* மூதூர் பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றிய பொலிஸ் உயரதிகாரி சாட்சியம்
யோ.நிமல்ராஜ்
மூதூர் நகர் 2006 ஆம் ஆண்டு மூன்றாம் திகதி காலை பத்து மணிக்கே விடுதலைப் புலிகளின் வசமிருந்ததாக ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில் மூதூர் பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றிய பொலிஸ் அத்தியட்சர் ஒருவர் சாட்சியமளித்துள்ளார்.
மூதூரில் அக்ஷன் பாம் நிறுவனத்தின் பணியாளர்கள் பதினேழுபேர் படுகொலை செய்யப்பட்டமை தொடர்பான விசாரணைகள் ஜனாதிபதி ஆணைக்குழுவினால் தொடர்ந்து நடத்தப்பட்டு வருகின்றது.
இதன்போது சாட்சியமளித்த பொலிஸ் உத்தியோகத்தர் மேலும் தெரிவிக்கையில்;
நான் எனது முதல் கடமையை 1979 ஆம் ஆண்டு அம்பாறை பொலிஸ் நிலையத்தில் பொறுப்பேற்றுக் கொண்டேன்.
பின்னர் 1996 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் பிலியந்தல பொலிஸ் நிலையத்தின் பொறுப்பதிகாரியாக கடமையேற்றுக் கொண்டேன்.
அதனைத்தொடர்ந்து கடந்த 2006 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் ஆறாம் திகதி முதல் 2007 ஆம் ஆண்டு ஜூலை 25 ஆம் திகதி வரை மூதூர் பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றினேன்.
நான் அங்கு பணியை பொறுப்பேற்றபோது அப்பொலிஸ் நிலையத்தின் பொறுப்பதிகாரியாக கீர்த்தி ரணவிக்ரமசிங்க பதவியில் இருந்தார்.
மூதூர் பொலிஸ் நிலையத்தில் நிர்வாகப் பொறுப்பதிகாரியாகவே எனது சேவையை தொடர்ந்தேன்.
இந்நிலையில் கடந்த 2006 ஆகஸ்ட் முதலாம் வாரத்தில் மூதூர் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி உயரதிகாரிகளுடனான சந்திப்பு ஒன்றிற்காக திருகோணமலைக்கு விடுமுறையில் சென்றுவிட்டார்.
ஆகஸ்ட் முதலாம் திகதி காலை பத்து மணியளவில் எமது பொலிஸ் நிலையத்திலிருந்து அவர் திருகோணமலைக்குப் புறப்பட்டுச் சென்றுவிட்டார்.
அன்றையதினம் பகல் மூதூரில் நிலைமைகள் வழமைபோன்றே இருந்தது.
ஆனால், இரவு பதினொருமணியளவில் எமது பொலிஸ் நிலையத்திலும் அதனை அண்டிய பகுதிகளிலும் மின்சாரம் தடைப்பட்டது.
மின்சாரம் தடைப்பட்டதற்கு என்னகாரணம் என்பதனை அறிவதற்காக மின்சாரசபைக்கு தொலைபேசி அழைப்பினை ஏற்படுத்தி வினவியபோது, அவர்கள், இறால்குளி பிரதேசத்திலுள்ள மின்கம்பம் ஒன்றை விடுதலைப்புலிகள் சேதமாக்கிவிட்டதாகக் கூறினார்கள்.
குறிப்பிட்ட மின்சாரசபை அலுவலகம் பிரதேச செயலகத்திற்கு அருகிலேயே உள்ளது.
மின்தடைப்பட்ட காரணத்தினால் மின்பிறப்பாக்கி மூலம் எமது நிலையத்திற்கு மின்சாரத்தைப் பெற்றுக் கொண்டோம்.
அவ்வேளையில் ஒரு சில துப்பாக்கிச் சூட்டு சத்தங்கள் கேட்டதைத்தொடர்ந்து பின்னர் கூடுதலான துப்பாக்கிச் சூட்டுச்சத்தங்கள் கேட்டன.
