கிழக்கு மாகாண சபைத் தேர்தலுக்கான தபால்மூல வாக்களிப்பில் 75 சதவீதமானோர் வாக்களித்துள்ளதாக பவ்ரல் தெரிவித்துள்ளது.
அத்துடன் தபால்மூல வாக்களிப்பில் தமிழ் அரசாங்க ஊழியர்கள் அதிகளவில் ஆர்வம் காட்டவில்லை எனவும் அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
கிழக்கு மாகாண சபைத் தேர்தலுக்கான தபால்மூல வாக்களிப்பு நேற்றும் நேற்று முன்தினமும் நடைபெற்றது.
தேர்தலில் 22 ஆயிரத்து 412 அரசாங்க ஊழியர்கள் வாக்களிக்கத் தகுதி பெற்றிருந்தனர்.
அரசாங்க அலுவலகங்களில் தபால்மூல வாக்களிப்பு நடைபெற்றது. இதுகுறித்து பவ்ரல் உதவி நிறைவேற்றுப் பணிப்பாளர் ரோஹண ஹெட்டியாராச்சி கூறுகையில்;
தபால்மூல வாக்களிப்பில் 75 சதவீதமானவர்கள் கலந்து கொண்டனர். வன்முறைகள் குறித்து இதுவரை எமக்கு தகவல்கள் கிடைக்கவில்லை எனினும் சில சம்பவங்கள் குறித்து நாம் தகவல்களைப் பெற்றுள்ளோம் . இதுபற்றி ஆராய்கிறோம் என்றார்.
இதேவேளை கிழக்கு தபால்மூல வாக்களிப்பில் முஸ்லிம் மற்றும் சிங்கள அரசாங்க ஊழியர்கள் ஆர்வத்துடன் பங்குபற்றிய அதேவேளை தமிழ் ஊழியர்கள் அதிகளவு ஆர்வத்தை வெளிப்படுத்தவில்லை எனவும் அங்கிருந்துவரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.