Thinakkural Tamil News Paper - The Independent Voice in Tamil

The Independent Voice in Tamil
Friday, April 04, 2008


Download latha tamil font
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
  Sri Lanka Forecast
 
 
 
 
 
 
 
HOT NEWS
Articles
ஐ.சி.ஆர்.சி.யின் கள நடவடிக்கைகள் பற்றிய அறிக்கை
[04 - April - 2008] [Font Size - A - A - A]
அனுராதபுரத்தில் மதவாச்சி சோதனைச் சாவடியிலும் வவுனியாவில் ஓமந்தை நுழைவாயிலிலும் இலங்கை அரசாங்கத்தினால் மேலதிக பாதுகாப்பு ஏற்பாடுகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. இதனையடுத்து விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசத்திற்கும் அரசாங்கத்தின் கட்டுப்பாட்டுப் பிரதேசத்திற்கும் இடையில் பொதுமக்களின் போக்குவரத்து குறைவடைந்துள்ளதுடன் பொருட்களை ஏற்றிச் செல்லும் லொறிகள் இடைநடுவில் ஸ்தம்பிதம் அடையும் நிலையும் ஏற்படுகின்றன. ஓமந்தை நுழைவாயிலில் நீண்ட காலம் காத்திருக்கும் லொறிகளை சோதனை நடவடிக்கைகளின் பின்னர் ஓமந்தைக்கு அப்பால் அனுப்பி உதவும்வண்ணம், நுழைவாயில்களில் ஐ.சி.ஆர்.சி.யின் பிரசன்னத்தை ஐந்திலிருந்து ஆறு நாளாக அதிகரிக்குமாறு அரசாங்கம் விடுத்த கோரிக்கைக்கு ஐ.சி.ஆர்.சி.செவிமடுத்தது. இந்த நடவடிக்கைகளைத் துரிதப்படுத்துவதற்காக அரசாங்கமும் மேலதிக ஆளணியினரை ஓமந்தை நுழைவாயிலில் நிறுத்தியிருந்தது.

மாசி மாதத்தில் மட்டும் இருபக்கமும் இருந்து ஓமந்தை நுழைவாயிலைக் கடந்த கிட்டத்தட்ட 25,000 பொதுமக்களின் பயணப் பாதுகாப்பிற்கு ஐ.சி.ஆர்.சி.கவனம் எடுத்தது. மருத்துவ உதவியைப் பெறுவதற்காக 400 க்கும் மேற்பட்டோர் வடக்கிலிருந்து தெற்கிற்குப் பயணம் செய்தனர். அத்துடன், 200 க்கும் மேற்பட்ட அம்புலன்ஸ் வண்டிகள் உள்ளடங்கலாக 3,500 வரையான வாகனங்களின் போக்குவரத்திற்கும் ஐ.சி.ஆர்.சி.பணியாளர்கள் உதவினர்.

"வன்னியில் வாழும் பொதுமக்கள் அரசாங்கக் கட்டுப்பாட்டுப் பகுதிக்கும் விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிக்கும் இடையில் மருத்துவ உதவிகள், தமது உறவுகளைச் சந்தித்தல். தொழில் முயற்சிகள் சம்பந்தமாக போய்வரக் கூடியதாக இருக்க வேண்டும்" என கொழும்பிலுள்ள ஐ.சி.ஆர்.சி.யின் தலைமைப் பேராளர் டூன் வன்டன்ஹீவ் தெரிவித்தார். "ஆனால் அதேவேளை தாங்கள் வாழும் பிரதேசங்களிலும் தமக்குத் தேவையான மருந்துப் பொருட்களையும் ஏனைய பொருட்களையும் அவர்கள் கொள்வனவு செய்யக்கூடியதாக இருக்க வேண்டும். அதனால் தான் வன்னிக்குப் பொருட்களைக் கொண்டு செல்லும் லொறிகளின் பயணத்தை நாம் முக்கியமானதாகக் கருதுகின்றோம். இதனாலேயே ஓமந்தை சோதனைச் சாவடியில் நாம் ஆறு நாட்கள் பிரசன்னமாயிருக்கிறோம்" என்று அவர் மேலும் தெரிவித்தார்.

