* பிரதேச செயலாளர் தெரிவிப்பு
யுத்தம், இயற்கை அனர்த்தம் மற்றும் வறுமையினால் மிகவும் பாதிக்கப்பட்ட ஆலையடிவேம்பு பிரதேச 22 கிராமங்களும் அபிவிருத்தி செய்யப்பட வேண்டும் என தேச நிர்மாண அமைச்சரும் கிழக்கு சமுர்த்தி அமைச்சருமான சுசந்த புஞ்சிநிலமேயிடம் பிரதேச செயலாளர் எஸ்.கரன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
சமுர்த்தி அதிகார சபையினால் மூவாயிரம் கிராமங்களை அபிவிருத்தி செய்யும் திட்டத்தின் கீழ் தெரிவு செய்யப்பட்ட ஆலையடிவேம்பு பிரதேச கோளாவில் கிராம அபிவிருத்தி தொடர்பாக மக்களுக்கு தெளிவுபடுத்தும் நிகழ்வு கோளாவில் கிராம அபிவிருத்தி சங்க காரியாலயத்தில் சமுர்த்தி உத்தியோகத்தர் தலைமையில் நடைபெற்றது. இதில் அதிதியாகக் கலந்து கொண்ட பிரதேச செயலாளர் எஸ்.கரன் தொடர்ந்து பேசுகையில் கூறியதாவது;
இலங்கையிலுள்ள 15 ஆயிரத்து 300 கிராமங்களில் சமுர்த்தி அதிகார சபை 3 ஆயிரம் கிராமங்களை அபிவிருத்தி செய்ய முன்வந்துள்ளது வரவேற்கத்தக்கது. இவற்றில் ஆலையடிவேம்பு பிரதேசத்தில் ஆறு கிராமங்களை தெரிவு செய்துள்ளது. சமுர்த்தித் திட்டம் 1990 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டு சமுர்த்தி முத்திரை, மரணக் கொடுப்பனவு, திருமணக் கொடுப்பனவு , பிள்ளை பிறப்பு , வைத்திய சேவைக் கொடுப்பனவு போன்ற பல்வேறு நன்மைகள் பெற்றுக் கொடுக்கப்படுகின்றது. மிகவும் பாதிக்கப்பட்ட இப்பிரதேசத்திலுள்ள 22 கிராமங்களிலும் அடிப்படை வசதிகள் இன்றி மக்கள் பெரும் கஷ்டங்களை அனுபவித்து வருகின்றனர். இவை தொடர்பாக நான் அமைச்சர் சுசந்த புஞ்சிநிலமேயிடம் எடுத்துக் கூறியுள்ளேன்.
இப்பிரதேசத்தை எவ்வாறான முறையில் அபிவிருத்தி செய்யப்பட வேண்டுமென்று அறிக்கையொன்றை அமைச்சர் சமுர்த்தி அதிகார சபைக்கு அனுப்பியுள்ளார்.
சமுர்த்தி அதிகார சபையினால் 2008 ஆம் ஆண்டு முழுமையாக கோளாவில் 2 கிராமம் அபிவிருத்தி செய்யப்படுமென்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்நிகழ்வில் சமுர்த்தி முகாமையாளர் என்.நேசராஜா பிரதேச சபை தவிசாளர் மு.ஆனைக்குட்டி ,பிரதேச சபை உறுப்பினர் தாமோதரம், கிராம அபிவிருத்தி சங்கத்தலைவர் உட்பட பலர் கலந்து கொண்டு உரையாற்றியதுடன், 30 பேருக்கு தென்னங்கன்றுகளும் வழங்கப்பட்டன.