Thinakkural Tamil News Paper - The Independent Voice in Tamil

The Independent Voice in Tamil
Friday, April 04, 2008


Download latha tamil font
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
  Sri Lanka Forecast
 
 
 
 
 
 
 
HOT NEWS
Articles
வழிகாட்டுகிறது ஹைதராபாத் தீர்மானம்
[04 - April - 2008] [Font Size - A - A - A]
-பழ.நெடுமாறன்-

ஹைதராபாத் நகரில் நடைபெற்ற இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் 20 ஆவது மாநாட்டில் வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

கடந்த 20 ஆண்டுகளில் அகில இந்திய கட்சிகள் எதுவும் கவலை கொள்ளாத அல்லது எதிரான நிலை எடுக்கும் ஒரு பிரச்சினை குறித்து, இந்திய கம்யூனிஸ்ட் மாநாடு பொறுப்புணர்வோடும் தொலைநோக்குப் பார்வையோடும் அறிவார்ந்த தீர்மானம் ஒன்றை நிறைவேற்றி உள்ளது.

இலங்கையில் நடைபெற்று வரும் போர் குறித்து ஆழ்ந்த கவலையோடு நிறைவேற்றப்பட்டுள்ள அந்தத் தீர்மானத்தின் முக்கிய அம்சங்கள் வருமாறு;

1. ஐம்பது ஆண்டுகளாக நீடித்து வரும் இலங்கை இனப்போர் குறித்துக் கவலை.

2. சொந்த நாட்டு மக்கள் மீதே இலங்கை இராணுவம் கட்டவிழ்த்துவிட்டுள்ள கொடூரமான தாக்குதல்கள்.

3. நாளுக்கு நாள் அதிகரித்து வரும் மனித நேயமற்ற தாக்குதல்களும் மனித உரிமை மீறல்களும்.

4. இலங்கைப் போர்ச் சூழலின் விளைவாக இந்தியாவில் அகதிகள் குவிவதால் உருவாகும் பிரச்சினைகள்.

5. தமிழக மீனவர்கள் கொல்லப்படுவதும் அவர்களுக்கு ஏற்பட்டுள்ள தொடர்ச்சியான அச்சுறுத்தல்களும்.

6. போர் நிறுத்த உடன்பாட்டையும் அமைதிக்கான பேச்சுவார்தைகளையும் இலங்கை அரசு தன்னிச்சையாக முறித்துக் கொண்டது.

7. தமிழர்கள் மீதான கொடூர இராணுவத் தாக்குதல்களை உடனடியாக நிறுத்துமாறு இலங்கை அரசை இந்தியா வற்புறுத்த வேண்டும்.

8. அரசியல் ரீதியான பேச்சுவார்த்தைகளை மீண்டும் தொடங்குமாறு இந்திய அரசு நெருக்குதல்களை அளிக்க வேண்டும்.

9. தமிழர்களைக் கொன்று குவிக்கும் இலங்கை அரசுக்கு ஆயுத உதவிகள் செய்வதை இந்திய அரசு உடனடியாக நிறுத்திக் கொள்ளவேண்டும்.

10. இந்திய மீனவர்களின் உயிருக்குப் பேராபத்தை விளைவிக்கும் கடல் கண்ணிவெடிகளை அகற்றுமாறு இலங்கை அரசை வற்புறுத்த வேண்டும்.

11. தமிழக மீனவர்களுக்குக் கச்சதீவில் உள்ள எல்லா உரிமைகளையும் மீட்டெடுக்க இந்திய அரசு உறுதியான நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டும்.

12. இலங்கையில் மனித உரிமை, ஜனநாயக உரிமை, அரசியல் உரிமைகளுக்காகப் போராடிக் கொண்டிருக்கும் மக்களுக்கு இந்திய கம்யூனிஸ்டு கட்சி ஆதரவைத் தெரிவித்துக்கொள்கிறது.

இந்திய கம்யூனிஸ்ட் தேசிய மாநாடு நிறைவேற்றியுள்ள மேற்கண்ட தீர்மானம் ஈழத்தமிழர் பிரச்சினையின் பல்வேறு பரிமாணங்களையும் அலசி ஆராய்ந்து முழுமையாக வெளிப்படுத்தி உள்ளது. இந்திய அரசின் கடமை என்ன என்பதையும் அது தெளிவாக உணர்த்தி உள்ளது.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநிலச் செயலாளர் தா.பாண்டியன் முன்மொழிந்த இந்தத் தீர்மானமும் இதற்கு முன்னதாக 18.03.08 அன்று மாநிலங்களவையில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் அகில இந்தியச் செயலாளர் து.ராஜா ஆற்றிய உரையும் வரலாற்றுச் சிறப்பு மிக்கவையாகும்.

