-பேராசிரியர் சோ.சந்திரசேகரன்-
வெள்ளைச் சிறுபான்மை ஆட்சியாளரின் அடக்கு முறை ஆட்சியின் போது பின்பற்றப்பட்ட இன ஒதுக்கல் கோட்பாடு (Aparthied) சுதேச ஆபிரிக்கர்களின் சமூக, பொருளாதார, அரசியல், கல்வி உரிமைகளைப் பறித்திருந்தது. உலகின் பல நாடுகளின் சிறுபான்மையினர்கள் பல்வேறு உரிமைகளை இழந்தது பற்றி முறைப்பாடு செய்தாலும் இனப்பாகுபாட்டைச் சட்டபூர்வமாக்கிய நாடு தென்னாபிரிக்கா.
அந்நாட்டின் இன ஒதுக்கல் கொள்கையானது இனரீதியாக, வகுப்புரீதியாக மற்றும் பாலினரீதியாக மக்கள் பிரிந்து வாழவேண்டும் என வலியுறுத்தியது; பொதுவான பிரஜைகளையும் தேசிய ஒருமைப்பாட்டையம் வளர்க்கும் நோக்கு சற்றேனும் இல்லை. சகல துறைகளிலும் வெள்ளையர்களுக்குச் சார்பாக, பாகுபாடான முறையில் அதிக அளவில் நிதி ஒதுக்கப்பட்டமையால், கல்வியின் சகல அம்சங்களிலும் விரிவான முறையில் சமமின்மை பெருகியது; ஆசிரியர் பயிற்சியின் தராதரம், பாடசாலைகளின் வளம், பாடசாலைகளின் அமைவிடம், கற்பித்தல் சாதனங்கள் என்று சகல அம்சங்களிலும் வேறுபாடுகள் நிறைந்து காணப்பட்டன. `கறுப்பு இனப் பெரும்பான்மை மக்கள் முறையாகப் பரிணாம வளர்ச்சியடையாதவர்கள்; வெள்ளையர்கள் போன்று முழுமையான மனிதர்களாக விருத்தியடையாதவர்கள்; எனவே, வெள்ளையர்களுக்குரிய விஞ்ஞானம், கணிதம், இலக்கியம் போன்ற பாடங்களை அவர்களால் கற்றுக் கொள்ள இயலாது; எனவே, அவர்களுக்குத் தொழிற்கல்விப் பாட ஏற்பாடே பொருத்தமானது' என்பது வெள்ளை இனத்தவரின் கருத்தாக இருந்தது.
வெள்ளையர்களுக்கு வழங்கப்படும் கல்வி ஆளும் இனத்தை உருவாக்கும் முறையிலும் கறுப்பு இனத்தவர்களுக்கு வழங்கப்படும் கல்வி, அடிமைகளாக வாழ்வதற்கான பயிற்சியை வழங்குவதாக இருக்க வேண்டும் என்று தென்னாபிரிக்க வெள்ளை இன ஆட்சியாளர்கள் கருதினர்.
இவ்வாறான சிந்தனைகளின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட இன ஒதுக்கல் பாங்கான கல்விக் கொள்கைகள், இன ஒதுக்கல் ஆட்சியாளர்களின் நலன்களை மேம்படுத்தும் நோக்கில் அமைந்தன. பெரும்பான்மை கறுப்பு இனத்தவர்களுக்கென்று மட்டமான பாடசாலைகள், பாடஏற்பாடு, தரங்குறைந்த ஆசிரியர்கள், குறைந்த வள ஒதுக்கீடு என்பது இன ஒதுக்கல் கொள்கையின் தாற்பரியம்.
தென்னாபிரிக்காவின் மக்கள் தொகையில் 75 சதவீதம் கறுப்பு இனத்தவர்கள்; 13 சதவீதம் வெள்ளையர்கள், 9 சதவீதம் கலப்பு இனத்தவர், 3 சதவீதம் ஆசியா கண்ட இந்தியர்கள்; இக்கலப்பு இனத்தவரும் கறுப்பர்களோடு இனப்பாகுபாட்டுக்கு உட்படுத்தப்பட்டவர்கள்.
1994 தொடக்கம் வெள்ளையரின் ஆட்சியிலிருந்து விடுபட்ட தென் ஆபிரிக்கா, நெல்சன் மண்டேலாவின் தலைமையில் இனப்பாரபட்சமற்ற ஒரு சனநாயக சமூகத்தை அமைக்க முற்பட்டது. இனப்பாகுபாடும் பாலின வேறுபாடும் அற்ற நியாயத்தன்மை (eqity) வாய்ந்த ஒரு புதிய சமூகத்தை அமைக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.
