* ஜே.வி.பி.எம்.பி. சந்திரசேகரன்
ஊழல், நிர்வாகச் சீர்கேடுகள் மாகாண சபைகளில் மேலும் மலிந்துவிடக் கூடாதென்பதற்காகவே கிழக்கு மாகாண சபைக்கான தேர்தலில் தாம் போட்டியிடுவதாக ஜே.வி.பி.தெரிவித்துள்ளது.
மேலும், மாகாண சபை முறைமைக்கு எமது கட்சி ஏற்கனவே எதிர்ப்பை தெரிவித்திருந்த போதும், பாராளுமன்ற அரசியல் யாப்பில் ஓர் அங்கமாக மாகாணசபை முறைமாற்றப்பட்டுள்ளதாலேயே இத்தேர்தலில் நாம் போட்டியிடுகிறோம் என்றும் ஜே.வி.பி.யின் பாராளுமன்ற உறுப்பினரான ஆர்.சந்திரசேகரன் தெரிவித்தார்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை, நெருக்கடிக்குத் தீர்வு உண்மையான தேசிய முன்னணி எனும் பகிரங்க சொற்பொழிவு சம்மாந்துறை நகர மண்டபத்தில் நடைபெற்ற போது விஷேட பேச்சாளராகக் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் அங்கு மேலும் உரையாற்றுகையில்; மாகாண சபை முறை என்பது உண்மையில் மக்கள் சபை அல்ல; இது இந்தியாவின் நலனை பேணுவதற்காக ஜே.ஆர்.ஜெயவர்தனாவை அடிபணிய வைத்து இந்தியாவினால் திணித்து வழங்கப்பட்ட ஒரு முறையாகும், இதன் மூலம் மக்களுக்கு சிறந்த சேவையை வழங்க முடியுமென ஜே.வி.பி.ஒருபோதும் நம்பவில்லை.
மேல்மாகாண சபையைப் பொறுத்த வரை அங்கு வெளியிடப்படும் சுற்று நிருபங்களை தமிழில் காணவே முடியாது. இது அங்குவாழும் மக்களின் நலனில் பாரிய பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளது.
ஜே.வி.பி.கிழக்கு மாகாணசபை தேர்தலில் தனித்து போட்டியிடத் தீர்மானித்துள்ளதுடன் எமது வேட்பாளர் பட்டியலில் தமிழ், முஸ்லிம், சிங்கள மூவின வேட்பாளர்களையும் களமிறக்கவும் திட்டமிட்டுள்ளோம். ரோஹண விஜயவீரவின் வரவோடு எமது கட்சியை இனவாதக் கட்சி என்று முத்திரை குத்த பலர் முயற்சித்தனர். ஆனால் ஜே.வி.பி.ஒருபோதும் இனவாதத்துடன் செயற்படவில்லை. இந்த நாட்டில் தற்பொழுது ஆட்சியிலுள்ள அரசை உருவாக்கியது ஜே.வி.பி.யே.
ஆனால் அப்போது ஐ.தே.கட்சியில் இருந்து மகிந்த சிந்தனைக்கு எதிராக செயற்பட்டவர்கள் இன்று சகலதையும் மறந்து தாங்களே மகிந்த சிந்தனையை உருவாக்கியவர்கள் போன்று பேசித் திரிவதை நீங்கள் காணமுடியும் எனவும் அவர் கூறினார்.
இதில் திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வஸந்த பியதிஸ்ஸ உட்படப் பலரும் உரையாற்றினர்.