* திஸ்ஸ அத்தநாயக்க தெரிவிப்பு
அரசாங்கம் யுத்தத்தை மக்களுக்கு விற்க முயற்சிப்பதை ஐக்கிய தேசியக் கட்சி ஒருபோதும் அனுமதிக்காது என ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்தார்.
கம்பளை தொகுதி ஐக்கிய தேசியக் கட்சி செயற்குழு உறுப்பினர் தெரிவுக்கான பொதுக்கூட்டம், கண்டி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், கம்பளை தொகுதி அமைப்பாளருமான ஏ.ஆர்.எம்.ஏ. காதர் தலைமையில் கம்பளை நகரசபை மண்டபத்தில் அண்மையில் நடைபெற்ற போது திஸ்ஸ அத்தநாயக்க தொடர்ந்தும் அங்கு உரையாற்றுகையில்;
யுத்தத்தில் வெற்றிபெறுவதையும் பயங்கரவாதத்தை முறியடிப்பதையும் ஐக்கிய தேசியக் கட்சி எதிர்க்கப்போவதில்லை. ஆனால், யுத்தம் என்ற லேபலைக் காட்டி மக்களின் பணப்பையினுள் அரசு கைபோட நாம் இடமளிக்க மாட்டோம். நாட்டின் பொருளாதார, அரசியல் பிரச்சினைகளை யுத்தத்தால் மூடி மறைக்காதீர்கள்.
இந்த யுத்தத்தை காட்டி சிலர் பணம் சம்பாதிக்கின்றனர். ஊழல், இலஞ்சம் மற்றும் மோசடிகள் பாரியளவில் தலைதூக்கியுள்ளன. அரசு யுத்தம் புரிவது போல் செயற்படுகின்றதே தவிர யுத்தம் புரியவில்லை.
கிழக்கில், உள்ளூராட்சித் தேர்தல் நியாயமாகவும் அமைதியாகவும் நடைபெற்றது என்று அரசு கூறுகின்றது. ஆனால், இத்தேர்தலில் போட்டியிட பிள்ளையானிடமும் அரசிடமும் அனுமதி பெறவேண்டியிருந்தது. இத்தேர்தலில் வேட்பாளர்களையும் மக்களையும் பலிகொடுக்க நாம் விரும்பவில்லை.
இன்று கிழக்கில் ஆயுதம் தரித்த குழுக்கள் பெருமளவில் நடமாடுகின்றன. இவர்களிடம் ஆட்சி அதிகாரம் கையளிக்கப்படுவதால் ஏற்படும் விளைவுகள் பற்றி அரசு நன்கு சிந்திக்க வேண்டும்.
ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமைத்துவத்திற்கும் எனக்குமிடையில் பிரச்சினை என்று சில ஊடகங்கள் கூறுகின்றன. இதில் எதுவித உண்மைகளும் இல்லை. நான் இறுதி வரையும் தற்போதைய தலைமைத்துவத்திற்கு ஒத்துழைப்பு வழங்குவேன்.
ஐக்கிய தேசியக் கட்சி, மக்கள் பலத்தை ஒன்றுதிரட்டிப் போராடும் அணுகுமுறைகளை முன்னெடுத்து வருகின்றது. ஐக்கிய தேசியக்கட்சி ஆட்சியிலிருந்தாலும் இல்லாவிட்டாலும் தனது ஆதரவாளர்களை ஒருபோதும் கைவிடாது. பொருளாதார நெருக்கடியிலிருந்து மீட்சி பெற மக்கள் ஐக்கிய தேசியக் கட்சியைப் பலப்படுத்த முன்வர வேண்டும்.
கம்பளை, நாவலப்பிட்டி, பாத்ததும்பறை தொகுதிகளில் தேர்தல் காலங்களில் ஐக்கிய தேசியக் கட்சி ஆதரவாளர்கள் முகங்கொடுக்கும் அடாவடித்தனங்கள் பற்றி நான் நன்கு அறிவேன். எனவே, அரசியல் பழிவாங்கலுக்குட்பட்டோருக்கு எமது ஆட்சியில் நிவாரணம் வழங்கப்படும்.
மக்களையும் கட்சியையும் காட்டிக் கொடுத்து விட்டு அரசுடன் இணைந்த பலர் எம்முடன் வந்து இணைந்து கொள்ள தயாராகி வருவதாகவும் அவர் தெரிவித்தார்.