சரியான வேளையிலும் சரியான காலகட்டத்திலும் இந்திய கம்யூனிஸ்டு கட்சி பிற இடதுசாரி கட்சிகளுக்கும் மற்றும் அவற்றுடன் கரம் கோத்து நிற்கும் பல மாநிலக் கட்சிகளுக்கும் இலங்கை இனப்பிரச்சினையில் வழிகாட்டி உள்ளது.

இலங்கையில் தமிழர்கள் மீது முழு அளவிலான முப்படைத் தாக்குதல்களைத் தொடுத்து, நாள்தோறும் நூற்றுக்கணக்கான அப்பாவி மக்களைக் கொன்று குவித்து வரும் சிங்கள இனவாத இராணுவத்தின் தலைமைத் தளபதி சரத்பொன்சேகா இந்திய அரசின் ஆயுத உதவியை நாடி இந்தியாவுக்கு வந்து சென்றிருக்கும் வேளையில் நிறைவேற்றப்பட்டுள்ள இந்தத் தீர்மானம் இந்திய அரசுக்கு எச்சரிக்கை மணியை அடிக்கும் தீர்மானம் ஆகும். இலங்கையில் நடைபெற்றுவரும் போர் அதனுடைய உள்நாட்டு விவகாரம் என்ற கட்டத்தைத் தாண்டிவிட்டது. இலங்கை அரசுக்கு உதவுவது என்ற பெயரில் அமெரிக்கா உட்பட பல அந்நிய சக்திகள் அங்கு காலூன்றுவதற்கு இடைவிடாது முயற்சி செய்கின்றன. குறிப்பாக பாகிஸ்தான் மிகத் தாராளமாக சகலவிதமான ஆயுதங்களையும் அள்ளிக் கொடுத்து வருகிறது. தமிழர் பகுதிகளில் குண்டு மழை பொழியும் சிங்கள இராணுவ விமானங்களை பாகிஸ்தான் விமானிகளே ஓட்டுகிறார்கள். இலங்கை இராணுவமயமாவதால் ஈழத்தமிழர்களுக்கு ஏற்படும் ஆபத்தைவிட பேராபத்து இந்தியாவை எதிர்நோக்கிக் காத்திருக்கிறது.

மறைந்த பிரதமர்கள் ஜவஹர்லால் நேரு, இந்திரா காந்தி ஆகியோர் காலங்களில் இந்துமா கடல் பகுதியில் எந்த அந்நிய வல்லரசும் ஊடுருவவோ, இராணுவத் தளங்களை அமைக்கவோ ஒருபோதும் அனுமதித்ததில்லை. அவ்வாறு செய்வது இந்தியாவின் பாதுகாப்புக்குப் பேராபத்தை விளைவிக்கும் என்பதை அவர்கள் நன்கு உணர்ந்து இருந்தனர்.

இந்த இருவர் காலத்திலும் இராணுவ முக்கியத்துவம் வாய்ந்த பெரும் தொழிற்சாலைகள் தென்னாட்டில்தான் நிறுவப்பட்டன. ஆவடி டாங்கி தொழிற்சாலை, பெங்களூர் விமான உற்பத்தி சாலை, தும்பா ஏவுகணைத் தளம் போன்றவையும் மற்றும் பல முக்கிய தொழிற்சாலைகளையும் தெற்கேதான் நிறுவப்பட்டன. ஏனென்றால் வட இந்தியா, பாகிஸ்தான், சீனாவின் நேரடித் தாக்குதல்களுக்கு இலக்காக அமைந்திருந்த காரணத்தால் அங்கு இத்தொழிற்சாலைகள் அமைக்கப்படவில்லை. அதுமட்டுமல்ல, தென்மாநிலத் தலைநகரங்களில் பிற நாடுகளின் துணைத் தூதரக அலவலகங்களை அமைக்க இந்திய அரசு அனுமதித்தது. ஆனால், இராணுவ முக்கியத்துவம் வாய்ந்த தொழிற்சாலைகள் குறித்து உளவறிய உதவுவது ஆகிவிடும் என்ற காரணத்தால் அனுமதிக்கப்படவில்லை. பாகிஸ்தானின் துணைத் தூதரகத்தை தென்மாநிலங்களில் அமைத்துக்கொள்ள இந்திய அரசு இன்றுவரை அனுமதிக்கவில்லை.

