அரசபடையினருக்கும் புலிகளுக்குமிடையே முகமாலையில் தீவிர யுத்தம் ஆரம்பித்தவேளையிலிருந்தே களமுனை நிலைவரம் பற்றி நேரத்துக்கு நேரம் பல்வேறு தகவல்களை சுயாதீன ஊடகங்களைச் சேர்ந்த பத்திரிகைகள், தொலைக்காட்சிகள், ஒளிபரப்பு சேவைகளும் வெளியிட்டுக் கொண்டிருந்தன. இவைகளின் தகவல்களுக்கேற்பவும் அரசதரப்பு தகவல்களுக்கேற்பவும் வெளியிடப்பட்ட அறிக்கைகளில் உயிரிழந்த புலிகள் மற்றும் படையினரின் எண்ணிக்கை மற்றும் காயத்துக்குள்ளானவர்களின் எண்ணிக்கைகளைப் பொறுத்தவரை தொடர்ந்து வேறுபாடுகள் இருந்தே வந்துள்ளன.
எவ்வாறாயின் அரசதரப்பில் உறுதிப்படுத்தப்பட்ட பாதுகாப்புத் தகவல்களுக்கேற்ப உயிரிழந்த புலிகளின் எண்ணிக்கை நூற்றுக்கும் மேலாகும். அவ்வாறே 200 க்கும் மேற்பட்ட புலிகள் படுகாயங்களுக்குள்ளாகினர். ஆயினும் பாதுகாப்புத்துறையின் புலனாய்வுப் பிரிவு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ள உறுதிப்படுத்தப்பட்ட தகவல்களுக்கேற்ப களமுனையிலிருந்து இறந்த புலிகளின் உடல்கள் சக புலிகளால் உடனுக்குடன் அகற்றப்பட்டு முல்லைத்தீவு, கனகராயன்குளம், கிளிநொச்சி ஆகிய பிரதேசங்களுக்குக் கொண்டுசெல்லப்பட்டதாகவும் தெரிய வந்துள்ளது. இவ்வாறு 55 இறந்த புலிகளின் உடல்கள் முல்லைத்தீவுக்கு சகபுலிகளால் அனுப்பிவைக்கப்பட்டுள்ளதுடன், 20 புலிகளின் உடல்கள் சனகராயன்குளத்துக்கும் 30 முதல் 35 வரையிலான புலிகளின் உடல்கள் கிளிநொச்சிக்கும் எடுத்துச் செல்லப்பட்டன.
ஆயினும் புலிகள் இயக்கம் சார்ந்த `தமிழ் நெற்' இணையத்தளம் முகமாலை, கிளாலி யுத்தத்ததின் போது உயிரிழந்த புலிகளின் எண்ணிக்கைபற்றித் தெரிவித்த தகவல்கள் நம்பமுடியாதவகையில் குறைவாகவே கூறப்பட்டன. இவ்வாறு `தமிழ் நெற்' முதலில் தெரிவித்த தகவல்களில் முகமாலைப் போரில் 16 புலிகள் மட்டுமே உயிரிழந்ததாகக் கூறியுள்ளது. ஆயினும் பாதுகாப்பு அமைச்சின் இணையத்தளம் மற்றும் தேசிய பாதுகாப்பு ஊடக மத்திய நிலையம் ஆகியவை படையினர் தரப்பில் உயிரிழந்தவர்கள் பற்றிய உண்மையான தகவல்களையே வெளியிட்டுள்ளன. இதற்கேற்ப முகமாலை, கிளாலிப் போரில் மொத்தம் 43 படையினர் உயிரிழந்ததாகவும் 33 படையினர் காணாமல்போயுள்ளதாகவும் மற்றும் 169 படையினர் காயங்களுக்குள்ளானதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
லங்காதீப விமர்சனம்: 27.04.2008