மனிதக் கொலை உட்பட பாலியல் வல்லுறவுகள் சம்பந்தமாக இரத்தினபுரி மாவட்டம் முன்னிலையில் இருப்பதை அறிந்து கவலைப்படுவதாக தெரிவித்த மின்சக்தி, எரிசக்தி அமைச்சர் ஜோன் செனவிரத்ன இதனை உடனடியாக நிறுத்த நடவடிக்கையெடுக்கவுள்ளதாகவும் தெரிவித்தார்.
கிரியெல்லையில் இடம்பெற்ற கமநெகும வேலைத் திட்டத்தில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்;
"இப்பிரதேசங்களில் சிறுவர் துஷ்பிரயோகம் அதிகளவு இடம்பெற்றுள்ளதாக பத்திரிகைகளில் செய்திகள் வெளிவந்துள்ளன.
2003- 2004 ஆம் வருடங்களில் இங்கு கொலைகள் கூடுதலாக இடம்பெற்றுள்ளன. இவற்றை நிறுத்துவதற்காக பொலிஸ் அதிகாரிகள் கலந்துரையாடலொன்றை நடத்தவுயுள்ளனர்.
இரத்தினபுரி மாவட்டத்தில் கல்வி அபிவிருத்தி சம்பந்தமாக பலமுறை எடுத்துக் கூறியுள்ளேன். ஆசிரியர் குறைபாடுகள் ஏனைய தேவைகளையும் சுட்டிக் காட்டியுள்ளேன். அவற்றை சீராக மேற்கொள்ள பெற்றோர்களும் ஒத்துழைக்க வேண்டும்.
துஷ்பிரயோகங்களை தடுத்து நிறுத்துவதற்கு பொலிஸில் வேலைத் திட்டங்கள் இருக்கின்ற போதும் அவற்றை மேலும் விரிவாக்க நடவடிக்கையெடுக்கப்படவுள்ளதாக"வும் தெரிவித்தார்.