* அமைச்சர் றிசாட் பதியுதீன்
ஒரு இனத்தை மற்றொரு இனம் அடக்கி ஆளாமல் எல்லா இனங்களும் சமத்துவமாக ஒருவரை ஒருவர் மதிக்கின்ற நிலைமை இந்த நாட்டில் ஏற்பட வேண்டும் என வன்னிமாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், புனர்வாழ்வு அமைச்சருமான றிசாட் பதியுதீன் தெரிவித்துள்ளார்.
வவுனியா கச்சேரியில் இடம்பெற்ற மாவட்ட ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு கூறினார்.
தொடர்ந்து பேசிய அமைச்சர்:
நாட்டில் சமாதானம் ஏற்படுமானால் கிடைக்கும் நிதியைக் கொண்டு மக்களுடைய வாழ்க்கைக்குத் தேவைப்படும் சகல அபிவிருத்திப் பணிகளையும் எம்மால் செய்ய முடியும்.
சகல இனமக்களும் நிம்மதியாகவும் சந்தோசமாகவும் வாழக்கூடிய சூழ்நிலை ஏற்பட வேண்டும் என்பதே சகல மக்களதும் விருப்பமாகும்.
யுத்தம் காரணமாக பெரிதும் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் வன்னி மாவட்டம் முக்கியமானது. இதனால், இம்மாவட்டத்தின் அபிவிருத்தி வேலைகளுக்கு பல வழிகளிலும் நிதி உதவிகள் எமக்குக் கிடைத்து வருகிறது.
ஜனாதிபதியின் மகிந்த சிந்தனை வேலைத்திட்டத்தின் கீழும் நிதி கிடைத்துள்ளது.
ஆனால், இங்கு கேட்கும் குண்டுச் சத்தங்களும் வெடிச்சத்தங்களும் மக்களைப் பெரிதும் பீதிக்குள்ளாக்கி வருகின்றது. எனவே, நாட்டில் ஒரு நிரந்தர சமாதானம் ஏற்பட்டால் எமது பணிகளை முன்னெடுத்துச் செல்ல முடியும்.
வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தனது உரையில் கூறியதாவது;
வன்னி மாவட்டத்தின் அபிவிருத்தி தொடர்பான பல விடயங்கள் இங்கு ஆராயப்பட்டபோதிலும் தீர்வு காண முடியாத விடயங்கள் பல உள்ளன. இதனை நாம் ஏற்றுக் கொள்ள வேண்டும்.
குறிப்பாக சில பணிகளுக்கு பாதுகாப்பு பிரச்சினைகள் உள்ளதால் நாம் அப்பணிகளை செய்ய முடியாதுள்ளது.
மதவாச்சி சோதனைச் சாவடியூடாக நேரடியாக வன்னி மாவட்ட மக்கள் போக்குவரத்து செய்ய முடியாத நிலைமைகள், கஷ்டங்கள் குறித்து நாம் பாராளுமன்றத்திலும் பல தடவைகள் குரல் எழுப்பினோம். ஆனால், எதுவித தீர்வும் கிடைக்கவில்லை.
அதனால், மதவாச்சி சோதனை நிலையத்தில் வடபகுதி மக்கள் எதிர்ே நாக்கிவருகின்ற பிரச்சினைகள் தொடர்பாக அமைச்சர் றிசாட் பதியுதீன் பாதுகாப்பு அமைச்சின் செயலாளரின் கவனத்துக்குக் கொண்டு வந்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.