ஆனால், இப்போது என்ன நடக்கிறது? பாகிஸ்தான் விமானப் படையின் தலைமைத் தளபதியாக இருந்து ஓய்வுபெற்ற ஒருவர் இலங்கையின் பாகிஸ்தான் தூதுவராக நியமிக்கப்பட்டுள்ளார். அவர் கொழும்பில் இருந்துகொண்டு இந்தியாவின் தென்பகுதிகளில் உளவு வேலைகளைத் தொடர்கிறார். சென்னையில் இருந்துகொண்டு இதைச் செய்வதை விட கொழும்பில் இருந்து இதைச் செய்வது பாதுகாப்பானது. நவீனமான தொலைத்தொடர்புச் சாதனங்கள் பெருகிவிட்ட இந்தக் காலத்தில் மிக எளிதானதும் ஆகும். இந்தியாவுக்கு எதிரான இத்தகைய நடவடிக்கைகளைத் தனது மண்ணில் நடத்த இலங்கை அனுமதித்துள்ளது.

அமெரிக்கா தனக்கு அள்ளிக்கொடுத்த ஆயுதங்களில் ஒரு பகுதியைத்தான் இலங்கைக்குப் பாகிஸ்தான் தருகிறது. ஆக அமெரிக்கா மறைமுகமாக இலங்கையில் தனது தடத்தைப் பதித்துள்ளது.

சின்னஞ்சிறிய இலங்கையில் அமெரிக்கா போன்ற ஏகாதிபத்திய நாடுகள் காலூன்றுவதால் அவைகளுக்கு பிரதிபலன் எதுவும் கிடைக்கப் போவதில்லை. அமெரிக்கப் பொருட்களை விற்பனை செய்வதற்கு உரிய பெரிய சந்தையாகவும் இலங்கை இல்லை. அப்படியானால் இந்த உதவிகளுக்குப் பின்னணி என்ன?

இந்தக் கேள்விக்கு ஒரே ஒரு விடை தான் இருக்க முடியும். இந்தியாவை மிரட்டுவதற்குரிய தளமாக இலங்கையைப் பயன்படுத்த ஏகாதிபத்திய நாடுகளும் பாகிஸ்தான் போன்ற நாடுகளும் முயல்கின்றன என்பது தான் அப்பட்டமான உண்மையாகும்.

இந்தப் பின்னணியில் இந்திய கம்யூனிஸ்ட் மாநாட்டின் தீர்மானத்தை நாம் பார்க்க வேண்டும்.

இந்திய அரசோ அகில இந்தியக் கட்சிகளோ கவனம் செலுத்தப் பிடிவாதமாக மறுக்கும் ஈழத்தமிழர் பிரச்சினை குறித்து திட்டவட்டமான தெளிவான வழிகாட்டுதலை இந்திய கம்யூனிஸ்ட் மாநாடு சுட்டிக்காட்டியுள்ளது.

இந்திய அரசின் பொறுப்பில் உள்ளவர்கள் இத்தீர்மானத்தின் அடிப்படையில் சிந்தித்துச் செயற்பட வேண்டும். மறைந்த பிரதமர் இந்திரா காந்தி காலத்தில் கடைப்பிடிக்கப்பட்ட அணுகுமுறைக்குத் திரும்ப வேண்டும். அவர் காலத்தில் எந்த அந்நிய அரசும் இலங்கையில் நுழைவதற்குத் துணியவில்லை. இலங்கை அரசும் இந்தியாவுக்குத் தெரியாமல் எந்த நாட்டுடனும் இராணுவ ரீதியான உறவு கொள்வது குறித்து சிந்தித்துக் கூடப் பார்க்கவில்லை.

ஆனால், இப்போது நிலைமை அடியோடி மாறிவிட்டது. இந்தச் சூழ்நிலையில் இந்திய கம்யூனிஸ்டு மாநாடு நிறைவேற்றியுள்ள தீர்மானம் இந்திய அரசின் சிந்தனைத் தெளிவிற்கு வழி வகுக்கட்டும்.

- தினமணி

Email this page Your Opinion Print this page
தென்னாபிரிக்காவில் இன ஒதுக்கல் கல்விக் கோட்பாட்டின் வீழ்ச்சி
யுத்தமற்ற சூழ்நிலை ஏற்பட்டால் வட, கிழக்கு மாணவர் மேலும் பல சாதனைகளைப் படைப்பர்
வழிகாட்டுகிறது ஹைதராபாத் தீர்மானம்
ஐ.சி.ஆர்.சி.யின் கள நடவடிக்கைகள் பற்றிய அறிக்கை
 
 
 
   
 
 
   
Home - Important News - Foreign News - Sports News - Sinhala News - Articles - Editorial - DR - Cartoon - Archives - Obituaries
© 2008. All Rights Reserved. Thinakkural.com / Thinakural.com - Site By Evosof.com