வ.திருநாவுக்கரசு
பல்லினங்கள் மற்றும் பல்மதங்கள் உள்ள இந்த நாட்டிற்குப் பொருத்தமான பல்முக ஜனநாயகம் எனும் சீரிய கோட்பாட்டினைப் புறந்தள்ளிவிட்டு, கொடிய யுத்தம் ஒன்றினை நடத்திக் கொண்டு இங்கு ஜனநாயகம் நிலைத்திருக்கின்றதென நிரூபிக்கப்பாடுபடும் நாடகம்தான் எதிர்வரும் 10 ஆம் திகதி நடத்தப்படவுள்ள கிழக்கு மாகாண சபைத் தேர்தல் ஆகும். 18 வருடங்களாக இணைக்கப்பட்டிருந்த வடகிழக்கிலிருந்து 2006 ஒக்டோபர் மாதம் நீதித்துறையூடாக கிழக்கு மாகாணம் பிரிக்கப்பட்ட பின் முதன்முறையாக நடைபெறவுள்ள இத்தேர்தல் ஒரு விசமத்தனமானது அல்லது மோசடியானது எனலாம். ஏனென்றால், வடக்கு கிழக்கு தமிழ், முஸ்லிம் மக்களின் அல்லது தமிழ் பேசும் மக்களின் தாயகம் எனும் நிலைப்பாடு மகிந்த ராஜபக்ஷ அரசாங்கத்தினால் பறிக்கப்படுகிறது. மற்றும் காலங்காலமாக ஒற்றுமையுடனும் அந்நியோன்யமாகவும் வாழ்ந்துவந்த தமிழ், முஸ்லிம் மக்களுக்கிடையில் குறிப்பிடத்தக்களவு விரிசல்களை உண்டாக்கி பிரித்தாளும் கைங்கரியத்தையே அரசாங்கம் கையாண்டு வருகிறது. ஹிஸ்புல்லாவுக்கும் பிள்ளையானுக்கும் இடையிலான முதலமைச்சர் ப.வி.க்கான போட்டி அதற்கு வலுவூட்டுகிறது. எனவே, இத்தேர்தல் உண்மையான நேர்மையான ஜனநாயக சக்திகளால் பகிஷ்கரிக்கப்பட வேண்டியதாகும்.
தேர்தலுக்கு முன் யுத்தகளமுனை வெற்றிக்கு பாடுபடும் அரசாங்கம்
தேர்தலுக்கு முன்னதாக வடமுனையில் எந்தவொரு களத்திலாயினும் வெற்றியீட்டியாக வேண்டுமென அரசாங்கம் கணக்குப் போட்டிருந்தது. அது பலிக்கவில்லையென்பதை முகமாலைச் சமர் மிகத் தெளிவாகக் காட்டியுள்ளது. மாறாக, அதே முகமாலையில் 2006 ஒக்டோபர் மாதம் சந்தித்த பின்னடைவிலும் பார்க்க அதிகளவு இக்கட்டான நிலைக்கு அரசாங்கம் தள்ளப்பட்டுள்ளது. எவ்வாறாயினும் 23 ஆம் திகதி தாம் முகமாலையில் சந்தித்தது ஒரு படுதோல்வி (debacle) அல்ல என இராணுவத் தளபதி லெப்.ஜெனரல் சரத் பொன்சேக்கா கூறியுள்ளார். அத்தோடு, வடக்கைக் கைப்பற்றும் தமது திட்டத்திற்கு அண்மைய முகமாலை `பின்னடைவு' தடையாயிருக்கப் போவதில்லையெனவும் அவர் அடித்துக் கூறியுள்ளார். பயங்கரவாதம் பூண்டோடு அழிக்கப்படும் எனும் அரசாங்கத்தின் திட்டத்தில் எள்ளளவும் மாற்றமில்லை என ஜனாதிபதி ராஜபக்ஷ அடிக்கடி பிரகடனம் செய்துவருவதைக் காண்கிறோம். இவ்வாறாக, தென்னிலங்கை மக்களைத் திசை திருப்புவதற்காக அரச எந்திரம் முழுவதுமே யுத்த வலைக்குள் மாட்டப்பட்டிருப்பதாகவே கொள்ள வேண்டியுள்ளது. தற்போதைய பலவீனப்பட்ட நிலையில் மடு தேவாலய வளாகத்தைக் "கைப்பற்றி" விட்டதாக அரசாங்கம் பறை சாற்றுகிறதென்றால் தென்னிலங்கை மக்கள் மத்தியில் வெகுஇலகுவாக ஏமாற்று வித்தை கற்பிக்க முடியுமென அரசாங்கம் எண்ணுவதையே அது காட்டுகிறது.
