* பின்லேடன் நலமுடன் இருப்பதாகவும் தெரிவிப்பு
ஐக்கிய நாடுகள் சபையை முஸ்லிம்களின் எதிரியென வர்ணித்துள்ள அல்-ஹைடா இயக்க பிரதித் தலைவர் அய்மான் அல்-ஷவாஹிரி அதன் மீதான தாக்குதல்களுக்கும் தனது ஆதரவினைத் தெரிவித்துள்ளார்.
இச்செய்தியை இணையத்தளமொன்றின் ஊடாக விடுத்துள்ள ஷவாஹிரி தமது தலைவர் ஒசாமா பின்லேடன் சிறந்த உடல்நலத்துடன் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
இணையத் தளங்களுடன் தொடர்புடைய குழுவொன்றினால் அல்-ஹைடாவின் எதிர்காலம் குறித்து எழுப்பப்பட்ட கேள்விகளுக்கான விடைகளை உள்ளடக்கியவாறே இவ் ஒலி நாடா வெளியிடப்பட்டுள்ளது.
இக்கேள்விகள் பாலஸ்தீனம் தொடர்பான அல்-ஹைடாவின் திட்டம் மற்றும் பெண் போராளிகளுக்கான வாய்ப்புக்கள் போன்ற விடயங்களை உள்ளடக்கியிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
90 நிமிடங்கள் ஒலிபரப்பாகும் இச்செய்தியில் ஐக்கிய நாடுகள் சபை இஸ்லாத்தினதும் முஸ்லிம்களினதும் எதிரி என தெரிவிக்கப்பட்டிருப்பதுடன் பின்லேடன் சுகவீனமுற்றுள்ளார் என்ற தகவல்களும் நிராகரிக்கப்பட்டுள்ளன.
ஷேய்க் ஒசாமா பின்லேடன் சிறந்த உடல் நலத்துடன் உள்ளார். அவர் சுகவீனமுற்றிருப்பதாக பரப்பப்படும் தகவல்கள் தவறானவை எனத் தெரிவித்துள்ள ஷவாஹிரி இஸ்ரேலுக்கு உள்ளேயும் வெளியேயும் இருக்கும் யூதர்கள் மீது தாக்குதல்கள் நடத்துவதற்கு அழைப்பு விடுத்துள்ளார்.
கடவுளின் வழிகாட்டலுடன் இஸ்ரேலுக்கு உள்ளேயும் வெளியேயும் உள்ள யூதர்கள் மீது எங்களால் முடிந்தவரை தாக்குதலை தொடுப்போமென இச்செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் மீதான தாக்குதல்களை வலியுறுத்தி கடந்த மாதம் வெளியிடப்பட்ட ஷவாஹிரியின் ஒளிநாடாவைத் தொடர்ந்தே இப்புதிய ஒளிநாடா வெளியிடப்பட்டுள்ளது.