பாகிஸ்தான் மக்கள் கட்சியின் இணைத் தலைவர் ஆஸிப் அலி சர்தாரிக்கெதிராக சுவிட்ஸர்லாந்தில் தொடரப்பட்டுள்ள நிதி மோசடி வழக்கிலிருந்து பாகிஸ்தான் அரசாங்கம் விலகியுள்ளது.
சுவிஸ் அதிகாரிகள் இவ்வழக்கு மீதான விசாரணையை தொடரவிருக்கின்ற போதிலும் பாகிஸ்தான் அரசு இவ்வழக்கிலிருந்து விலகியுள்ளமையானது குற்றச்சாட்டுக்கான வாய்ப்புக்களை பலவீனப்படுத்தியுள்ளதாக வழக்கறிஞர்கள் தெரிவிக்கின்றனர்.
மறைந்த பாகிஸ்தான் முன்னாள் பிரதமரும் மக்கள் கட்சித் தலைவியுமான பெனாசிர் பூட்டோவின் கணவரான சர்தாரி அரசியல் காரணங்களின் அடிப்படையிலேயே தனக்கெதிரான இவ்வழக்கு தொடரப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
சுவிட்ஸர்லாந்தில் தொடரப்பட்ட பல மில்லியன் டொலர்கள் நிதி மோசடிக் குற்றச்சாட்டு வழக்கிலிருந்தே பாகிஸ்தான் அரசு வாபஸ்பெற்றுள்ளது.
சர்தாரிக்கெதிராக உள்நாட்டில் தொடரப்பட்டிருந்த 7 ஊழல் குற்றச்சாட்டு வழக்குகளையும் கடந்த மாதம் பாகிஸ்தான் நீதிமன்றம் இரத்து செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
1990களில் பெனாசிரின் பதவிக் காலத்தில் குற்றச்சாட்டுக்களை எதிர்கொண்ட சர்தாரி கடந்த ஒரு தசாப்த காலத்திற்கும் மேலாக ஊழல் குற்றச்சாட்டில் சிக்கியிருந்ததுடன் 11 ஆண்டுகளை சிறையில் கழித்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.