யுத்தமுனை விளைவுகள் தொடர்பாக அரசாங்கம் தொடர்ச்சியாகத் தப்புக் கணக்குப் போட்டு வருகிறதே தவிர, தவறான கருத்துக்களையும் உண்மைக்குப் புறம்பான தரவுகளையும் வெளிப்படுத்தி வருகிறதே தவிர கடந்த கால அனுபவங்களிலிருந்து எதுவித படிப்பினைகளையும் பெற்றுக்கொள்ள மறுத்து வருவது கண்கூடு. இன்று புலிகளை இராணுவ ரீதியில் முற்றாகத் தோற்கடிக்க வேண்டும், தோற்கடிக்க முடியும் என்ற நப்பாசையில் அரசாங்கம் குறிப்பாக தமிழ் மக்களுக்கு பாரிய அழிவுகளையும் அவலங்களையும் ஏற்படுத்திக் கொண்டிருக்கும் அதேவேளை, பொதுவாக அனைத்து மக்களினதும் தலைவிதியோடு விளையாடிக் கொண்டிருக்கின்றது என்பது மறந்துவிட முடியாதது. நாடு முழுவதும் மரண ஓலங்கள் ஓயாது ஒலித்துக்கொண்டிருப்பதை மக்கள் ஏற்றுக்கொண்டிருக்கப்போகிறார்களா? அது மட்டுமல்லாமல், உணவுத் தட்டுப்பாடு, பணவீக்கம், பாரிய ஊழல்கள் போன்ற பிரச்சினைகள் காரணமாக ஏற்பட்டுவரும் பசி, பட்டினி போன்ற விபரீதங்களை ஏற்றுக்கொள்ளப் போகின்றார்களா?
கிழக்கின் தேர்தலுக்கு ஐ.தே.க. துணைபோகும் விதம்
கிழக்கில் நடைபெறவுள்ள ஜனநாயக கண்காட்சிக்கு பிரதான எதிர்க்கட்சியாகிய ஐக்கிய தேசியக் கட்சி மிக விசித்திரமான முறையில் துணைபோய்க் கொண்டிருக்கின்றது. அதற்காக அக்கட்சி ஷ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் முதுகில் சவாரி செய்துவருகிறது. மறுபுறத்தில் அரசாங்கத்தில் அங்கம்வகிக்கும் 18 முஸ்லிம் அமைச்சர்களையும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி (ஐ.ம.சு.மு.) பகடைக் காய்களாக பாவித்து வருகிறது. தமிழ்,முஸ்லிம் தலைமைகள் ஒற்றுமைப்பட்டு சிங்கள பேரினவாதத்தின் அடக்குமுறைகளுக்கும் குறிப்பாக கிழக்கில் ஆட்சியாளரால் நடாத்தப்பட்டுவரும் அடாவடித்தனங்களுக்கும் அபகரிப்புகளுக்கும் வெற்றிகரமாக முகம் கொடுக்க முடியுமென பலகாலமாக வலியுறுத்தியுள்ளோம்.
சாய்ந்தமருதில் அண்மையில் இடம்பெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டமொன்றில் அமைச்சர் பேரியல் அஷ்ரப் முஸ்லிம், தமிழ் மக்கள் பிரிந்து வாழ முடியாத சூழலையே கிழக்கின் பிரதேச வாழ்விட நிலைமைகள் கொண்டுள்ளன எனக் குறிப்பிட்டிருந்தார்.
