நண்பர்கள் இருவர் சந்தித்து உரையாடிக் கொண்டிருந்தனர். இவர்களின் பிள்ளைகள் வெளிநாடுகளில் தமது மனைவி, பிள்ளைகளுடன் வசிக்கிறார்கள்.
ஒரு நண்பர் மற்றவரைப் பார்த்து, "எனது உத்தரவுப்படி பிள்ளைகள் மாதாமாதம் பணம் அனுப்பிக் கொண்டிருக்கிறார்கள். நான் வேலை எதுவுமே செய்யத் தேவையில்லை. பிள்ளைகள் அனுப்பும் பணத்தை வைத்து தாராளமாகச் செலவு செய்கிறேன்" என்றார்.
அத்துடன், நின்றுவிடாமல், "உமது பிள்ளைகள் பணம் அனுப்புவதில்லையா? அதுதான் நீர் வேலைக்குப் போகிறீரா? கேட்டு வாங்க வேண்டியதுதானே!" என்றும் ஆலோசனை கூறினார்.
மற்றவர் புன்முறுவல் செய்துவிட்டு, "பிள்ளைகள் குடும்பமாகிவிட்டார்கள். அவர்களின் பணத்தில் வாழ நான் விரும்பவில்லை. எனது சொந்த உழைப்பில் கிடைக்கும் வருவாயில் மனநிறைவோடு வாழ்கிறேன். இதில் எனக்கு ஆத்ம திருப்தி கிடைக்கிறது" என்றார்.
அனுபவப்பட்டவருக்குத்தான் அதன் அருமை தெரியும்!