* சமாதான வழியில் மோதலுக்கு தீர்வுகாண தெஹ்ரான் ஆலோசனை
உலக அணு ஆயுதப் பரிகரணத்திற்கான தேவையை ஈரானும் இலங்கையும் நேற்று செவ்வாய்க்கிழமை வலியுறுத்தியுள்ளன.
இலங்கைக்கான, ஈரான் ஜனாதிபதி அஹகமதி நிஜாத் மேற்கொண்டிருந்த உத்தியோகப்பூர்வ விஜயத்தை முன்னிட்டு இரு நாடுகளும் கூட்டாக விடுத்திருந்த அறிக்கையில்;
உலகின் அணுஆயுத சக்தியுடைய வல்லரசுகள் தமது அணு ஆயுதங்களை முழுமையாக இல்லாதொழிக்க வேண்டுமென வலியுறுத்தியுள்ளன.
ஈரான், இலங்கைத் தூதுக்குழுக்களுக்கிடையிலான பேச்சு வார்த்தைகள் காத்திரமானதாகவும் சாதகமான முறையிலும் அமைந்திருந்ததாக கூட்டறிக்கையில் பாராட்டப்பட்டுள்ளது. இருதரப்பும் பிராந்திய, சர்வதேச மாற்றங்கள் குறித்தும் விரிவாக பேச்சுவார்த்தை மேற்கொண்டனர்.
அத்துடன், இருதரப்பு ரீதியில் அரசியல், கலாசார, பொருளாதார, வர்த்தக, விஞ்ஞான, தொழில்நுட்பத் துறைகளில் ஒத்துழைப்பை மேலும் விரிவுபடுத்துவதற்கான தேவை குறித்தும் இரு நாடுகளும் கோடிட்டுக் காட்டியுள்ளன.
அத்துடன், இரு நாடுகளும் பயங்கரவாதத்தின் சகல வடிவங்களையும் கண்டித்திருப்பதுடன் அதனை அழித்தொழிக்க இரு தரப்பு மற்றும் சர்வதேச ஒத்துழைப்பு குறித்தும் வலியுறுத்தியுள்ளன.
நட்பு நாடான இலங்கையின் இறைமை ஆட்புல ஒருமைப்பாட்டிற்கான ஆதரவை ஈரான் வெளிப்படுத்தியதுடன் சமாதான வழியில் மோதலுக்குத் தீர்வு காணுமாறும் கேட்டுக் கொண்டுள்ளது.
அதேசமயம், அணுவாயுத பரிகரண உடன்படிக்கைக் கட்டமைப்புக்குள் சர்வதேச அணு சக்தி முகவர் நிலையத்தின் கண்காணிப்பின் கீழ் கொள்ளப்படும் ஈரானின் அணுத் திட்டத்திற்கு இலங்கை தனது ஆதரவை வெளிப்படுத்தியுள்ளது.
அத்துடன், பலஸ்தீனம் மீதான இஸ்ரேலின் வன்முறை தொடர்பான கவலைகளையும் இரு நாடுகளும் வெளிப்படுத்தியுள்ளன.