அதனை யாரும் மறுப்பதற்கில்லை. ஆனால், தமிழர்களும் , முஸ்லிம்களும் அரசுக்கு நிபந்தனையற்ற ஆதரவளித்து ஆலவட்டம் பிடித்து அடி பணிந்து வாழ்வதா? அல்லது தமிழர்களும் முஸ்லிம்களும் இறுகக் கைகோர்த்து கிழக்கில் ஆட்சியாளர் நடத்திவரும் ஆதிக்க ரீதியிலான அபகரிப்புகளுக்கும் பேரினவாத அடிப்படையிலான சிங்களமயமாக்கல் நடவடிக்கைகளுக்கும் முகங்கொடுத்து மக்களின் பொதுநலன் காப்பதா? என்பதே முக்கியமான வினாக்களாகும்.
வெற்றி நிச்சயம் என்கிறார் ஹக்கீம்
ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையில் போட்டியிடும் ஷ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் தமது வெற்றி நிச்சயம் எனப்பிரசாரம் செய்து வருகிறார். மு.கா.குறுகிய கால அரசியல் நன்மையை அடைந்து விடுவதற்கு முனைவதை விட நீண்டகாலக் கண்ணோட்டத்தில் காய்கள் நகர்த்துவதுதான் அரசியல் சாணக்கியமாகும். பயங்கரவாதத்தை முடிவுக்குக் கொண்டு வர வேண்டும் என்பதில் தமக்கு முரண்பாடில்லை. ஆனால், அது இராணுவ நிகழ்ச்சி நிரலின் படி அன்றி அரசியல்மயப்படுத்தப்பட்ட யுத்தமாய் நடத்தப்படுவதையே எதிர்க்கிறோம் என்கிறார். அண்மையில் ஊடகவியலாளர் மத்தியில் உரையாற்றியவராகிய ஐ.தே.க.பேச்சாளர் லக்ஷ்மன் கிரியெல்ல யுத்தம் சரியான முறையில் நடத்தப்படவில்லை ஆகையால் பாதுகாப்புச் செயலாளர் கோதாபய ராஜபக்ஷவை அகற்றி விட்டு முன்னாள் மூத்த இராணுவ அதிகாரியான ஜானக பெரேராவை நியமிக்க வேண்டுமென வற்புறுத்தி வந்தவர் ஐ.தே.க.தலைவர் ரணில் விக்கிரமசிங்க. எனவே அடுத்து ஐ.தே.க.பதவிக்கு வந்தாலும் இனப்பிரச்சினைக்கு உருப்படியான அரசியல் காணப்பட்டு யுத்தம் கடந்த காலச்சம்பவமாகி விடும் என்பதற்கு உத்தரவாதம் இல்லை. எனவே, ஷ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியென்றாலும் சரி, ஐக்கிய தேசியக் கட்சி என்றாலும் சரி என்றும் போலவே பேரினவாத சக்திகளுக்கு அடி பணிந்து செயற்படும் நிலை நீங்கிவிடாது. சிறுபான்மை இனங்களுக்கு இன்றுள்ள பாரிய அச்சுறுத்தல் அரச பயங்கரவாதம் என்பதே மு.கா.வின் நிலைப்பாடென தலைவர் ரவூப் ஹக்கீம் அண்மையில் கிண்ணியாவில் நடைபெற்ற கருத்தரங்கு ஒன்றில் கூறியிருந்தார். அவர் கூறியிருந்தது உலகறிந்த உண்மையாகும். ஐ.தே.க. ஆட்சிக் காலங்களிலும் அரச பயங்கரவாதம் தலைவிரித்தாடியதை யாரும் மறந்து விட முடியாது. ஆக மாறி மாறி ஆட்சிக்கு வரும் ஐ.தே.க.வும் ஷ்ரீ.ல.சு.கா.வும் ஒரு குட்டையில் ஊறிய இரு மட்டைகள் என்பதை யாரும் மறந்து விட முடியாது. தொடர்ந்தும் இணைக்கப்பட்டிருக்கும் வடக்கும் கிழக்கும் தீர்வல்ல பிரிந்த கிழக்கும் தீர்வல்ல என்ற அடிப்படையிலேயே எமது கொள்கைகளை வகுத்து வருகின்றோம் என ஹக்கீம் மேலும் கூறியுள்ளார்.
