* அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன
அரசியல்வாதிகளும் ஊடகத்துறையினரும் தமது கடமையையும், பொறுப்பினையும் உணர்ந்து செயற்பட வேண்டும் என்று தெரிவித்துள்ள ஊடகத்துறை அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன இலங்கையில் ஊடக சுதந்திரம் அதிகமாக பேணப்படுகின்றது என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.
அண்மையில் இரத்தினபுரி மாவட்டத்தில் இடம்பெற்ற மேற்படி மாவட்ட ஊடகவியலாளர்ளுக்கான செயலமர்வில் கலந்து கொண்டு உரையாற்றியபோது இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் கூறியதாவது;
அமெரிக்காவில் தவறு செய்யும் ஊடகவியலாளர்களை தண்டிக்க சட்டத்தில் இடம் உள்ளது. அத்துடன் அவர்கள் இராணுவ இரகசியங்கள், யுத்த இரகசியங்கள் எதனையும் வெளியிட அனுமதிக்கப்படுவதில்லை.
ஆனால், இலங்கையில் ஊடகவியலாளர்கள் தவறு செய்யும் போது அவர்களை தண்டிக்க முடியாது. அத்துடன் இலங்கை ஊடகங்களும், ஊடகவியலாளர்களும் யுத்தம் குறித்து இராணுவ தகவல்கள் குறித்தும் தாராளமாக வெளியிடுகின்றனர்.
இதற்கு ஞாயிறு வெளியீடுகள் சாட்சி பகரும். இதனை தட்டிக் கேட்டால் பல்வேறு பிரச்சினைகள் ஏற்படுகின்றன.
ஊடகவியலாளர்கள் யாருக்காக செய்தி எழுதுகின்றனர் என்பதனை சிந்திக்க வேண்டும். நாட்டுக்கும் நாட்டு மக்களுக்கும் அபகீர்த்தி ஏற்படும் வகையில் எவ்வித செய்தியினையும் வெளியிடக் கூடாது.
இது நாட்டுப்பற்றுள்ள அனைவரும் யதார்த்தபூர்வத்தினை கருத்திற்கொண்டு செயற்படவேண்டும்.
அரசியல்வாதிகளும் ஊடகத்துறையினரும் தமது கடமையையும் பொறுப்பினையும் உணர்ந்து செயற்படவேண்டும்.
அவ்வாறே அநேகமானவர்கள் செயற்படுகின்றனர்.
அரசியல்வாதிகளும் ஊடகவியலாளர்களும் சமூகத்தின் நலன் கருதி சேவை செய்வதற்கு வந்தவர்கள். எனவே சமூகத்திற்கு இடையூறு, துன்புறுத்தல் ஏற்படும் வகையில் செய்திகள் வெளியிடக்கூடாது அவ்வாறு செயற்படவும் கூடாது என்றார்.