தீவுப் பகுதியில் அடிப்படை வசதிகள் குறைந்த நெடுந்தீவுக்கென சேவையில் ஈடுபட்டுவரும் இலங்கை போக்குவரத்து சபையின் ஒரே பஸ் வண்டி அடிக்கடி பழுதடைந்து வருவதால் நெடுந்தீவு மேற்கில் வசித்து வரும் மக்கள் பல சமயங்களில் வைத்தியசாலைக்கு மாவலி துறைமுகத்துக்கு ஐந்து மைல் தூரத்தை நடந்து வந்தே பணிகளை மேற்கொள்ள வேண்டியுள்ளது.
யாழ்ப்பாணத்தில் இருந்து இம்மக்கள் நெடுந்தீவுக்குச் செல்ல குறிகட்டுவான் இறங்குதுறைக்கு வந்து இரண்டு மணித்தியாலம் இறங்கு துறையில் தங்கி பெரும்பாலான நாட்களில் அச்சம் கலந்த கடற்பயணத்தை படகுகள் மூலமாகவே மேற்கொள்ள வேண்டியுள்ளது. வீதி அவிவிருத்தி அதிகார சபையால் நடாத்தப்படும் குமுதினி பயணிகள் படகு அடிக்கடி பழுதடைந்து வருவதால் நெடுந்தீவு மக்களின் அவலம் பல சகாப்தங்களாக தொடர்ந்து வருகின்றது.
குறிகட்டுவான் இறங்கு துறையில் தவமிருந்து இரு மணித்தியாலம் கடல் பயணம் மேற்கொண்டு மாவலி துறையை அடைந்து வீடுகளுக்கு செல்லும் போது பல தடவைகள் கொண்டு வந்த பொருட்களை தலையில் சுமந்து செல்லும் பரிதாபத்தை இதுவரை எவரும் கண்டு கொள்ளவில்லையென அப்பகுதி மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.