நடுநிலை இடையீட்டாளராகப் பணியாற்றல்

முன்னரங்க நிலைகளூடாகப் போரில் மரணித்த வீரர்களது உடல்களை உரியவர்களிடத்தில் சமர்ப்பிப்பதன் மூலம் இவர்களின் கதி என்னவென்று தெரியாதிருக்கும் நிலைமையைத் தவிர்த்துக் கொள்ளும் உதவியை ஐ.சி.ஆர்.சி.செய்து வருகிறது. இருதரப்பினரும் உடல்களைப் பொறுப்பேற்றுக் கொள்வதாக சம்மதம் வழங்கிய பிற்பாடே அரசாங்கத்திற்கும் விடுதலைப்புலிகளுக்கும் இடையில் உள்ள சூனியப் பிரதேசம் ஊடாக உடல்கள் எடுத்துச் செல்லப்பட்டு கையளிக்கப்படுகின்றன. போரில் மரணமடைந்த 40 போர்வீரர்களின் உடல்கள், மாசி மாதத்தில் இவ்விதம் எடுத்துச் செல்லப்பட்டு கையளிக்கப்பட்டிருந்தன.

பொதுமக்களைப் பாதிக்கும் மனித நேயச் சட்ட மீறல்களை ஐ.சி.ஆர்.சி.நாடு பூராக தொடர்ந்தும் கண்காணித்து வருவதுடன் இது பற்றி மோதல் தரப்பினருடன் பேச்சுக்களை நடாத்தி வருகின்றது. காணாமல் போதல் அல்லது கைது செய்யப்படுதல், நீதிக்குப் புறம்பான கொலைகள், துன்புறுத்தல்கள் போன்றவை தொடர்பாக சம்பந்தப்படுபவர்களின் குடும்பங்கள் தொடர்ந்தும் ஐ.சி.ஆர்.சி.யிடம் முறையிட்டு வருகின்றன.

ஐ.சி.ஆர்.சி.க்கு அரச அதிகாரிகளும் விடுதலைப்புலிகளும் ஒத்துழைப்பு வழங்கியதன் மூலம் 45 வெவ்வேறு இடங்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ள 520 கைதிகளுடன் 60 க்கு மேற்பட்ட தனிப்பட்ட சந்திப்புகளை அல்லது அவர்களின் பதிவுகளை மேற்கொண்டது.

குடும்பங்களை மீள இணைத்தல்

ஐ.சி.ஆர்.சி.இலங்கை செஞ்சிலுவைச் சங்கத்துடன் இணைந்து மோதல்களால் பிரிந்துள்ள குடும்ப அங்கத்தவர்களிடையே 540 க்கு கிட்டிய குடும்பச் செய்திகளைப் பரிமாற்றம் செய்தது.

மட்டக்களப்பில் மீளத்திரும்பும் மக்களுக்கு உதவுதல்

மட்டக்களப்பில் மீளத்திரும்பும் இடம் பெயர்ந்த மக்களுக்கு உதவும் பணியின் ஒரு பகுதியாக, மாவட்டத்தின் மேற்குப் பகுதியில் வாகரையில் உள்ள 404 குடும்பங்களுக்கும் பட்டிப்பளையில் உள்ள 77 குடும்பங்களுக்கும் உதவக்கூடிய உள்ளூர் மீன்பிடித் திட்டத்தை ஐ.சி.ஆர்.சி.தொடந்தும் நடாத்தி வருகிறது. 2006 ஆம் ஆண்டின் இறுதிப் பகுதிக்கும் 2007 கார்த்திகை மாதத்திற்கும் இடைப்பட்ட காலப்பகுதியில் இடம் பெற்ற இராணுவ நடவடிக்கைகளின் காரணமாக இந்தக் குடும்பங்களில் அநேகமானவை இடம்பெயர்திருந்தன. மீன்பிடித்தொழில் பிரதான வாழ்வாதாரமாக இருக்கும் இந்த சமூகங்களின் உரிய தேவைகள் தொடர்பில் மீன்பிடி அமைச்சு வழங்கிய தகவல்களின் அடிப்படையிலேயே இந்தத் திட்டம் ஐ.சி.ஆர்.சி.யினால் ஆரம்பிக்கப்பட்டது.

