* பிரதியமைச்சர் ஜெகதீஸ்வரன் தெரிவிப்பு
உலகத்தின் மாற்றங்களுக்கும் சவால்களுக்கும் முகங் கொடுக்கக் கூடிய ஒரு மலையக சமுதாயமொன்றை உருவாக்க வேண்டியது காலத்தின் தேவையாகும் என்று தேசிய ஒருமைப்பாட்டு பிரதியமைச்சர் எஸ்.ஜெகதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.
அண்மையில் மேற்படி அமைச்சின் அலுவலகத்தில் இடம் பெற்ற மலையக மக்களுடனான ஒன்று கூடலொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய போது இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் கூறியதாவது;
உலகத்தில் இந்தியத் தமிழர்கள் செறிந்து வாழும் நாடுகளில் முறையான அரசியல், கல்வி மற்றும் ஏனைய உரிமைகளை அதிகம் பெற்று வாழும் சமூகமாக எம் சமூகமே காணப்படுகின்றது என்பதை நினைக்கும் போது பெருமையாகவும் இந்த அனைத்து உரிமைகளையும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் மறைந்த மூத்த தலைவர் சௌமியமூர்த்தி தொண்டமானின் கடும் முயற்சியாலும் அயராத உழைப்பினாலும் பெறப்பட்டது என்பதை நினைக்கும் போது நானும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் அங்கத்தவனாகப் பெருமிதம் அடைகிறேன்.
எப்போதுமே கையேந்திகளாகவும், மற்றவர்களின் அற்ப சொற்ப விளையாட்டுபகரணங்கள், வீட்டுக் கூரைத் தகடுகள், சீமெந்து என்பவற்றிற்கு அடிமையாகாது அவர்களின் அற்பமான ஊடக பிரசார முயற்சிகளுக்கும் அடிபணியாமல் எமது மலையக சமுதாயம் ஓர் புத்துணர்ச்சியை பெறவேண்டிய கட்டாய நிலைக்கு இன்று தள்ளப்பட்டுள்ளது.
ஒரு புறம் இவ்வகையான அற்ப சலுகைகளுக்கு நம் மக்கள் பகடைக் காய்களாக மாற்றப்பட்டிருப்பதை நினைக்கும் போது எமது மறைந்த தலைவரின் முயற்சி, அவர் சிந்திய வியர்வைத் துளிகள் அர்த்தமற்றவைகளாகப் போய்விடுமோ என்ற அச்ச நிலையே ஏற்படுகின்றது.
ஓர் சமுதாயத்தின் உழைப்பின் பயனாலேயே இன்று மலேசியா இந்த அளவு ஓர் பாரிய முன்னேற்றத்தை அடைந்துள்ளது. ஒரு காலத்தில் எம்மைப் போன்றே மலேசியாவிற்கு அழைத்து வரப்பட்ட இந்திய தமிழர்கள் ஆரம்பத்தில் எம்மைப் போன்றே தேயிலை மற்றும் இறப்பர் தோட்டங்களில் வேலைக்கு அமர்த்தப்பட்டிருந்தனர்.
ஆனால் அம்மக்களின் கடும் உழைப்பு, தேடல், வாழ்க்கையை வெற்றி கொள்ள வேண்டும் என்ற என்ற வெறி மற்றும் உந்துதல்கள் என்பவற்றால் மலேசியாவை மட்டுமல்லாது தம் வாழ்க்கைத் தரத்தையும் மிகவும் சிறப்பாக உயர்த்திக் கொண்டுள்ளனர்.
இன்றைய மலேசியாவில் இந்தியர்களின் அரசியல் உரிமைகள் நம்மை விட மிகக் குறைந்து காணப்பட்டாலும், வாழ்க்கைத் தரம் தொழில் துறை, கல்வி என்பவற்றை நோக்கும் போது அவர்கள் எம்மை விட பன் மடங்கு மேலோங்கிக் காணப்படகிறார்கள். இதற்கான முழுக் காரணமும் தத்தமது உழைப்பின் பால் அவர்கள் வைத்திருக்கும் நம்பிக்கையே ஆகும்.
