* பத்மநாதன் எம்.பி.யின் முயற்சியால் பலன்
அம்பாறை மாவட்டத்தில் மூன்று பிரதேச செயலகப் பிரிவுகளில் மூன்று சந்தைகளுக்கான புதிய கட்டிடத் தொகுதி நிர்மாணிப்பதற்காக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் க.பத்மநாதன் எடுத்த முயற்சியினால் வடகிழக்கு கரையோர சமுதாய அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் 3 கோடியே 92 இலட்சம் ரூபா நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
கடந்த வருடம் ஐப்பசி மாதம் திருக்கோவில் ஆலையடிவேம்பு, காரைதீவு பிரதேசங்களில் புதிய சந்தைக் கட்டிடம் நிர்மாணிப்பதற்கு வடகிழக்கு கரையோர சமுதாய அபிவிருத்தித் திட்டப் பணிப்பாளர் குருஸிடம் பாராளுமன்ற உறுப்பினர் க.பத்மநாதன் வேண்டுகோள் விடுத்ததற்கு அமைவாக திருக்கோவில் பிரதேச தம்பிலுவில் சந்தைக் கட்டிடத்திற்கு 1 கோடி 32 இலட்சம் ரூபா நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு இவற்றுக்கான ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டு அடுத்த வாரம் புனர்நிர்மாண வேலைகள் ஆரம்பிக்கப்படவுள்ளன.
இதேவேளை, ஆலையடிவேம்பு பிரதேச சந்தைக் கட்டிடத்தை ஒரு கோடியே 30 இலட்சம் ரூபா செலவில் புனர்நிர்மாணிப்பதற்கான அடிக்கல் நாட்டு நிகழ்வு நடைபெற்றது. இதில் அதிதிகளாக வடகிழக்கு கரையோர அபிவிருத்தித் திட்டப் பணிப்பாளர் குரூஸ், அம்பாறை மாவட்ட திட்டப் பணிப்பாளர் ஏ.எல்.எம்.தௌபீக், ஆலையடிவேம்பு பிரதேச சபை தவிசாளர் மு.ஆனைக்குட்டி ஆகியோர் கலந்துகொண்டு அடிக்கல் நாட்டி வைத்ததுடன் புனர்நிர்மாண வேலைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
காரைதீவு பிரதேசத்துக்கான சந்தைக் கட்டிடத்திற்கான கேள்வி மனுப் பத்திரம் அடுத்த மாதம் கோரப்படவுள்ளது என பாராளுமன்ற உறுப்பினர் க.பத்மநாதன் தெரிவித்தார்.