இதில் முதல் கட்ட நடவடிக்கையாக தை மாதம் 2008 இல் 400,000 மீன் குஞ்சுகள் அப்பிரதேசத்தில் உள்ள நான்கு மீன்பிடிக் குளங்களில் விடப்பட்டன.

சுகாதார வசதிகள்

அவசரகால நிலைமைகளுக்கு உதவும் வண்ணம் அடிப்படை மருத்துவ மற்றும் சத்திரசிகிச்சைக்கான பொருட்களை அனுராதபுர மாவட்டத்திலுள்ள பதவியா மற்றும் சம்பத்நுவர மருத்துவமனைகளுக்கு வழங்கி ஐ.சி.ஆர்.சி.உதவியிருந்தது.

திருகோணமலை மாவட்டத்தில் சுகாதார அமைச்சு முன்னெடுக்கும் டெங்குக் காய்ச்சல் நோய்த்தடுப்பை மேலும் ஊக்குவிக்கும் முகமாக அப்பிரதேசத்தில் உள்ள ஐந்து வயதிற்குக் குறைந்த பிள்ளைகள் உள்ள குடும்பத்திற்கென 400 நுளம்புவலைகளும் ஐ.சி.ஆர்.சி.யினால் விநியோகிக்கப்பட்டன.

யாழ்ப்பாணத்திலுள்ள ஊனமுற்றோர்க்கான செயற்கை அவயவங்கள் தயாரிக்கும் ஜெய்ப்பூர் நிலையத்திற்கு செயற்கை அவயவங்களையும், நடமாட உதவும் ஊன்று கோல்களையும் ஐ.சி.ஆர்.சி.வழங்கியது. வெடிக்காத நிலையில் கைவிடப்பட்ட வெடி பொருட்கள் அல்லது கண்ணிவெடிகளினால் பாதிக்கப்பட்ட 15 பேர் உள்ளடங்கலாக, தமது அவயங்களை இழந்த ஏறத்தாழ 30 பேருமாக 40 க்கும் அதிகமான நோயாளர்கள் இதனால் பயனடைந்தனர்.

கீழ்வரும் பணிகளையும் கடந்த பெப்ரவரி மாதத்தில் ஐ.சி.ஆர்.சி.மேற்கொண்டிருந்தது.

வைத்திய வசதி

கொழும்பில் மருத்துவ உதவிகளை பெற்றுக் கொண்ட 45 நோயாளர்களும் அவர்களுடன் நான்கு மருத்துவர்களும் பயணிகள் விமான சேவை மூலம் யாழ்ப்பாணத்திற்கு திரும்புவதற்கான ஏற்பாட்டைச் செய்தது.

வவுனியா வடக்கில் பிறந்த குழந்தைகளுக்கு தடுப்பூசி ஏற்றும் சுகாதார அமைச்சின் நிகழ்ச்சித் திட்டத்திற்கு, ஐ.சி.ஆர்.சி.தொடர்ந்தும் அனுசரணை வழங்கியது. 165 க்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு தடுப்பூசி வழங்கப்பட்டன. 30 தாய்மாருக்குக் மகப்பேறின் பின்னரான பராமரிப்பும் வழங்கப்பட்டது.