ஆயினும் 10 ஆண்டுகாலத்தின் பின்னர் கூட (2004 இல்) தென்னாபிரிக்க சமூகம் பிரிந்து காணப்பட்டதாக அவதானிகள் தெரிவித்தனர். புதிதாக உருவாக்கப்பட்ட சமத்துவக் கொள்கைகளுக்கும் யதார்த்த நிலைமைகளுக்குமிடையில் வேறுபாடுகள் காணப்பட்டன. கடந்த கால இன ஒதுக்கல் கொள்கையின் அம்சங்கள் தொடர்ந்து காணப்பட்டன. தென்ஆபிரிக்காவின் புதிய அரசியல் சட்டம் இன்று உலகில் சிறந்ததொன்றாகக் கருதப்பட்ட போதிலும், அதன் கொள்கைகளை நடைமுறைப்படுத்துவது பெரும் சவாலாக உள்ளது.
நாட்டில் உள்ள பிரதான நான்கு இனக்குழுக்களையும் ஒன்றாக வைத்துக் கற்பிக்கும் முயற்சிகளில் மாகாணக் கல்வித் திணைக்களங்கள் முயலுகின்றன; இம்முயற்சியின் நோக்கம் முன்மாதிரியான பாடசாலைகளை அமைத்தலாகும். ஆயினும், வழமைபோல் பெரும்பாலான பாடசாலைகள் இன்றும் பிரிவு பட்ட நிலையிலேயே காணப்படுகின்றன.
வரவு - செலவுத் திட்டத்தில் 20% கல்விக்கு ஒதுக்கப்பட்டாலும், பல தசாப்தகாலப் பாகுபாடுகளை அகற்ற இந்நிதி போதாது. எழுத்தறிவின்மை இன்னும் உயர்ந்து காணப்படுகின்றது; கறுப்பு இனத்துப் பிள்ளைகளில் 15 சதவீதமானவர்களே உயர்நிலைப் பள்ளிக்கல்வியைக் கற்று முடிக்கின்றனர்; புதிய இனப்பாகுபாடற்ற அனுமதிக் கொள்கைகள் உயர்கல்வியில் அனுமதி பெறுவோரின் தொகையை அதிகரித்துள்ளன. ஆனால், கறுப்பு இன மாணவர்கள் உயர்கல்வி பயில சரியான ஆயத்தத்தைப் பெறுவதில்லை. ஆசிரியர்கள், அதிபர்கள் தொகையும் போதாது. அவர்களும் சரியாகப் பயிற்றப்படாதவர்கள்;
எய்ட்ஸ் நோயினால் ஏராளமான ஆசிரியர்கள் இறக்கின்றனர். 2008 ஆம் ஆண்டுக்குள் மேலும் 10 சதவீத ஆசிரியர்கள் எய்ட்ஸ் நோயினால் இறந்து பட உள்ளனர். பணி புரியும் ஆசிரியர்களுக்குப் போதிய பயிற்சியில்லை; வேலைச் சுமை அதிகம்; சம்பளங்களும் குறைவு.
இன ஒதுக்கலுக்கு எதிரான போராட்டங்கள் நிகழ்ந்த காலத்தில் `இப்போதைக்கு சுதந்திரம், கல்வி வளர்ச்சி பின்னர்', என்று குரல் எழுப்பப்பட்டது. இதன் காரணமாக பாடசாலைகள் கல்விக்கூடங்களாக அன்றி மாணவர்களின் போராட்ட களங்களாக மாறின. ஆங்கில மொழியைக் கல்விமொழியாகப் பயன்படுத்துவதற்கும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. பாடசாலைகள் வெள்ளையருக்கு எதிரான போராட்டக் களமாக மாற்றப்பட்டமையின் விளைவுகளை தென்ஆபிரிக்கா தொடர்ந்து அனுபவித்துக் கொண்டிருக்கிறது.
