* ஐ.நா.கடும் குற்றச்சாட்டு
உலகில் உணவுப் பொருட்களின் விலை முன்னொருபோதுமில்லாத அளவுக்கு மோசமாக அதிகரித்ததற்கு அமெரிக்காவும் ஐரோப்பிய ஒன்றியமுமே பொறுப்பென ஐ.நா.சாடியுள்ளது.
உயிரி எரிபொருளை உற்பத்தி செய்வதற்காக உணவுப் பயிர்களைப் பயன் படுத்துவதை அமெரிக்காவும் ஐரோப்பிய ஒன்றியமும் ஊக்குவிக்கும் குற்றநடவடிக்கைப் பாதையை தேர்ந்தெடுத்திருப்பதாகவும் இதனாலேயே சர்வதேச ரீதியில் உணவுப் பொருள்களின் விலை மோசமாக அதிகரித்திருப்பதாக உணவு உரிமை விவகாரத்துக்குப் பொறுப்பான ஐ.நா.வின் விசேட அறிக்கையாளர் ஜோன் சைக்கிலர் தெரிவித்துள்ளார்.
கடந்த வருடம் அமெரிக்கா தனது தானியப் பயிர்ச் செய்கையில் மூன்றிலொரு பகுதியை உயிரி எரிபொருள் உற்பத்திக்காக பயன்படுத்தியுள்ளது. அதே சமயம் ஐரோப்பிய ஒன்றியம் தனது எரிபொருள் தேவையில் 10 சதவீதத்தை உயிரி எரிபொருள் மூலம் பூர்த்தி செய்யத் திட்டமிடுகின்றன என்று தெரிவித்த ஜோன் சைக்கிலர் உயிரி எரிபொருள் தயாரிப்பு பணியை 5 ஆண்டுகள் நிறுத்திவைக்க வேண்டுமெனவும் அழைப்பு விடுத்திருக்கிறார்.
சர்வதேச சந்தையில் உணவுப் பொருட்களின் விலை 30 சதவீதம் அதிகரிக்குமென ஊகங்கள் வெளியிடப்படுகின்றன. உதிரிப் பாகங்கள் சந்தையில் அதிக இலாபம் கிடைப்பதால் அத்துறையில் அதிகளவு நிதி முதலீடு செய்யப்படுகிறது. அதனால் உணவுப்பொருட்களின் விலை அதிகரிப்பை கட்டுப்படுத்த நிதிதொடர்பாக புதிய ஒழுங்கமைப்பு தேவையெனவும் அவர் அழைப்புவிடுத்திருக்கிறார்.
அதேசமயம் உணவுக்காக மோசமான கல வரங்களும் பட்டினி மரணங்களும் அதிகரிக்கும் சாத்தியம் இருப்பதாகவும் அவர் செய்தியாளர் மாநாட்டின் போது எச்சரித்துள்ளார்.
இது இவ்வாறிருக்க ஐ.நா.வின் உலக உணவு நிகழ்ச்சித் திட்டத்தின் போஷாக்கு விவகார அதிகாரி அன்ரூ தோரீனே லைமன் ரோயில் வைத்து கருத்து தெரிவிக்கையில், உலகளாவிய ரீதியில் உணவுப் பொருட்களின் விலை அதிகரிப்பானது பசியால் வாடும் குழந்தைகளின் வாய்க்கு உணவு செல்லாமல் தடுக்கப்படுகின்றது என்றே அர்த்தப்படும். அதாவது இக்குழந்தைகளின் பெற்றோரால் போதியளவு உணவை வழங்க முடியாத நிலைமையே ஏற்படும் என்று அவர் கூறியுள்ளார்.
குழந்தைகளுக்கு தற்காலிகமாகவேனும் போஷாக்கான உணவு கிடைக்காவிடின் அது நிரந்தரமான காயமாக மாறிவிடும். ஏனெனில், அவர்களின் உடல், உள வளர்ச்சி பாதிக்கப்பட்டு விடுமென அன்ரூ சுட்டிக்காட்டியுள்ளார்.
அபிவிருத்தியடைந்து வரும் நாடுகளைச் சேர்ந்த குடும்பங்களின் உணவுப்பொருட்களின் விலை அதிகரிப்பால் குறைந்து விடும். இதனால் குறைந்தளவு உணவுப்பொருளையோ அல்லது போஷாக்கற்ற பொருளையோ அவர்கள் கொள்வனவு செய்யக்கூடுமெனவும் அவர் கூறியுள்ளார்.