மேலும் பெரிய வெடிச்சத்தங்களும் மோட்டார் குண்டுகள், ஷெல் வீச்சு சத்தங்கள் போன்றனவும் கேட்டன.
இச்ஷெல்கள் இறால் குளிப் பிரதேசத்திலிருந்து ஏவப்பட்டு அவை மூதூர் நகரப் பிரதேசங்களில் வந்து வீழ்ந்து கொண்டதென்பதை சத்தங்கள் மூலம் அறியக்கூடியதாக இருந்தது.
இந்நிலையில் மூதூர் நகரை விடுதலைப்புலிகள் சுற்றிவளைத்திருப்பதாக மூதூர் நகரப் பொலிஸ் நிலைய அத்தியட்சர் தொலைபேசி மூலம் தெரிவித்தார்.
மூதூர் இறங்குதுறைக்குப் பக்கத்தில் கடற்படையினரின் முகாமும் அவர்களின் சோதனைச் சாவடி ஒன்றும் உள்ளது.
இந்நிலையில் மூதூர் நீதிவான் கணேஷராஜா தனக்கு எதுவித பிரச்சினையும் இல்லையெனத் தெரிவித்திருந்தார்.
மறுநாள் இரண்டாம் திகதி நடத்தப்பட்ட ஷெல் தாக்குதலில் பொலிஸ் சோதனைச் சாவடி சேதமடைந்திருந்தது.
அச்சோதனைச் சாவடியில் கடமையிலிருந்த இருபொலிஸார் பலியானதுடன் ஒருவர் காயமடைந்திருந்தார். ஆனால் இவர்கள் மீது துப்பாக்கிச் சூட்டுப் பிரயோகமும் மேற்கொள்ளப்பட்டிருந்தது. இச்சம்பவத்தில் பலியான பொலி ஸாரின் பெயர்கள் தற்போது எனக்கு ஞாபகமில்லை.
இதேவேளை சம்பூர், தோப்பூர், பச்சனூர் பொலிஸ் சாவடிகள் மீதும் தாக்குதல்கள் தொடுக்கப்பட்டிருந்தது.
காலை 10 மணிக்கும் 11 மணிக்கும் இடைப்பட்ட நேரத்திலேயே இத்தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டிருந்தன.
இந்நிலையில் மூதூரிலுள்ள ரெலிகொம் நிறுவனத்திற்கு சொந்தமான பரிவர்த்தனை கோபுரமும் தாக்குதலுக்கு உள்ளாகியது.
இவ்வாறான நிலையில் அனைத்து பொலிஸ் நிலையங்களிலும் கடமையிலிருந்தவர்கள் மூதூர் பிரதான பொலிஸ் நிலையத்திற்கு வந்து சேர்ந்தனர்.
இவ்வேளையில் கைத்தொலைபேசிக்கு வந்த அழைப்பில் மூதூர் பிரதேச சபை உறுப்பினர் ராஜீஷ், முதூரை விடுதலைப் புலிகள் கைப்பற்றியிருப்பதாக கூறினார்.
மேலும், மூதூர் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரியின் உத்தியோகபூர்வ வாசஸ்தலத்தில் எட்டாம் இலக்க பதுங்கு குழியில் நீதிபதி கணேசராஜா தங்கியிருந்த அதேவேளை அவருக்கு பாதுகாப்பாக இரு பொலிஸ்காரரும் கூடவே இருந்தனர்.
இந்நிலையில் தொலைபேசி சேவைகள் துண்டிக்கப்பட்டு இருந்ததால் மேலதிக தகவல்கள் எதனையும் பரிமாறிக்கொள்ள முடியவில்லை.
ஆனாலும் சிறிது நேரத்தின் பின்னர் கையடக்கத் தொலைபேசி மூலம் திருகோணமலையிலுள்ள சிரேஷ்ட பொலிஸ் அதிகாரியுடன் தொடர்புகொண்டு எம்மை மீட்கும்படி தெரிவித்திருந்தோம்.
