இந்திய ஹொக்கி கூட்டமைப்பில் நிலவும் குழப்பமான சூழ்நிலையை அடுத்து சர்வதேச ஹொக்கி கூட்டமைப்பு, "பிரச்சினைகளுக்கு இந்திய ஒலிம்பிக் சங்கம் விரைவில் தீர்வு காண வேண்டும். இல்லையென்றால் 2010 ஹொக்கி உலகக் கிண்ணப் போட்டி இந்தியாவில் நடைபெறுவது கேள்விக்குறியாகி விடுமென எச்சரித்துள்ளது.
இந்திய ஹொக்கி அணி ஒலிம்பிக் வாய்ப்பை இழந்த சோகத்திலிருந்து ரசிகர்கள் முற்றிலும் மீளாத நிலையில், அடுத்த சர்ச்சை பூதாகரமாக வெடித்தது. அஸ்லான் ஷாஹொக்கி தொடருக்கான அணியில் இடம்பெற்றுத் தருவதாக கூறி வீரர் ஒருவரிடம் 5 இலட்சம் ரூபா லஞ்சம் வாங்கியதாக இந்திய ஹொக்கி கூட்டமைப்பு செயலர் ஜோதிகுமரன் மீது குற்றஞ்சாட்டப்பட்டது.
இதையடுத்து, அவர் பதவியை ராஜிநாமா செய்தார். ஹொக்கி கூட்டமைப்பு தலைவர் கே.பி.எஸ். கில்லும் தனது பதவியை துறக்க வேண்டுமென மத்திய அமைச்சர்கள் கண்டனம் தெரிவித்தனர். இந்நிலையில் சர்வதேச ஹொக்கி கூட்டமைப்பு, இந்திய ஒலிம்பிக் சங்கம், இந்தப் பிரச்சினைகளுக்கு விரைவில் தீர்வு காண வேண்டும். இல்லையென்றால் 2010 உலகக் கிண்ண ஹொக்கி கேள்விக்குறியாகி விடுமென மிரட்டியுள்ளது.
இது குறித்து சர்வதேச ஹொக்கி கூட்டமைப்பு தலைவர் எல்ஸ் வான் வைஸ்மேன் அளித்த பேட்டியில்;
ஹொக்கி கூட்டமைப்பு செயலர் ஒருவர் லஞ்சம் வாங்கியதாகக் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளார். ஹொக்கி வரலாற்றில் இது போன்ற செய்தியை நான் கேட்டதேயில்லை. இந்திய ஹொக்கி கூட்டமைப்பை, இந்திய ஒலிம்பிக் சங்கம் நிர்வகிக்க வேண்டுமென விரும்புகிறோம்.
2010 இல் உலகக் கிண்ணத்தை நடத்துவது குறித்து இறுதி முடிவெடுக்க இன்னும் 2 வாரம் மட்டுமே உள்ளது. இது குறித்து இந்திய ஒலிம்பிக் சங்கத் தலைவர் சுரேஷ் கல்மாடியிடம் தெளிவாகப் பேசிவிட்டேன். உலகக் கிண்ணத் தொடர் இந்தியாவில் நடப்பது அவர் கையில் தான் இருக்கிறதெனவும் தெரிவித்தார்.