நாட்டில் அரிசித் தட்டுப்பாடு இன்னமும் நீங்கிவிடவில்லை. அரசாங்கம் அரிசிக்கு உத்தரவாத விலையை பிரகடனப்படுத்திய போதிலும் சந்தைக்குத் தேவையான அரிசி வந்தடைந்ததாகத் தெரியவில்லை. வர்த்தக நுகர்வோர் விவகார அமைச்சர் உத்தரவாத விலையை மாத்திரம் முன்னிலைப்படுத்திப் பேசிக் கொண்டிருக்கின்றார். ஆனால், போதுமான அளவு அரிசி கிடைப்பதை அவரால் இன்னமும் உத்தரவாதப்படுத்த முடியாதுள்ளது. ஊடகங்களில் அமைச்சர்கள் அரசித் தட்டுப்பாடு நீங்கிவிட்டதாகவும் எதிர்க்கட்சியினர், இல்லாத தட்டுப்பாட்டைக் காட்ட முனைவதாகத் தெரிவிக்கின்றனர். ஆனால், மொத்த வியாபாரிகளோ நெல் ஆலைகளிலிருந்து உத்தரவாத விலைக்கு இன்னமும் அரிசி கிடைக்கவில்லையெனவும் நெல்லுக்கு உத்தரவாத விலையை நிர்ணயிப்பதில் காணப்படும் இழுபறி நிலை காரணமாகவே நெல் ஆலைகளிலிருந்து அரிசி வருவது தடைப்பட்டுக் கொண்டிருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்த நிலையில் அரிசி உடனடியாக சந்தைக்கு வருவதில் மேலும் தாமதப்படுமானால், கூடுதல் விலைக்கு கறுப்புச் சந்தையில் அரிசியை வாங்க வேண்டிய நிலை பொது மக்களுக்கு ஏற்படலாம்.
இன்னுமொரு விடயத்தை இங்கு சுட்டிக்காட்ட வேண்டியுள்ளது. கடந்த இரண்டு, மூன்று மாதங்களுக்கு முன்னர் அரிசியின் சில்லறை விலை 30,31 ரூபாவாகவே இருந்தது. அப்போது உத்தரவாத விலை காணப்படவில்லை. அதனையடுத்து அரசு வெளிநாட்டிலிருந்து அரிசி இறக்குமதியை நிறுத்தியது. இதனால், சந்தையில் உள்ளூர் அரிசியின் தேவை அதிகரித்தது. இதனால், படிப்படியாக அரிசியின் விலை உள்ளூர் சந்தையில் அதிகரிக்கத் தொடங்கியது. இவ்வாறு அரிசி விலை கூடிக்கொண்டே போகும் போது வர்த்தக நுகர்வோர் விவகார அமைச்சர் பந்துல குணவர்தனவும் அரசாங்கமும் வாய்திறக்காமலிருந்தனர். அரிசி விலை 70, 80 ரூபாவெனக் கூடி 90,100 ரூபா வரை வரும் போது தான் அரசு விழித்துக் கொண்டது. திடீரென இரவோடிரவாக அரிசிக்கான உத்தரவாத விலை 70 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டு வர்த்தமானி மூலம் அறிவிக்கப்பட்டது. இச்சந்தர்ப்பத்தில் நெல் ஆலை உரிமையாளர்களிடமிருந்து 75, 80 ரூபாவாக வாங்கிய அரிசியை மொத்த வியாபாரிகள் உத்தரவாத விலைக்கு விற்க மறுத்து விட்டனர்.