ஓர் சமுதாயத்தின் வளர்ச்சியானது அவர்களை பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல் வாதிகளை மட்டும் தங்கியிருப்பதில்லை. தத்தமது வாழ்க்கை முறை ஏற்படுத்திக் கொள்ளும் மாற்றங்கள், தம் மீதான நம்பிக்கை, தொழில் மாற்றம், எதிர்காலம் பற்றிய தேடல் போன்ற ஏனைய காரணங்களும் முக்கிய பங்கு வகிக்கின்றன.
தற்போதைய அரசாங்கத்தால் மலையக இளைஞர்களை மையப்படுத்தி பல தொழில் வாய்ப்புகள் உருவாக்கப்பட்டு வருகின்றன. அதில் முக்கியமாக மலையக காவல் நடவடிக்கைகளுக்காக பொலிஸ் உத்தியோகத்தர்களை மலையகத் தமிழ் இளைஞர்களைக் கொண்டும் பூர்த்தி செய்யப்பட வேண்டுமென ஜனாதிபதி அறிவுறுத்தியுள்ளார்.
அது மட்டுமல்லாது நம் மக்களுக்கான தபால் விநியோகத்திற்கான ஆட்சேர்ப்பு,கிராம சேவையாளருக்கான ஆட்சேர்ப்பு என்பவை மலையக இளைஞர் யுவதிகளின் கணிசமான தொகையைக் கருத்திற் கொண்டே செயற்பட்டு வருகின்றது. அதுமட்டுமல்லாது வேலைவாய்ப்புப் பணியகத்தாலும் பல்வேறு வெளிநாட்டு தொழில் வாய்ப்புகள் ஒதுக்கப்பட்டும் வருகின்றன.
இதுவரை காலமும் வீட்டு வேலைகளுக்காக மட்டுமே எமது மலையகப் பெண்களை வெளிநாட்டு தொழில் வாய்ப்புகளுக்கு அனுப்பி வைப்பதை இனிவரும் காலங்களில் முற்றாகவே நிறுத்தி விட முயற்சிக்கும் ஜனாதிபதியின் பாரிய முயற்சிக்கு நான் எனது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்வதுடன் இனியும் தலைநகர் பகுதிகளுக்கோ அல்லது நாட்டின் ஏனைய பகுதிகளுக்கோ நம் பிள்ளைகளை வீட்டு வேலை செய்வதற்கு அனுப்புவதை முற்றாகத் தடைசெய்ய வேண்டிய பாரிய பொறுப்பு பெற்றோர்களின் கையிலேயே முழுமையாகத் தங்கியுள்ளது.
பணத்துக்காக எம் பிள்ளைகளை அனுப்பி அவர்கள் அனுபவிக்கும் இன்னோரன்ன துன்பங்களை இனியாவது அடியோடு ஒழிப்போம். அவர்களுக்கு முறையான தொழிற்பயிற்சி என்பவற்றை வழங்குவதன் மூலம் எம் சமுதாயமேம்பாடு மற்றும் வளர்ச்சிக்கான தொழில் துறைகளில் ஈடுபட வைக்க வேண்டும். இதுவே இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் எதிர்காலத் திட்டங்களில் ஒன்றாகவும் இருந்து வருகின்றது.
இன்றைய காலகட்டத்தில் கணினியின் முக்கியத்துவம் பற்றி நாம் அறியாதது ஒன்றுமில்லை. ஆனால் வெளி மாவட்டங்களில் போன்று குறிப்பாக எமது மலையக இளைஞர் சமுதாயமும் அவற்றின் தேர்ச்சியுற்றிருப்பது எமது தலைவரின் கவனத்தை ஈர்த்ததன் காரணமே இன்று எம் மலையகத்தில் கணினி நிறுவனங்கள் 50 பிரஜா சக்தி அமைப்புகளை நிறுவி அவற்றினால் வழங்கப்படும் கணினிப் பயிற்சித் திட்டங்களை எமது படித்த மலையக இளைஞர் சமுதாயம் இலவசமாக அனுபவிக்க வேண்டிய ஏற்பாடுகளை ஒரு தியாக சிந்தனையோடு மேற்கொண்டுள்ளார்.
அது மட்டுமல்லாது இனிவரும் காலங்களில் மேலும் 350 தோட்டங்களை அங்குரார்ப்பணம் செய்து வைக்கும் அவரது முயற்சிக்கும் நாம் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றார்.