*தென்மாகாணசபை உறுப்பினர் வீரசுமண வீரசிங்க
வடக்கில் யுத்தம் நடைபெறும் போது தெற்கில் இன ஐக்கியத்துக்கு வித்திடப்படுகிறது. மாத்தறை மாவட்டத்தின் தலைநகரான தெனியாய சென்.மத்தியூ பாடசாலையில் இன ஐக்கியத்திற்கு உதாரணமாக அங்கு படிக்கும் தமிழ், சிங்கள மாணவர்கள் ஒன்றாகப் படித்து ஒன்றாக விளையாடுகிறார்கள். இது இலங்கையின் ஏனைய பாடசாலைகளுக்கு முன் உதாரணமாக அமைந்துள்ளது என்று தென்மாகாண சபை உறுப்பினர் வீரசுமண வீரசிங்க தெரிவித்தார்.
காலியில் கடந்த வியாழக்கிழமை மாத்தறை மாவட்டத்தில் தெரிவு செய்யப்பட்ட தோட்டப்பாடசாலைகளுக்கு 25 ஆயிரம் ரூபா பெறுமதியான புத்தகங்களையும் ஆசிரியர்களுக்கான சான்றிதழ்களையும் வழங்கும் வைபவத்தில் உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் தொடர்ந்தும் அங்கு உரையாற்றும்போது:-
இற்றைக்கு 25 வருடங்களுக்கு முன்பு மலையகம் கல்வித் துறையில் பின்தங்கிய நிலையிலிருந்தது. அமைச்சர் தொண்டமானின் அயராத முயற்சியின் பயனாக பெருந்தோட்டப் பாடசாலை பிள்ளைகளின் கல்வியிலே மறு மலர்ச்சி ஏற்பட்டாலும், தென்னிலங்கை தோட்டப் பாடசாலைகளின் நிலை வீழ்ச்சியானதாகவே இருந்தது. இதனையிட்டு நான் அமைச்சருடனும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடனும் கதைத்து தெற்கில் தோட்டப் பாடசாலையின் வளர்ச்சிக்காக என்னால் முடிந்தவைகளைச் செய்தேன். தேர்தல் காலங்களில் அப்பாவித் தோட்டத்தொழிலாளர்களை ஏமாற்றி அவர்களின் வாக்குகளை ஒவ்வொரு கட்சியினரும் கொள்ளையிட்டுச் செல்கிறார்களே தவிர அந்த மக்களின் பிள்ளைகளின் கல்விக்காக அரசியல் வாதிகள் என்ன செய்தார்கள் என்று கேள்விகள் எழுப்பப்படும் போது பதில் சூனியமாகவே இருக்கின்றது.
பிரதி அமைச்சராக சச்சிதானந்தம், முதலமைச்சராக சான் விஜேலால் டி சில்வா, தென் மாகாண பிரதிக் கல்வி அமைச்சராக மதனியாகலீல் ஆகியோர் கிடைத்துள்ளமை மலையகத் தோட்டப் பாடசாலைப் பிள்ளைகளின் மாபெரும் அதிர்ஷ்டம் என்றே கூறவேண்டும்.
இவர்களாலும் இங்கு நியனம் பெற்று வந்துள்ள ஆசிரியர்களாலும் தோட்டப் பிள்ளைகளின் கல்வியில் மாபெரும் மறுமலர்ச்சி ஏற்பட்டுள்ளதை யாரும் மறுக்க முடியாது.
பலதோட்டப் பாடசாலைகளை ஒன்றிணைத்து தமிழ் தோட்ட மஹாவித்தியாலயங்களை உருவாக்க வேண்டும். அவற்றுக்குத் தேவையான வளங்களை வழங்க வேண்டுமென முதலமைச்சரைக் கேட்டுக் கொள்கிறேன் என்றார்.
பெருந்தோட்டக் கல்விப் பணிப்பாளர் திருமதி சபாரஞ்சன் உரையாற்றும்போது; "ஒரு காலத்தில் இந்த நாட்டிலே தோட்டப் பாடசாலைகளும் அதில் கல்விகற்கும் மாணவ மாணவிகளும் இரண்டாம் தரப் பிரஜைகளாக ஒதுக்கப்பட்ட நிலை இருந்து வந்தது. இன்று அந்நிலை மாறி விட்டதும் தோட்டப் பாடசாலைகளுக்கு அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கப்பட்டிருப்பதால் 5 ஆம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சையிலும் க.பொ.த.சாதாரண தரப்பரீட்சையிலும் தோட்டப் பிள்ளைகளின் முன்னேற்றம் தேசிய மட்டத்தில் போட்டி போடும் அளவுக்கு அமைந்துள்ளமை பாராட்டத்தக்கதாகும். இனித் தோட்டப் பாடசாலைப் பிள்ளைகளின் எதிர்காலம் சுடர்விட்டுப் பிரகாசிக்கும் என்பதில் எவ்வித சந்தேகமுமில்லை" என்றார்.
பிரதிக் கல்வி அமைச்சர் சச்சிதானந்தனின் அந்தரங்கச் செயலாளர் ஷ்ரீகாந்தன் பேசும் போது; "1977 ஆண்டுக்குப் பின்னர் தான் அமைச்சர் தொண்டமான் மலையக மாணவர்களுக்கான அடிப்படைக் கல்வி வசதியை பெற்றுக் கொடுத்து அவர்களை கல்வித்துறையில் கைதூக்கி விட்டார். இதனைத் தோட்ட மக்கள் என்றுமே மறக்கமாட்டார்கள்" என்றார்.
தென்மாகாண பிரதிக் கல்விப் பணிப்பாளர் மதனியாகலீல் பேசும் போது; தோட்டப் பாடசாலை மாணவர்கள் அபார திறமை படைத்தவர்கள். அவர்கள் முயன்றால் எதனையும் சாதித்துவிடலாம். அவர்களைப் பல்வேறு துறைகளில் திறமைசாலிகளாக மாற்றுவதற்கு தற்போது மலையகத்தில் கடமையாற்றும் ஆசிரியர்கள் மன உறுதி பூண்டுள்ளதை வெளிப்படையாகவே என்னிடம் கூறியுள்ளனர் என்றார்.
தமிழாசிரியர் பற்றாக்குறை இருந்த காலத்தில் இப்பாடசாலைகளில் முஸ்லிம் ஆசிரியர்கள் அர்ப்பணிப்புடன் ஆற்றிய சேவைகள் அளப்பரியதாகும். அந்த ஆசிரியர்கள் ஒரு பாடசாலையில் 10 -12 வருடகாலம் சேவை செய்ததை எவராலும் மறக்கமுடியாது. இப்போது தோட்டப் பாடசாலைகளில் கடமையாற்ற தமிழாசிரியர்கள் நியமனம் பெற்றுள்ளது மலையக மாணவர்களின் பாக்கியமென்றே கூறவேண்டும் என்றார்.