* மோசமான காலநிலை சில தினங்கள் நீடிக்கும்
ரொஷான் நாகலிங்கம்
நாட்டில் கடந்த சில தினங்களாக பெய்துவரும் கடும் மழையாலும் வெள்ளப்பெருக்கு மற்றும் மண்சரிவாலும் பாதிக்கப்பட்டு 7,200 இற்கும் மேற்பட்ட குடும்பங்கள் இடம்பெயர்ந்துள்ளதாக தேசிய அனர்த்த முகாமைத்துவ நிலையப் பணிப்பாளர் என்.பி. ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார்.
இரத்தினபுரி, கேகாலை, களுத்துறை, நுவரெலியா, புத்தளம் மாவட்டங்களிலும் பியகம கிருந்திவெல மற்றும் களனிப் பகுதிகளே பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
வங்காள விரிகுடாவில் ஏற்பட்ட தாழமுக்கம் காரணமாகவே நாட்டின் தெற்கு மற்றும் மேற்குப் பகுதிகளில் கடந்த சில தினங்களாக கடும் காற்றுடன் மழை பெய்துவருவதாக வானிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது.
யாழ்ப்பாணத்துக்கு 650 கிலோமீற்றர் வடகிழக்காகவே இந்த தாழமுக்கம் ஏற்பட்டுள்ளதாக வானிலை அவதான நிலையத்தை சேர்ந்த ஆனந்த பெரேரா தெரிவித்ததுடன் இந்தக் காலநிலை அடுத்த சில தினங்களுக்கு தொடர்ந்திருக்குமெனவும் தெரிவித்தார்.
நேற்று செவ்வாய்க்கிழமை மழை ஓரளவு தணிந்திருந்த நிலையில் இரத்தினபுரி பகுதியில் நேற்று முற்பகல் 10.30 மணிக்கு முடிவடைந்த 24 மணிநேரத்தில் 60 மில்லிலீற்றர் மழை பெய்ததாக அம்மாவட்டத்துக்குப் பொறுப்பான வளிமண்டலவியல் திணைக்களத்தின் அதிகாரியொருவர் தெரிவித்தார்.
இரத்தினபுரி களுகங்கையின் நீர்மட்டம் நேற்று முன்தினம் திங்கட்கிழமை 27 அடியாகவிருந்த போதிலும் நேற்று 25 அடியாக குறைவடைந்துள்ளது. அங்கு வெள்ள நீர் வழிந்தோடியதையடுத்து, இரத்தினபுரி நகரில் நேற்று போக்குவரத்து வழமைக்குத் திரும்பியது.
கொழும்பு - பதுளைக்கிடையிலான போக்குவரத்தும் நேற்று வழமைக்குத் திரும்பியபோதும் இரத்தினபுரி - பாணந்துறை வீதியில் சில பகுதிகளில் கடும் வெள்ளம் காணப்பட்டதால் போக்குவரத்து நடைபெறவில்லை.
களனி கங்கை மற்றும் அதன் கிளை ஆறுகளில் நீர் பெருக்கெடுத்ததால் கேகாலை, எட்டியாந்தோட்டை, தெஹியோவிற்ற, புளத்கோபிட்டிய, ருவான்வெல மற்றும் தெரணியகலை பகுதிகளில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதுடன் இதனை சப்ரகமுவ மாகாண முதலமைச்சர் மகிபால ஹேரத் நேரடியாக சென்று பார்வையிட்டுள்ளார்.
இதேவேளை, களனி கங்கையின் தாழ்வான பகுதிகளான களனி - பியகம வீதியில் கடுவெல நகரை அண்மித்த 13 ஆவது மைல் பகுதியில் சியம்பலாவ சந்தியும் பியகம, பண்டாரவத்தை சந்தியும் நீரில் மூழ்கியுள்ளன.
சேதுவத்தை கறுத்தப்பாலத்துக்கு அண்மையிலுள்ள வீதி நீரில் மூழ்கியுள்ளதால் அப்பகுதியூடான போக்குவரத்து தடைப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் அதிகரித்து வருவதால் அது தொடர்பாக அபாய எச்சரிக்கை மேற்கொள்ளவுள்ளதாக நீர்ப்பாசன திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதேவேளை, கலவெல்லாவ, ஹொரண, அக்குராவ தோட்ட நீர்மட்டம் குறைவடைந்துள்ள போதும் மண்சரிவு குறித்து அவதானமாக இருக்குமாறு தேசிய கட்டிட ஆராய்ச்சி நிலைய பொறியியலாளர் லக்சிறி இந்திரஜித் தெரிவித்துள்ளார்.
இதுபோல் எகலியகொட, கந்தேதென்ன, அத்தலிகொட, பெல்மடுவ, பாத்தகட, இரத்தினபுரி மற்றும் ஏலபெத்த பகுதிகளிலும் மண்சரிவு மற்றும் மண்கட்டிகள் வீழ்வதற்கான அபாயநிலை தோன்றியுள்ளதால் அவதானமாக இருக்குமாறு கேட்டுக்கொண்டார்.
இதேவேளை, பாதிக்கப்பட்ட மாவட்டங்களுக்கு தேவையான நிவாரண நடவடிக்கைகள் அப்பிரதேசங்களிலுள்ள மாவட்ட செயலகங்கள் மூலம் மேற்கொள்ளப்படுவதுடன் இதற்குத் தேவையான நிதியை வழங்கியுள்ளதாக அனர்த்த சேவைகள் அமைச்சர் அமீர் அலி தெரிவித்தார்.
இதேவேளை, மேற்படி அனர்த்தத்தால் ஏழு பேர் பலியானதுடன் இவர்களது மரணச் சடங்குகளுக்கு 15 ஆயிரம் ரூபா அரச அதிபர் ஊடாக வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
தென்பகுதியில் ஏற்பட்ட கடல் கொந்தளிப்பினால் சேதமடைந்த மீன்பிடிப் படகுகளுக்கான நட்டஈடு வழங்குவது குறித்த தீர்மானமெதனையும் மேற்கொள்ளவில்லையென மீன்பிடி அமைச்சின் செயலாளர் தெரிவித்தார்.
அத்துடன், இது தொடர்பாக தீர்மானங்களை எடுக்கவுள்ளதாகவும் தெரிவித்தார்.