* ஜே.வி.பி.உறுப்பினர் வலியுறுத்தல்
வலப்பனை , ஹங்குரான்கெத்த ஆகிய பிரதேசங்களில் மண்சரிவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தோட்டத் தொழிலாளர்களை பலாத்காரமாக வெளியேற்றியாவது இடம் வழங்க அரசாங்கம் முன் வர வேண்டும். கடந்த ஒரு வருடகாலமாக அநாதைகளாக உள்ள இம்மக்களுக்கு இடம் வழங்க தோட்டங்களில் உள்ள சிலரும் சந்திரசேகரன் போன்றவர்களும் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர். ஆகவே அரசாங்கம் தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி பலாத்காரமாக தொழிலாளர்களை வெளியேற்றியாவது இடம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் . இவ்வாறு கடந்த 31 ஆம் திகதி நடந்த வலப்பனை பிரதேச சபைக் கூட்டத்தில் ஜே.வி.பி.உறுப்பினர் மத்தும பண்டார வலியுறுத்தினார்.
மண்சரிவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிலம் வழங்குவதிலுள்ள சிக்கல்கள் குறித்த விவாதத்திலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இவரது இனவாதப் பேச்சுக்கு பதிலளித்துப் பேசிய புதிய ஜனநாயகக் கட்சியின் வலப்பனை பிரதேச சபை உறுப்பினர் ச.பன்னீர்செல்வம் குறித்த ஜே.வி.பி.உறுப்பினரின் உரைக்கு கடும் கண்டனத்தைத் தெரிவித்ததோடு, பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிலமும் உரிய நிவாரணமும் வழங்குவதற்கு எமது ஆதரவை இச்சபையில் ஏலவே தெரிவித்துள்ளோம்.
ஆனால் இங்கு பேசிய ஜே.வி.பி.உறுப்பினர் கூறியவாறு, தோட்டத் தொழிலாளர்களை பலாத்காரமாக வெளியேற்றி நிலம் வழங்க நாம் ஒருபோதும் அனுமதிக்கப்போவதில்லை. ஜே.வி.பி.யின் இனவெறிக் கூச்சலுக்கு நாம் அடிபணிய போவதில்லை. இம் மண்ணில் இருந்து யாரும் எங்களை வெளியேற்ற முடியாது. இது நாங்கள் வாழுகின்ற பூமி; இதில் இருந்த எங்களை வெளியேற்ற அரசாங்கத்திற்கும் உரிமை கிடையாது.
பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் அல்லது நிலம் வழங்கப்படும்போது இன்னொரு பகுதி மக்களை அகதிகளாக்க முடியாது. இம் மண்ணுக்கும் எங்களுக்கும் ஒரு ஆத்மீக தொடர்பும், உறவும் உள்ளது. இதனை அறுத்துவிட முடியாது. இம்மண்ணே எங்களது வாழ்விடமாகவும், வாழ்க்கையாகவும் இருக்கிறது. ஆகவே ஜே.வி.பி.யின் இக்கருத்துக்கு நாம் கடுமையான கண்டனத்தை தெரிவிக்கிறோம். ஜே.வி.பி. தோட்டங்களில் இருந்து தொழிலாளர்களை விரட்டியடிக்க எடுக்கின்ற நடவடிக்கைகளை நாம் மீண்டும் வன்மையாக கண்டிக்கிறோம் என்று தெரிவித்தார்.
இவரின் இக்கருத்தை மறுத்த ஜே.வி.பி.உறுப்பினர் பேச முற்பட்டபோது புதிய ஜனநாயக கட்சியின் சபை உறுப்பினரால் தடுக்கப்பட்டதோடு இங்கே அவரின் பேச்சு பதிவு செய்யப்பட்டுள்ளதால் அவர் மீண்டும் தான் அவ்வாறு பேசவில்லை என்று மறுக்க முடியாது என்றார்.
இவ்விவாதத்திற்கு மத்தியில் உரை நிகழ்த்த எழுந்த ஜே.வி.பி.யின் இன்னொரு உறுப்பினரான ஜெயசீலன், தமது கட்சிக்காரர் அந்நோக்கத்தில் கூறவில்லை என்று கூறியபோதும் அவரும் பொய் பேசுகின்றார் என்றும் இங்கே பதிவு இருப்பதனால் யாரும் பொய்கூற வேண்டாம் என்றும் பு.ஜ.கட்சி உறுப்பினர் உரத்துக் கூறினார். இதன் பின் ஜே.வி.பி.உறுப்பினர் கள் இருவரும் அமைதியானார்கள்.