இலங்கை போக்குவரத்துச் சபையும் தனியார் பஸ் போக்குவரத்து சேவையும் இணைந்து ஒரேநேர அட்டவணையின் கீழ் பயணிகள் போக்குவரத்துச் சேவையை நடத்துவதற்குரிய பதிய நடவடிக்கையை எதிர்வரும் மே மாதம் முதலாம் திகதி முதல் மேற்கொள்வதற்கு போக்குவரத்து அமைச்சர் டலஸ் அழகப்பெரும திட்டமிட்டிருக்கின்றார். ஒரு நல்ல காரியத்தை முன்னெடுக்க அமைச்சர் அழகப்பெரும திட்டமிட்டிருப்பதை வரவேற்றே ஆக வேண்டும். இ.போ.ச. பஸ் சேவை மாத்திரம் இடம் பெற்றுக் கொண்டிருந்த காலகட்டத்தில் போதுமான அளவு பஸ்கள் இலங்கைப் போக்குவரத்துச் சபைக்கு இல்லாத ஒரு நிலையில் தனியாரும் போக்குவரத்துச் சேவையை நடத்துவதற்கு இடமளிக்கப்பட்டிருந்தது. ஆட்சியிலிருந்த அரசு இ.போ.ச.வும் தனியார்துறையும் பொது இணக்கப்பாட்டுடன் ஒரே கால அட்டவணையின் கீழ் இச்சேவை இடம்பெறவேண்டுமென வலியுறுத்திய போதிலும் அந்த எதிர்பார்ப்பு கைகூடாமலேயே இருந்துவந்தது.
தனியார் போக்குவரத்து அதிகாரசபை உருவாக்கப்பட்டு அது மாகாண சபைகளின் பொறுப்பில் விடப்பட்டிருந்த போதிலும் அதன் சட்டவிதிகளுக்கமைய சேவைகள் சீராக இடம் பெற்றதாகத் தெரியவில்லை. தனியார் பஸ்களில் பயணிகள் தேங்காய் ஏற்றுவது போன்று மூச்சுவிட முடியாத அளவுக்கு நிரம்பி வலிந்து போகும் போது அதற்குப் பின்னால் வரும் இ.போ.ச.பஸ்களில் சிலர் பயணிப்பதையே காண முடிகிறது. இதனால் இலங்கை போக்குவரத்துச்சபை நாளுக்கு நாள் நட்டத்தையே எதிர் கொண்டன. இ.போ.ச.வுக்குக் கிடைக்கும் வருமானம் அதன் ஊழியர்களுக்கு மதாந்தச் சம்பளத்தைக்கூட வழங்க முடியாத அளவுக்கு மோசமடைந்து காணப்படுகின்றது. ஆனாலும் இ.போ.ச.வின் சேவை இரவு பகல் பாராது தொடர்ந்து இடம் பெற்றுக் கொண்டே உள்ளது. தனியார் சேவையைப் பொறுத்த மட்டில் இதற்கு முற்றிலும் மாற்றமானதாகவே காணப்படுகிறது. பயணிகள் குறைந்த விடுமுறை நாட்களிலும், இராக்காலத்திலும் தனியார் பஸ் வண்டிகளை வீதிகளில் காணவே முடியவில்லை.
இ.போ.ச.வில் கட்டணத்துக்குரிய டிக்கட்கள் ஒழுங்காக வழங்கப்படுகின்றன. பெரும்பான்மையான தனியார் பஸ்களில் டிக்கட் வழங்கப்படுவதே இல்லை. சில சந்தர்ப்பங்களில் கட்டணம் கொடுத்தவரிடம் ஒன்றுக்குப் பலதடவைகள் மீண்டும் கட்டணத்தைக் கேட்டுப் பயணிகளும், நடத்துநர்களும் கை கலப்பிலீடுபடுவதையும் காண முடிகிறது. அது மட்டுமன்றி தனியார் பஸ் நடத்துநர்களும், சாரதிகளும் பயணிகளை மரியாதையின்றி நடத்துவதும் அன்றாடம் காணக்கூடியதாகவே உள்ளது. என்னவோ பயணிகளை இலவசமாகக் கொண்டுபோவது போன்ற மனப்பாங்கில் தனியார் பஸ்சேவைகள் இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றன.
அமைச்சர் டலஸ் அழகப்பெரும எடுத்திருக்கும் புதிய முயற்சியின் மூலமாக தனியார் பஸ்சேவையை ஒழுக்க வரம்புக்குள் கொண்டு வருவதற்கு வழி வகுக்க முடியும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இ.போ.ச.வுக்குள்ள அனைத்துச் சட்டவிதிகளையும் தனியார் பஸ் சேவையும் கடைப்பிடிக்க வேண்டிய கட்டாயம் அமுலுக்குக் கொண்டு வருவதை அமைச்சர் உறுதி செய்ய வேண்டும். நேர அட்டவணை கூட இரு பகுதியினரும் இரவு, பகல் சேவையை நடத்துவதற்கும் விடுமுறை நாட்களில் போதிய சேவையை நடத்துவதற்கும் ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட வேண்டும். வெறுமனே கூட்டு நேர அட்டவணைப்படியான சேவை என்று கூறுவதால் மட்டும் காரியம் முடிந்து விடப் போவதில்லை. சட்டவிதிகள் உரியமுறையில் கண்காணிக்கப்பட வேண்டும். விதிகளை மீறுவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கவும் அமைச்சர் தயக்கம் காட்டக் கூடாது.
பஸ் பயணிகளுக்கு ஏற்படக்கூடிய குறைபாடுகள், அசௌகரியங்களை உடனுக்குடன் உரிய அதிகாரிகளுக்கு முறையிடுவதற்கு வசதியாக அனைத்து பஸ் வண்டிகளிலும் முகவரிகளும், தொலைபேசி இலக்கங்களும் ஒட்டப்பட்டிருக்கவேண்டும். முடியுமானால் ஒவ்வொரு வண்டியிலும் முறைப்பாட்டுப்பெட்டிகள் வைக்கப்படுவது கூட வரவேற்கத்தக்கதாக இருக்கும். அமைச்சரின் புதிய நடவடிக்கைகள் தனியார் பஸ்சேவையினருக்கு கசப்பான மருந்தாகக்கூட இருக்கலாம். அதற்காக எத்தகைய நெருக்குதல் வந்தாலும் திட்டத்தை அமைச்சர் கைவிட்டு விடக்கூடாது. அரசுகள் காலத்துக்குக்காலம் விடுக்கும் நடைமுறைச்சாத்திய மில்லாத உறுதி மொழிகள்போன்று இதுவும் அமைந்து விடக்கூடாது.