வடக்கு, கிழக்கு இணைக்கப்பட வேண்டியதும் தமிழ், முஸ்லிம் மக்கள் ஒன்றிணைந்து செயற்பட வேண்டியதும், அது மட்டுமல்லாமல் அனைத்து முற்போக்கு சக்திகளுடனும் கைகோர்த்துச் செயற்படுவதுமே என்றும் நன்மையளிக்கக் கூடியதாயிருக்கும். இன்று கிழக்கு மாகாண சபைத் தேர்தல் நடைபெறவுள்ள சந்தர்ப்பத்தில் நிச்சயமாக ஆளும் ஐ.ம.சு.மு. தோற்கடிக்கப்பட வேண்டும் என்ற எண்ணம் நிலவுவதை நாம் காண்கின்றோம். அவ்வளவு தூரம் அட்டூழியங்களும் அராஜக நிலைமைகளும் மேலோங்கியுள்ளன என்பதே அதற்கான காரணமாகக் காணப்படுகின்றது.
ஒன்றை மட்டும் நாம் ஆணித்தரமாகக் கூறி வைக்க வேண்டும். அதாவது ஜனநாயகம் நாட்டில் நிலை நாட்டப்பட்டிருக்கின்றது என தம்பட்டம் அடித்து தேர்தல் நடத்துவதாலோ அதற்கு யாரும் துணை போவதனாலோ நாட்டுக்கு ஒரு வித பலனும் ஏற்படப் போவதில்லை. ஜனநாயகம் தழைத்தோங்க வேண்டுமென்றால் யுத்தம் என்ற பேச்சுக்கே இடம் இருக்க முடியாது. ஐ.தே.க.வும் ஷ்ரீ.ல.சு.க.வும் இனப் பிரச்சினைக்கு யுத்தம் மூலம் தீர்வு காணப்புறப்பட்டுக் கொடுத்த விலை போதும். நாட்டுக்கு சர்வதேச அரங்கில் கிடைத்த அபகீர்த்தியும் போதும். இத்தனைக்கும் பின்னர் நாட்டில் ஜனநாயகம் நிலவுகின்றது என்று சர்வதேச சமூகத்திற்குக் காட்ட முனைந்து தேர்தலை நடத்துவது அர்த்தமற்றது. வெளிநாடுகளுக்கு கையேந்திச் செல்லும் சில சிரேஷ்ட அமைச்சர்கள் கிழக்கு மீட்கப்பட்டுள்ளது. உள்ளூராட்சி தேர்தல்கள் மட்டக்களப்பு மாவட்டத்தில் நடத்தப்பட்டுவிட்டன. கிழக்கு மாகாண சபை தேர்தல் விரைவில் நடத்தப்படவுள்ளது. எமக்கு உதவுங்கள் என பரிதாபமாக மண்டியிட்டு வருகின்றனர்.
ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ மிக ஆழமாகச் சிந்தித்து யுத்தம் ஒருபோதும் தீர்வைக் கொண்டு வரப்போவதில்லை. நாடு அழிவுக்கு மேல் அழிவைச் சந்திப்பதை நிறுத்த வேண்டும் என்ற நிலைக்கு வருவாரா? அப்படியென்றால் அவர் சிங்கள- பௌத்த சிந்தனையிலிருந்து விடுபட்டு பன்முக ஜனநாயக வழிமுறையைக் கடைப்பிடித்து குறிப்பாக சிறுபான்மை சமூகங்களை நாட்டின் ஈடேற்றத்திற்கான பங்குதாரர்களாக அரவணைக்க வேண்டும். அதைவிட இலகுவான பாதை கிடையாது.