ஐ.பி. எல்.தொடரில் வீழ்த்த முடியாத அணியாக வலம் வருகிறது சென்னை சுப்ப கிங்ஸ். நேற்று முன்தினம் நடந்த பரபரப்பான லீக் போட்டியில் கப்டன் தோனியின் அதிரடி கைகொடுக்க டிராவிட்டின் பெங்களூர் ரோயல் சலஞ்சர்ஸ் அணியை 13 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. இதன்மூலம் தொடர்ந்து நான்காவது வெற்றியைப் பதிவு செய்துள்ளது. கடைசிக் கட்டத்தில் தடுமாறியதால் டிராவிட் அணி கைக்கு எட்டிய வாய்ப்பை பரிதாபமாக கோட்டை விட்டது.
இந்தியன் பிரிமியர் லீக் (ஐ.சி.எல்) தொடரில் பெங்களூரில் நடந்த லீக் போட்டியில் தோனியின் சென்னை சுப்ப கிங்ஸ் அணி டிராவிட் தலைமையிலான பெங்களூர் ரோயல் சலஞ்சர்ஸ் அணியைச் சந்தித்தது. பெங்களூர் அணியில் சுழல் மன்னன் கும்பிளே, சுனில் ஜோஷி நீக்கப்பட்டனர். டேல் ஸ்டைன், வாசிம் ஜாபர் வாய்ப்புப் பெற்றனர். சென்னை அணியில் முரளிதரன் நீக்கப்பட்டு மோர்கல் இடம்பெற்றார். நாணயச் சுழற்சியில் வென்ற தோனி முதலில் துடுப்பாட்டத்தைத் தேர்வு செய்தார்.
முதல் ஓவரை ஸ்டைன் மணிக்கு 144 கி.மீ. வேகத்தில் வீசி மிரட்ட ஒரு ஓட்டம் தான் கிடைத்தது. சுப்ப போர்மிலிருந்த ஹைடன் இம்முறை ஏமாற்றினார். வழக்கத்துக்கு மாறாக படு நிதானமாக விளையாடிய இவர் 19 பந்தில் 13 ஓட்டங்கள் எடுத்து சகீர்கானின் பந்தில் போல்டானார். மறுமுனையில் பார்த்திவ் பிரவீண் பந்தில் சிக்சர் அடித்து அசத்தினார். ஆனால், அடுத்த பந்தில் இவரை பிரவீண் வெளியேற்றி பதிலடி கொடுத்தார். பார்த்திவ் 21 ஓட்டங்கள் எடுத்தார்.
பின்னர் சுரேஷ் ரெய்னா, மைக்கேல் ஹசி கலக்கினர். தொடக்கத்தில் ஒன்று, இரண்டு ஓட்டங்களாக எடுத்த இவர்கள் மெல்ல அதிரடிக்கு மாறினர். அகில் மற்றும் பிரவீண் பந்தில் தலா ஒரு சிக்சர் அடித்து ரெய்னா அசத்தினார். இவர் 17 பந்தில் 28 ஓட்டங்கள் எடுத்த நிலையில் ரன் அவுட்டானார்.
அடுத்து கப்டன் தோனி வந்தார். ஸ்டைன் வேகத்தில் தொடர்ச்சியாக இரண்டு பவுண்டரிகள் விளாசினார். மறுமுனையில் ஹசியும் மிரட்டினார். இவர் அகில் ஓவரில் அடுத்தடுத்து இரண்டு சிக்சர் அடித்தார். இவர்கள் தொடர்ந்து பவுண்டரிகளும் சிக்சர்களும் அடித்து தூள் கிளப்பினர். கலிஸ் வீசிய 17 ஆவது ஓவரில் ஹசி இரண்டு பவுண்டரி, தோனி ஒரு சிக்ஸ் அடிக்க 16 ஓட்டங்கள் கிடைத்தது.
ஸ்டைன் வீசிய 19 ஓவது ஓவரில் தோனி 4 பவுண்டரி , ஒரு சிக்சர் என 24 ஓட்டங்கள் எடுக்க ஜெற் வேகத்தில் உயர்ந்தது. தோனி அரைச்சதம் அடித்து அசத்தினார். சகிர் வீசிய கடைசி ஓவரில் தோனி இரண்டு பவுண்டரி, ஒரு சிக்சர் விளாசினார். இவர் 3 சிக்சர் , 9 பவுண்டரி உட்பட 30 பந்தில் 65 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழந்தார். ஹசி 47 ஓட்டங்கள் (3 பவுண்டரி, 2 சிக்சர்) எடுத்தார். சென்னை சுப்ப கிங்ஸ் அணி 20 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 178 ஓட்டங்கள் எடுத்தது.
ஓரளவு கடினமான இலக்கை விரட்டிய பெங்களூர் அணிக்கு தொடக்கத்தில் அதிர்ச்சி. கோனி பந்தில் சிப்லி(8) ஆட்டமிழந்தார். பின்னர் ரோஸ் டெய்லர், ஜாபர் இணைந்து அருமையாக விளையாடினர். இருவரும் அதிரடியாக ஓட்டம் எடுக்க பெங்களூர் அணிக்கு வெற்றி வாய்ப்பிருந்தது. இந்த நேரத்தில் பழனி அமர்நாத் பந்தில் ஜாபர் (50) ஆட்டமிழக்க சிக்கல் ஆரம்பமானது.
இதற்குப்பின் வந்தவர்கள் ஏனோ தானோ என விளையாடினர். இதனால், 2 விக்கெட் இழப்புக்கு 102 ஓட்டம் எடுத்து வலுவாக இருந்த அணி அதலபாதாளத்தில் விழுந்தது. கலிஸ் (14) ஜோகிந்தர் வேகத்தில் வீழ்ந்தார். மீண்டும் பந்துவீச வந்த பழனி ஆபத்தான ரோஸ் டெய்லரை (53) வெளியேற்றி திருப்புமுனை ஏற்படுத்தினார்.
மிகவும் எதிர்பார்க்கப்பட்ட கப்டன் டிராவிட் (0) கோனி பந்தில் ஆட்டமிழக்க பவுச்சர் (4) ஏமாற்றினார். பின்வரிசை வீரர்கள் விரைவில் நடையைக் கட்ட பெங்களூர் ரோயல் சலஞ்சர்ஸ் அணி 19.4 ஓவரில் 165 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்து தோல்வி அடைந்தது.
கடைசிக் கட்டத்தில் பதற்றப்படாமல் அணியைக் கம்பீரமாக வழிநடத்திய கப்டன் தோனி மீண்டும் ஒரு முறை வெற்றி நாயகனாக ஜொலித்தார். ஆட்ட நாயகன் விருதையும் தட்டிச் சென்றார்.