உண்மையிலேயே அரிசிக்கான உத்தரவாத விலை நிர்ணயிக்கும் திட்டத்தை மொத்த வியாபாரிகள் முன் கூட்டியே தெரிந்து வைத்திருந்ததாக தெரியவந்துள்ளது. இந்த நெருக்கடியிலிருந்து தன்னை விடுவித்துக் கொள்ளும் பொருட்டு அரசு நெல்லுக்கான உத்தரவாத விலையை நிர்ணயிப்பதை தவிர்த்து நழுவல் போக்கை கடைப்பிடித்தது. இந்த நிலையில் என்னதான் உத்தரவாத விலை நிர்ணயிக்கப்பட்டிருப்பினும் நெல் ஆலைகளிலிருந்து மொத்த வியாபாரிகளுக்கு அரிசி வந்து சேராத வரை மக்கள் தொடர்ந்து அரிசியை தேடுவதில் அலைக்கழிய வேண்டியுள்ளது. உள்நாட்டு உற்பத்தி ஒழுங்கான முறையில் பேணப்பட்டிருந்தால் அரசாங்கம் உள்நாட்டு விவசாயிகளிடமிருந்து கணிசமான விலை அடிப்படையில் நெல்லை கொள்வனவு செய்து களஞ்சியப்படுத்தியிருந்தால் அரிசித் தட்டுப்பாடு ஒருபோதும் ஏற்பட்டிருக்க முடியாது. இலங்கை ஒரு விவசாய நாடு. இங்கு உணவுத் தட்டுப்பாடு ஏற்படுவது வெட்கப்படவேண்டிய விடயமாகும். இந்தியாவும் பர்மாவும் அரிசி ஏற்றுமதியை தடை செய்தமைக்கான பிரதான காரணம், உள்நாட்டில் அரிசித் தட்டுப்பாடு ஏற்படக்கூடாது என்பதற்காகவே ஆகும்.
இலங்கை அரசாங்கத்திடம் சீரான உணவுக்கொள்கை பேணப்படாததன் காரணமாகவே உணவு நெருக்கடியும் பஞ்சமும் காலத்திற்குக் காலம் ஏற்படுகின்றது. தற்போது உலகம் முழுவதும் உணவுப் பஞ்சம் ஏற்பட்டிருப்பதாக கூறப்படுகின்றபோதிலும் எமது நாட்டில் உணவுக்கொள்கை ஒழுங்காகப் பேணப்பட்டிருந்தால் இது பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தியிருக்கமாட்டாது. பாணின் விலையை அதிகரித்து பாண் சாப்பிடவேண்டாமென அரசு கூறியது. அதேபோன்று கோதுமை மாவின் விலையையும் உயர்த்தி உணவுப் பண்டங்களின் விலைகள் இரண்டு மூன்று மடங்கு அதிகரிப்பதற்கு வழியை திறந்துவிட்டது. இதனால் மக்கள் மூன்று வேளையும் சோறு சாப்பிட முற்பட்டனர். இதன் விளைவாக உள்நாட்டின் அரிசித் தேவை மூன்று மடங்காக அதிகரித்தது. அரசு திட்டமிட்டுச் செயற்பட்டிருந்தால் இந்த நெருக்கடியோ அரிசித் தட்டுப்பாடோ ஏற்பட்டிருக்காது. அதிகாரத்திலுள்ளவர்களின் தான்தோன்றித் தனமான போக்கால் முழு நாடும் பாதிக்கப்பட்டுள்ளது. உள்ளூர் அரிசியை நம்பியிருக்க முடியாத நிலை இன்று ஏற்பட்டுள்ளது. அதேசமயம், வெளிநாட்டு அரிசி வந்து சேருவதிலும் தாமதம் ஏற்பட்டுள்ளது. அடுத்து அரசாங்கம் என்ன செய்யப்போகின்றது. மக்களை எந்தப் பக்கத்துக்கு திசை திருப்பி ஏமாற்ற முயற்சிக்கும் என்று கேட்கவிரும்புகிறோம்.
மக்களை ஏமாற்றும் கண்துடைப்பு நடவடிக்கைகளை கைவிட்டு உள்நாட்டில் அரிசியை போதுமான அளவுக்குக் களஞ்சியப்படுத்துவதற்கு அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும். விவசாயப் பகுதிகளில் இருக்கும் நெல்லை உடனடியாக நியாயமான விலைக்கு கொள்வனவு செய்து மானிய அடிப்படையிலாவது மக்களுக்கு நியாய விலைக்கு தாராளமாக அரிசி கிடைப்பதை உறுதி செய்ய வேண்டுமென அரசிடம் கேட்டுக்கொள்கின்றோம்.