1994 இன் பின்னர் தென் ஆபிரிக்காவின் புதிய கல்விக் கொள்கைகள் மத்தியமயப்படுத்தப்பட்ட இறுக்கமான நிர்வாகத்தை கைவிட்டு பாடசாலை மட்ட நிர்வாகத்தை வலியுறுத்தின. இதன்படி பாடசாலை அதிபர்கள் சனநாயக பாங்குடன் பங்கேற்பதற்கு இடமளித்தும் நிர்வாகம் செய்ய வேண்டியதாயிற்று. பாடசாலை ஆட்சிச் சபைகள் அடிமட்டநிலையில் உருவாக்கப்பட்டு அதிகாரம் பரவலாக்கப்பட்டது. இச்சபைகளே ஆசிரியர்களை தெரிவு செய்தன; ஆசிரியர் - மாணவ விகிதங்களில் முன்னேற்றம் கண்டனர். ஆனால், இவ்வாறான பாடசாலை மட்ட நிர்வாகத்திற்கு அவசியமான போதிய பயிற்சி, பொருத்தமான தலைமைத்துவம் என்பன இருக்கவில்லை. சம்பந்தப்பட்டவர்களின் ஆற்றலைப் பெருக்கும் நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படவில்லை. அதிபர்கள் உணர்வுடனும் ஈடுபாட்டுடனும் செயற்பட விரும்பினாலும் அதற்குத் தேவையான திறன்கள் அவர்களிடம் இருக்கவில்லை.
தென்னாபிரிக்க பாடசாலைகள் சமனற்ற முறையில் நிதிகளைப் பெறுவது ஒரு முக்கிய பிரச்சினையாகும். புதிய சட்டங்களின்படி அரசாங்க பாடசாலைகள் சகல பிள்ளைகளுக்கும் இடமளிக்க வேண்டும். ஆனால், இக்கொள்கை சரியாக நடைமுறைப்படுத்தப்படவில்லை. அரசாங்கம் சகல அரச பாடசாலைகளுக்கும் குறைந்தபட்ச நிதியுதவியை வழங்குகிறது. "சமமான வளம் பொருந்திய பாடசாலைகள் சமமாக நடாத்தப்படல் வேண்டும்" என்ற கொள்கையின் அடிப்படையிலேயே நிதி வழங்கப்படுகின்றது. மாதிரிப் பாடசாலைகள் எனப்படுபவை தொடர்ந்து கட்டணங்களை வசூலிக்கின்றன. இப்பாடசாலைகளில் காணப்படும் வசதிகள், கற்பித்தல், தராதரம், மாணவர் தொகை என்பவற்றிற்கேற்ப வெவ்வேறு கட்டணங்கள் அறவிடப்படுகின்றன.
இப்பாடசாலைகள் 1992 இல் தொடங்கப்பட்டவை. பெற்றோர்கள் அதிக கட்டணங்களைச் செலுத்த வேண்டியதோடு, பாடசாலைக் கொள்கையை உருவாக்க அவர்களுக்குப் போதிய சுதந்திரமும் வழங்கப்பட்டது. பாடசாலை அனுமதிக் கொள்கை, ஆசிரியர் நியமனம், மேலதிக பாடஏற்பாட்டு விடயம் , நிதி விடயம் என்பவற்றில் பெற்றோருக்கு அதிக அதிகாரம் வழங்கப்பட்டது. இவ்வாறான ஏற்பாடுகள் மூலம் வசதி மிக்க வெள்ளையர்களின் பிள்ளைகள் கறுப்பின பிள்ளைகளோடு சேர்ந்து படிப்பதைத் தவிர்த்துக் கொள்ள முடிந்தது.
வெளிப்படையாக இதில் இனரீதியான அம்சம் இல்லையாயினும் நிதி வசதிகளின் அடிப்படையில் இரு இனத்தவரும் வெவ்வேறாக படிக்கும் நிலைமை தோற்றுவிக்கப்பட்டது.
ஐக்கிய அமெரிக்கா, தென்னாபிரிக்கா ஆகிய இரு நாடுகளையும் கல்வி விடயத்தில் ஒப்பிட முடியும். இரு நாடுகளுக்கும் இடையிலான அரசியல், பொருளாதார நிலைமைகள் வேறுபட்டவை. ஆனால், வரலாற்று ரீதியாக சில ஒருமைப்பாடுகள் உண்டு. ஐ.அமெரிக்காவில் கறுப்பு இனத்தவர் சிறு பான்மையினர். தென்னாபிரிக்காவில் கறுப்பு இனத்தவர்கள் பெரும்பான்மையினர். இரு நாடுகளிலும் வெள்ளையர்களே ஆதிக்கம் செலுத்தினர்.