இடம் பெயர்ந்தவர்கள், மீளத்திரும்பியவர்களுக்கான உதவிகள்

மட்டக்களப்பு மாவட்டத்தில் மீளத்திரும்பிய 3,175 பேருக்கு 1,540 உணவுக்கூட்டு பொருட் பொதிகளும் இடம்பெயர்ந்த 1,075 பேருக்கு 275 சுகாதார பொருட் பொதிகள், சிறுவர்க்கான சுகாதார பொருட் பொதிகள் 15 ம், 300 க்கும் மேற்பட்ட நுளம்புவலைகள், 560 பாய்கள், 290 நீர் கொள்குவளைகள் ஆகியனவும் வழங்கப்பட்டன.

8,755 உணவுக்கூட்டு பொருட் பொதிகளும், 25 சுகாதார பொருட் பொதிகள், 15 சிறுவர்க்கான சுகாதார பொருட் பொதிகள், 25 தார்பொலின்கள், 55 நீர் கொள்குவளைகள் மற்றும் 90 க்கு மேற்பட்ட நுளம்புவலைகள் ஆகியவை திருகோணமலை மாவட்டத்திலுள்ள மீளத்திரும்பிய 14,655 பேருக்கு ஐ.சி.ஆர்.சி. வழங்கி உதவியது.

கிளிநொச்சி மாவட்டத்தில் இடம்பெயர்ந்த 700 பேருக்கு 700 சமையலறைப் பொருட்கள் அடங்கிய பொதிகள், 700 சுகாதாரப் பொதிகள், 100 சிறுவர்க்கான பொதிகள், 95 அவசிய வீட்டு உபகரணங்கள் அடங்கிய பொதிகள், 115 நுளம்புவலைகள் ஆகியவையும் மீளத்திரும்பிய 460 பேருக்கு விவசாய உபகரணங்கள் அடங்கிய பொதிகள் (தண்ணீர் பம்பி, மருந்து தெளிகருவிகள், மண்வெட்டிகள், மண் அள்ளிகள், பிக்கான் போன்றவை உள்ளடங்கிய) விதைகள், பூச்சிகொல்லிகள் மற்றும் மீனவருக்கு 720 உரப்பைகள் போன்றவையும் ஐ.சி.ஆர்.சி.யினால் பகிரப்பட்டன.

வவுனியா மாவட்டத்தைச் சேர்ந்த சிறுவர் இல்லங்கள், முதியவர் இல்லங்களிலுள்ள 180 பேருக்கு படுக்கை விரிப்பு, துவாய், சமையலறை உபகரணங்கள், கோப்பை, பீங்கான் உள்ளிட்ட வீட்டுபகரணங்களும் கயிறு, தெளிகருவிகள், பிக்கான், தக்காளி விதை, மண்வெட்டி, குப்பை விறாண்டி ஆகியவையும் ஐ.சி.ஆர்.சி.யினால் வழங்கப்பட்டன.

யாழ்ப்பாணத்தில் காங்கேசன்துறை, பளை, மயிலிட்டி ஆகிய பிரதேசங்களிலிருந்து இடம்பெயர்ந்து வந்த மக்களை அரவணைத்து வாழும் 830 குடும்பங்களுக்கு 100 தார்பொலின்கள், 105 சிறுவர்கான பொதிகள், எட்டு தெளிகருவிகள், 360 க்கு மேற்பட்ட சுகாதாரப் பொதிகள் ஆகியவை வழங்கப்பட்டன.

குடிநீர் மற்றும் இருப்பிட வசதிகள்

மட்டக்களப்பு மாவட்டத்தின் செங்கலடிப் பிரதேசத்தில் 25 மீளத் திரும்பிய குடும்பங்களுக்கு வதிவிடம் அமைக்க உபகரணத் தொகுதிகள் வழங்கப்பட்டன. மாவடிவேம்பு முகாமில் எட்டு கழிவறைகள் திருத்தி அமைக்கப்பட்டன. நான்கு கிணறுகள் துப்புரவு செய்யப்பட்டன.

