* அதிபர்கள் சந்திப்பில் பிரதிக் கல்வி அமைச்சர்
மலையகத்தில் கணித, விஞ்ஞான பாடத்துறைகளை விருத்தி செய்து வைத்தியர்கள், பொறியியலாளர்களை உருவாக்குவதே தனது அவா என பிரதிக்கல்வி அமைச்சர் மு.சச்சிதானந்தன் குறிப்பிட்டார்.
ஊவா மாகாணத்தின் கல்வி நிலைமைகளை ஆராயவென பதுளை பிரிஜ் ஹோட்டல் மண்டபத்தில் கடந்த 18 ஆம் திகதி ஊவாமாகாண பாடசாலை அதிபர்களுடன் இடம்பெற்ற சந்திப்பில் தலைமை வகித்து பேசும்போதே சச்சிதானந்தன் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
ஊவாமாகாண 58 பாடசாலை அதிபர்கள் கலந்து கொண்ட இக்கூட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட தீர்மானங்கள் தொடர்பாக அவர் தகவல் தருகையில்;
இம்முறை ஊவா மாகாணத்தில் 900 மாணவர்கள் க.பொ.த.சாதாரண தரத்தில் சித்தியடைந்து க.பொ.த.உயர்தரத்திற்கு தகுதிபெற்றிருக்கின்றார்கள். இது மலையகத்தின் கல்வியில் ஏற்பட்டிருக்கின்ற புரட்சியை எடுத்துக் காட்டுகின்றது. 2008 ஆம் ஆண்டு இந்த க.பொ.த.சாதாரண தரத்தில் சித்தியடைகின்ற மாணவர்களின் எண்ணிக்கையை அதிகரிப்பது தொடர்பாக இன்று நாங்கள் ஆராய்ந்தோம். அதன் பிரகாரம் தரம் 6 தொடக்கம் தரம் 9 வகுப்புகளின் கற்றல் , கற்பித்தல் செயற்பாடுகளை அபிவிருத்தி செய்யும் நோக்கில் பயிற்சிப் பட்டறைகளை நடாத்த நாங்கள் இன்று தீர்மானித்துள்ளோம்.
மாணவர்களை க.பொ.த. சாதாரண தரத்திற்கு ஆயத்தம் செய்யுமுகமாக தரம் 9 வகுப்புக்கு கணிதம், விஞ்ஞானம், தமிழ், சமூகக்கல்வி, ஆங்கிலம் , சமயம் ஆகிய பாடங்களை விசேடமாக நடத்தி சிறந்த பெறுபேறுகளைப் பெறுகின்ற மாணவர்களுக்கு பரிசில்களை வழங்கி அவர்களை ஊக்குவிக்கவும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அத்துடன் இம்முறை தரம் 10 , தரம் 11 கணிதம், விஞ்ஞானம் , ஆங்கிலம் ஆகிய பாடங்களுக்கு செயலமர்வுகளை நடத்தவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது. மேலும், அவர் 2007 ஆம் ஆண்டு க.பொ.த.சாதாரண தரத்தில் சித்தியடைந்து க.பொ.த.உயர்தரத்திற்கு தகுதிபெற்ற மாணவர்களுக்கும் இம் மாணவர்களுக்கு கற்பித்த ஆசிரியர்களுக்கும் பரிசில்களை வழங்கிக் கௌரவிக்கப்படவுள்ளனர்.
இந்த 5 ஆண்டு காலப்பகுதிக்குள் மலையகத்தில் கணித, விஞ்ஞானத் துறைகள் விருத்தியுற்று வைத்தியர்கள் , பொறியியலாளர்கள் உருவாக்குவதே எனது அவா. ஊவா மாகாணத்தில் க.பொ.த.உயர்தரத்தில் கணித, விஞ்ஞானப் பிரிவுகளை பசறை தமிழ்த் தேசியப் பாடசாலை, சரஸ்வதி தமிழ் தேசியப் பாடசாலை, குருத்தலாவை முஸ்லிம் தேசியப் பாடசாலை , பண்டாரவளை தமிழ் மத்திய மகா வித்தியாலயம், பதுளை தமிழ் மகளிர் மத்திய மகா வித்தியாலயம் ஆகிய பாடசாலைகளில் ஆரம்பித்திருப்பதுடன் இப்பாடசாலைகளுக்கு 70 25 சதுர அடி அளவிலான விஞ்ஞான ஆய்வுகூடங்கள் அமைக்கப்படவுள்ளன.
இப்பாடசாலைகளுக்கு பட்டதாரி ஆசிரியர்களை நியமிப்பதற்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் ஆசிரியர் வளங்கள் சீராக வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.