இரு நாடுகளிலும் இன ஒதுக்கல் கொள்கை கடைப்பிடிக்கப்பட்டது. வெள்ளையர்களின் மேலாதிக்கம் , கட்டுப்பாடு , சுரண்டல் என்பவை இரு நாடுகளிலும் காணப்பட்ட அம்சங்கள். தென்னாபிரிக்காவில் கறுப்பு இனத்தவர்கள் வெள்ளையர்கள் பெறும் கல்வியைப் பெறத்தகுதியற்றவர்கள். முழுமையான பரிணாம வளர்ச்சி அடையாதவர்கள் என்று கருதப்பட்டது. ஐக்கிய அமெரிக்காவில் கறுப்பு இனத்தவர்கள் அடிமைகளாக வந்தவர்கள். எனவே, அவர்களுக்கு வெள்ளையர்களுக்கு ஈடான கல்வியை வழங்க முடியாது. அவர்களுக்கு நூற்கல்வியை விட சாதாரண தொழிற்கல்வியே பொருத்தமானது. யாராவது வெள்ளையர் பெறும் நூற்கல்வியை (கணிதம்)யும் உயர்தரமான கல்வியையும் வழங்க முற்பட்டால் அவர்களுக்கு சிறைத்தண்டனை வழங்கப்படும். இது ஐக்கிய அமெரிக்கா அக்காலத்தில் கண்டறிந்த கல்விநெறி.
நவீன காலத்தில் இரு நாடுகளும் சகல துறைகளிலும் யாவருக்கும் சமத்துவம் என்று பேசுகின்றன. ஒன்றுபட்ட சமூகம் ,தனியாளின் உரிமைகளுக்கு மதிப்பளித்தல், கல்வி உட்பட சகல விடயங்களிலும் சமவாய்ப்பு பற்றி இரு நாடுகளும் இன்று மிக உயர்வாகப் பேசுகின்றன. ஆயினும், இவ்விடயங்களில் இரு நாடுகளின் உண்மையான ஈடுபாடு, அக்கறை பற்றி பல ஐயங்கள் உருவாகி உள்ளன. இவ்வாறான எண்ணம் உண்மையாகக் காணப்படுகின்றதா? அல்லது அரசியல், பொருளாதார நலன்கருதி இவ்வாறான இரு இலட்சியங்களும் இருநாடுகளாலும் முன்னெடுக்கப்படுகின்றனவா? இவை இன்று கேட்கப்படும் கேள்விகள்.
இன்று இருநாடுகளும் பழைய இனவாதக் கொள்கைகளைக் கைவிட்டு வறுமையைக் களையவும் மக்களின் அடிப்படைத் தேவைகளை நிறைவு செய்யவும் மனித வளத்தைப் பெருக்கவும் கல்வி, வீட்டுவசதி, சுகாதார வசதிகள் என்பவற்றை மேம்படுத்தவும் சமவாய்ப்புகளை வழங்கவும் பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன.
இரு நாடுகளும் இன்று யாவருக்கும் கல்வி என்ற கொள்கையினூடாக சமூக வகுப்பு வேறுபாடுகளைக் களைய உறுதி பூண்டுள்ளன.
பின்தங்கிய வகுப்பினர்களும் பிரதிநிதித்துவம் பெறாத மக்கள் குழுவினர்களும் சமத்துவமான சமூக, பொருளாதார நிலைகளை அடையத்திட்டங்களை வகுத்துள்ளன.
இரு நாடுகளும் இவ்வாறு சிறப்பான திட்டங்களை வகுத்துள்ள போதிலும் இருநாடுகளிலும் பின்தங்கிய பிரிவினர்களின் மேம்பாடும் முன்னேற்றமும் துரித கதியில் இடம்பெறவில்லை என்பதே ஆய்வாளர் கருத்து.
இரு நாடுகளிலும் காலங்காலமாகக் காணப்பட்ட இனப்பாகுபாட்டுக் கொள்கை மற்றும் இனச்சமமின்மை பிற்காலத்தில் வர்க்கச் சமமின்மையாக வளர்ச்சி பெற்றுள்ளது. வளங்களை வறியோர் மத்தியில் பகிர்ந்தளிக்கும் திட்டங்கள் இரு நாடுகளிலும் சரியாக வெற்றி காணவில்லை. Natal பல்கலைக்கழகம் அண்மையில் (2004) மேற்கொண்ட ஆய்வொன்றின்படி,வறுமையில் வாழும் 20% தென்னாபிரிக்கர்களின் நிலை மேலும் மோசமாகி உள்ளது. செல்வந்தர்களான 20% கறுப்பர், வெள்ளையர்களின் பொருளாதார நிலை மேலும் மேம்பாடடைந்துள்ளது.