இந்திய கிரிக்கெட் கூட்டமைப்பு (சி.எப்.ஐ.) என்ற பெயரில் புதிய அமைப்பொன்று நேற்று தொடங்கப்பட்டுள்ளது. சஞ்வ் குமார் ஷர்மா இதற்கு தலைவராகவும், அமர்ஜித் குமார் தலைமைச் செயலராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இத்தகவலை தெரிவித்த அமர்ஜித் குமார், சண்டிகாரில் மே 28 ஆம் திகதி முதல் 31 ஆம் திகதி வரை இந்தக் கூட்டமைப்பு நடத்தும் அனைத்திந்திய 17 வயதுக்குட்பட்டோருக்கான பெடரேஷன் கிண்ண கிரிக்கெட் போட்டிகள் நடைபெறுமெனத் தெரிவித்தார்.
அனைத்து வயதினருக்குமான ஆடவர் மகளிர் கிரிக்கெட் போட்டிகளை இந்திய கிரிக்கெட் கூட்டமைப்பு சீரான முறையில் நடத்தவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
இது தவிர கிரிக்கெட் பற்றிய அனைத்திந்திய கருத்தரங்கங்களை நடத்தவும், தேசிய கிரிக்கெட் அக்கடமி, மண்டல கிரிக்கெட் அக்கடமி, நடுவர்கள் குழு, பயிற்சியாளர்கள் ஆகியவற்றை உருவாக்கவும் திட்டமிட்டுள்ளனர்.
இந்திய கிரிக்கெட் சபையை விட ஏற்கனவே இந்திய கிரிக்கெட் லீக் (ஐ.சி.எல்), இந்திய பிரிமியர் லீக் (ஐ.பி.எல்) என இரு புதிய அமைப்புக்கள் உருவான நிலையில் தற்போது 3 ஆவது அமைப்பொன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது.