முன்னர் தனித்திருந்த மக்கட்கூட்டம் பின்னர் இன்னொரு மக்கட்கூட்டத்துடன் சேர்க்கப்பட்டு சிறுபான்மையினர் ஆக்கப்பட்டு, பின்னர் பாகுபாட்டுக்கும் வேறுபாட்டுக்கும் உள்ளாக்கப்பட்டதால் அவர்கள் பழைய நிலைக்குத் திரும்ப சட்டப்படி "மக்கட்கூட்ட"மென்ற விளக்கத்திற்கு, அர்த்தத்திற்கு ஆளாக உரித்துடையவர்கள். இலங்கைத் தமிழர்களும் சட்டப்படி மக்கட் கூட்டம் என்பதை வெளியுலகத்திற்குத் தெரியப்படுத்த வேண்டிய கடமைப்பாடு எமக்குண்டு. சர்வதேச நோக்கிற்கு இது முக்கியமானதொன்று. ஓரளவிற்கு இந்த உண்மையை வெளிக்கொண்டு வந்த படியால்த்தான் ஹிலாரி கிளிங்டன் அண்மையில் வன்முறையில் ஈடுபடும் எல்லோருமே பயங்கரவாதிகள் என்று முத்திரை குத்தப்பட முடியாது என்ற உண்மையை எடுத்துரைத்தார் என்று நம்புகின்றேன்.
ஆகவே, முன்னர் குறிப்பிட்ட 1992 ஆம் ஆண்டின் ஐக்கிய நாடுகள் விளம்பல் ஆவண அடிப்படையில் சர்வதேசச் சட்டத்தின் கீழ் ஒரு நாட்டின் சிறுபான்மையினர் சுயநிர்ணய உரிமைக்கு உரித்துக் கொண்டாட முடியாது இருப்பதாகக் கணிக்க வேண்டியிருப்பினும் ஒரு நாட்டின் சிறுபான்மையினர் "மக்கட்கூட்டம்" என்ற விபரிப்புக்கு உள்ளடங்கக் கூடிய இயல்புகளைப் பெற்றிருந்தால் அச் சிறுபான்மையினர் தம்மை வேற்றுமைப்படுத்திக் காட்டி சுய நிர்ணய உரித்துக்குத் தாம் உரித்துடையவர்கள் என்று வாதாட முடியும்.
ஆகவே சர்வதேச சட்டத்தின் கீழ் ஒரு நாட்டின் சிறுபான்மையினர் வெவ்வேறு நிலைகளில், தரங்களில் இருந்து வருவதை அவதானிக்கலாம். இறைமையுடைய நாட்டின் சாதாரண சிறுபான்மையினருக்கு மனித உரிமைகள் வழங்கப்பட வேண்டும். இறைமையுடைய நாட்டின் விசேட சிறுபான்மையினர் "மக்கட் கூட்டம்" என்ற விபரிப்புக்கு அருகதையுடையவர்கள் எனில் அவர்களுக்குச் சுயநிர்ணய உரித்து வழங்கப்பட வேண்டும். அவ்வாறு மக்கட் கூட்டமாகக் கணிக்கப்படக் கூடியவர்களுக்கு சுயநிர்ணய உரித்து வழங்கப்படாமல் பெருத்த வேற்றுமைக்கும் அல்லல்களுக்கும் அவலங்களுக்கும் அழிவுகளுக்கும் ஆளாக்கப்பட்டால் விசேட சூழல்களாக அவற்றைக் கணித்து அதன் பொருட்டு பிரிந்து செல்லும் உரித்தை அவர்கள் பெறக்கூடும் என்பதே இன்றைய சர்வதேச சட்டத்தின் போக்காக இருக்கின்றது.
(தொடரும்)