யாழ்.குடா நாட்டில் தேசிய நீர்வழங்கல் சபை தனது நீர்விநியோகத்தை மேம்படுத்துவதற்காக மின்சாரத்தில் இயங்கும் தண்ணீர் பம்பிகளும் 30 பரல் குளோரினும் வழங்கப்பட்டன. கோப்பாய் பிரதேசத்தில் 15 கழிவறைகள், ஒரு மலக் குழி, ஐந்து கிணறுகள் என்பன நிர்மாணிக்கப்பட்டும் அல்லது திருத்தியும் அமைக்கப்பட்டன.

திருகோணமலை மாவட்டத்தில் உட்பூறல் மற்றும் சீனன்வெளி பிரிவில் 120 மீளத்திரும்பிய குடும்பங்களுக்கு வதிவிட உபகரணங்கள் வழங்கப்பட்டதுடன் ஏழு கிணறுகள் ஐ.சி.ஆர்.சி.யினால் சுத்திகரிக்கப்பட்டன. நான்கு கழிவறைகள் அமைக்கப்பட்டன.

கிளிநொச்சி மாவட்டத்தின் நாட்டாங்கண்டல், உருத்திரபுரம் மற்றும் முழங்காவில் பிரதேசங்களின் வைத்தியசாலைகளில் குடிநீர் விநியோகக் குழாய்களும் செயல்முறைகளும் திருத்தி அமைக்கப்பட்டன. 10 க்கு மேற்பட்ட குழாய்க்கிணறுகளும் 15 கிணறுகளும் துப்புரவு செய்யப்பட்டன. அம்பாறை நாமல்ஓயாவில் ஒரு கிணறும் ஒரு குழாய்க்கிணறும் திருத்தி அமைக்கப்பட்டன.

சர்வதேச மனிதநேயச் சட்டத்திற்கு மதிப்பளித்தல்

சர்வதேச மனிதநேயச் சட்டங்கள் மற்றும் ஐ.சி.ஆர்.சி.யின் செயற்பணி பற்றிய கருத்தமர்வில் உயர்தர மாணவர்கள், அரச சார்பற்ற ஊழியர்கள் மற்றும் சமூகத் தலைவர்கள் உள்ளடங்கலாக 700 க்கு மேற்பட்ட பொது மக்களும் 250 இராணுவ அதிகாரிகள், 70 விசேட அதிரடிப்படையினர் 80 காவல்துறையினரும் கலந்து கொண்டிருந்தனர்.

இலங்கை செஞ்சிலுவைச் சங்கத்திற்கு ஆதரவு வழங்கல்

இ.செ.ச.இன் 26 கிளைகளைச் சேர்ந்த அங்கத்தவர்களுக்கு அனர்த்த நிவாரண பணிகள், செஞ்சிலுவைச் செய்திகளை பகிரல், சேகரித்தல் முறைகள், செஞ்சிலுவை மற்றும் செம்பிறைகளின் கொள்கைகள் பற்றியவைகளில் பயிற்சிகள் அளிக்கப்பட்டன.

Email this page Your Opinion Print this page
தென்னாபிரிக்காவில் இன ஒதுக்கல் கல்விக் கோட்பாட்டின் வீழ்ச்சி
யுத்தமற்ற சூழ்நிலை ஏற்பட்டால் வட, கிழக்கு மாணவர் மேலும் பல சாதனைகளைப் படைப்பர்
வழிகாட்டுகிறது ஹைதராபாத் தீர்மானம்
ஐ.சி.ஆர்.சி.யின் கள நடவடிக்கைகள் பற்றிய அறிக்கை
 
 
 
   
 
 
   
Home - Important News - Foreign News - Sports News - Sinhala News - Articles - Editorial - DR - Cartoon - Archives - Obituaries
© 2008. All Rights Reserved. Thinakkural.com / Thinakural.com - Site By Evosof.com