இதன்போது மூதூர் இறங்கு துறைக்கு அருகிலிருந்த கடற்படைமுகாம் தாக்குதலுக்கு உள்ளாகி சேதமடைந்திருந்தது.
இந்த தாக்குதலில் கடற்படையினரின் முகாமை விடுதலைப் புலிகள் கைப்பற்றிவிட்டதாகவும் நடைபெற்ற மோதலில் கடற்படையினர் சிலர் கொல்லப்பட்டும் பலர் காயமடைந்துள்ளதாகவும் தெரியவந்தது.
மூதூரில் பல அரசசார்பற்ற நிறுவனங்கள் இயங்கிவந்தமை எனக்குத் தெரியும். அவற்றில் ஒன்றுதான் அக்ஷன் பாம் நிறுவனம்.
அந் நிறுவனத்தினர் பல்வேறுபட்ட சமூக அபிவிருத்திப் பணிகளை மேற்கொண்டிருந்தனர்.
அத்துடன் அந்நிறுவனம் எங்கு உள்ளது என்பதும் எனக்குத் தெரியும். எனது வழமையான ரோந்து நடவடிக்கையின்போது அவ் அலுவலகத்தை கண்டுள்ளேன்.
மருத்துவமனைக்கு அருகிலுள்ள வீதியிலேயே அது அமைந்துள்ளது. ஆனால் அந்த வீதியின் பெயர் எனக்குத் தெரியாது.
இந்த அலுவலகத்திற்கு அண்மித்த பிரதேசத்தில் நகரப் பொலிஸ் சாவடியே உள்ளது.
இந்நிலையில் மூன்றாம் திகதி உணவு நீர்த் தட்டுப்பாடு ஏற்பட்டதால் திருகோணமலையில் இருக்கும் சிரேஷ்ட பொலிஸ் அதிகாரியுடன் தொடர்பு கொண்டு நிலைமை பற்றி எடுத்துக்கூறியபோது அவர், எம்மை மீட்பதற்கு கபில ஜெயசேகரவென்ற சிரேஷ்ட பொலிஸ் அதிகாரியின் தலைமையிலான குழு ஒன்று அங்கிருந்து புறப்பட்டு ஏற்கனவே வந்து கொண்டிருப்பதாகத் தெரிவித்தார்.
இவர்கள் திருகோணமலையிலிருந்து மூன்றாம் திகதி காலை பத்துமணிக்கும் பதினொரு மணிக்கும் இடைப்பட்ட நேரத்திலேயே புறப்பட்டிருந்தனர்.
கபில ஜெயசேகரவை எனக்கு முதலிலேயே தெரியும்.
திருகோணமலையிலிருந்து மூன்றாம் திகதி காலை பத்துமணிக்கு புறப்பட்ட அவர்கள் நான்காம் திகதி இரவு 11.45 மணியளவிலேயே எமது பொலிஸ் நிலையத்தை வந்தடைந்தனர்.
ஆனால் மூன்றாம் திகதி காலை பத்துமணிக்கே விடுதலைப் புலிகள் மூதூர் நகரைக் கைப்பற்றி தம்வசம் வைத்திருந்தனர்.
இதனை எமக்கு தொலைபேசி அழைப்பொன்றின் மூலம் ஒருவர் தெரிவித்திருந்ததுடன் விடுதலைப்புலிகள் மூதூர் நகரில் மோட்டார் சைக்கிள்களில் திரிவதாகவும் தெரிவித்தார்.
எமது பொலிஸ் நிலையத்திற்கும் அக்ஷன் பாம் அலுவலகத்திற்கும் இடையில் சுமார் ஒன்றேகால் கிலோமீற்றர் இடைவெளி இருக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.
இதனையடுத்து இவருடைய நேற்றைய சாட்சியம் இடை நிறுத்தப்பட்டது.