முகமாலை கிளாலிப் பகுதிகளில் படையினருக்கும் புலிகளுக்குமிடையே தீவிரமான யுத்தம் நடந்து முடிந்திருக்கும் நிலையில், புலிகள் இயக்கம் தெரிவித்த அறிக்கையில் முகமாலையில் அவர்கள் பெரும் வெற்றியைப் பெற்றுள்ளதாகவும் படையினர் தரப்புக்கு பெரும் இழப்புகளை ஏற்படுத்தியிருப்பதாகவும் இந்த யுத்தம் அரசுக்கும் படையினருக்கும் மிகப்பெரிய தோல்வியெனவும் கூறியுள்ளது. அவ்வாறே இவ்வாறான அறிக்கைகளை புலிகள் இயக்கம் அதன் சர்வதேச ஊடகங்கள் மூலமும் ஆதரவு ஊடகங்கள் மூலமும் உலகம் முழுவதும் அவர்களின் முகமாலை வெற்றி பற்றி பெரிதுபடுத்தி பிரசாரங்களை மேற்கொண்டது.
இந்நிலையில், அரச பாதுகாப்புத்துறை தரப்பிலும் அரச ஊடகங்கள் தரப்பிலும் முகமாலைப் போர் பற்றியும் படையினர் மற்றும் புலிகள் தரப்பில் ஏற்பட்ட உயிரிழப்புகள் மற்றும் களமுனை நிலைவரம் பற்றி வெளியிடப்பட்ட தகவல் அறிவிப்புகள் "நினைத்து நினைத்து விட்டு விட்டு" தெரிவித்த அறிக்கைகள் போல் பெரும்பாலும் அமைந்திருந்ததால், புலிகள் இயக்கம் முகமாலைப் போரில் புலிகள் தரப்பில் இழப்புகள் மிகக் குறைவு எனவும் படையினர் தரப்பில் பெரும் இழப்பு எனவும் முகமாலையில் புலிகள் இயக்கத்துக்கு மாபெரும் வெற்றி எனவும் கூறிய தகவல்களை உண்மையென நம்பிய மக்களும் அதிகமாகும்.
அதேவேளை, முகமாலை கிளாலியில் தீவிர யுத்தம் நிகழ்ந்துகொண்டிருந்த சந்தர்ப்பத்தில் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோதாபய ராஜபக்ஷவும் நாட்டிலிருந்து வெளியே சென்ற செயல் முகமாலை களமுனை பற்றி உண்மையான தகவல்களை வெளியிடுவதில் பாதிப்பை ஏற்படுத்தியதுடன், புலிகள் இயக்கம் தரப்பில் வெளியிடப்பட்ட பொய்யான தகவல்களையும் உண்மையென நம்பக்கூடிய ஒரு பாதிப்பை ஏற்படுத்தியது.
லங்காதீப விமர்சனம்: 27.04.2008