*தமிழ்க் கூட்டமைப்பு சீற்றம்
விடுதலைப்புலிகளுக்கு எதிரான யுத்தத்திற்காக இந்தியா இலங்கைக்கு 100 மில்லியன் டொலர் கடனை வழங்கவுள்ளதாக இந்தியப் பத்திரிகை செய்தி குறித்து இலங்கையில் ஆச்சரியம் தெரிவிக்கப்படுகிறது.
அதிகாரிகள் பலர் மற்றும் பாதுகாப்புத்துறை ஆய்வாளர்கள் இந்த விடயம் குறித்து அறிந்திருக்கவில்லை. ஆனால், இந்த செய்தியானது சரியாக இருக்குமானால், தமக்கு எதிரான இனப்படுகொலைக்காக இலங்கை அரசாங்கத்திற்கு புதுடில்லி உதவியளிக்க முடிவு செய்துவிட்டது என்றே பொருள்படும் என்று இலங்கைத் தமிழர்கள் கூறியுள்ளனர்.
`இது தொடர்பாக என்னால் எதுவும் கூறமுடியாது. ஏனெனில், இதுபற்றி எனக்குத் தெரியாது' என்று வெளிவிவகாரச் செயலாளர் கலாநிதி பாலித ஹோகண நியூவின்ட் பிரஸ் இணையத்தளத்துக்கு கூறியுள்ளார்.
ஆயினும், இந்தியா இலங்கைக்கு ஆயுதங்களை விநியோகிக்கின்றது என்று நான் நினைக்கவில்லை. பாதுகாப்பு முறைமைகள் மற்றும் பயிற்சியையே இந்தியா வழங்கி வருவதாக அவர் மேலும் கூறியுள்ளார்.
இதேவேளை, இந்த விடயம் தொடர்பாக தான் அறிந்திருக்கவில்லையென பாதுகாப்பு விவகார நிருபர் இக்பால் அத்தாஸ் கூறியுள்ளார். அதேசமயம், மற்றொரு பாதுகாப்பு விவகார நிருபரான சாமிந்திர பெர்னாண்டோ கூறுகையில்; வேறொரு நாட்டிடம் ஆயுதம் வாங்குவதற்கு இந்தியா இலங்கைக்கு நிதியுதவி வழங்காதெனவும் இந்தியா விரும்பினால் கொடுப்பனவு அடிப்படையில் ஆயுதங்களையே வழங்குமெனவும் அவர் குறிப்பிட்டார்.
இது இவ்வாறிருக்க இந்தச் செய்தி சரியானதென்றால் தமிழர்களும் தமிழ்தேசிய கூட்டமைப்பும் தமிழ் மக்களுக்கு எதிரான இலங்கை அரசின் இன அழிப்பு நடவடிக்கைகளுக்கு புதுடில்லி உதவியளித்து வருகின்றது என்ற முடிவுக்கு வராமல் இருக்க முடியாதென யாழ். மாவட்ட எம்.பி. சுரேஷ் பிரேமச்சந்திரன் கூறியுள்ளார்.
தமிழர்களை யுத்த ரீதியாக இலங்கை அரசாங்கம் நசுக்குவதற்காக இலங்கைக்கு உதவுவதன் மூலம் வட, கிழக்கில் தமிழ் பகுதிகளில் தனது பொருளாதார நலன்களை மேம்படுத்தி பாதுகாக்க முடியுமென இந்தியா நினைக்கிறது. அங்குள்ள தமிழர்களின் அவல நிலைமையை பொருட்படுத்தாமல் உதாசீனம் செய்து இந்நடவடிக்கை இடம்பெற்றால் தமக்கு மத்தியில் இந்திய முதலீடுகள் இடம்பெறுவதை அவர்கள் வரவேற்க மாட்டார்கள் என்றும் சுரேஷ் பிரேமச்சந்திரன் எச்சரித்தார்.
திருமலை மாவட்டத்தில் சம்பூரில் 500 மெகாவாட் அனல் மின் உலையை நிறுவ இந்திய அரசாங்கம் இணங்கியிருப்பதையும் சுரேஷ் பிரேமச்சந்திரன் சுட்டிக்காட்டியுள்ளார்.
23 கிராமங்களைச் சேர்ந்த 17 ஆயிரம் தமிழர்களின் நிலைமையை கவனத்திற்கெடுக்காமல் இந்த நடவடிக்கைக்கு இந்தியா இணங்கியுள்ளது. சம்பூருக்கு வெளியே இந்தப் 17 ஆயிரம் தமிழர்களும் அகதி முகாம்களிலும் ஏனைய இடங்களிலும் அவல வாழ்வை மேற்கொள்கின்றனர்.