-யாழ்நகர் நிருபர்-
யாழ்.குடாநாட்டில் நடைபெறுகின்ற சிறுவர் துஷ்பிரயோகங்கள் தொடர்பாகச் சிறுவர் பாதுகாப்பு நிதியம் கூடிய அக்கறையுடன் செயற்படுகின்றது. இதன் மூலம் பல துஷ்பிரயோகங்களைத் தடுக்க முடிந்துள்ளது. தற்போது நடைபெறுகின்ற சிறுவர் துஷ்பிரயோகங்களையும் தடுத்து நிறுத்துவதற்கு தனது செயற்பாட்டை பிரதேச ரீதியாக விஸ்தரிக்கவுள்ளது என சிறுவர் பாதுகாப்பு நிதிய தலைமைச் செயலக செய்தித் தொடர்பாளர் மேனகா கல்யாணரட்ண தெரிவித்துள்ளார்.
சிறுவர் பாதுகாப்பு நிதியத்தின் யாழ்.அலுவலகத்தில் நேற்று மாலை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
சிறுவர் பாதுகாப்பு நிதியத்தின் யாழ்.அலுவலகத்தின் யாழ். மாவட்ட இணைப்பாளர் எஸ்.மகேந்திரன் மற்றும் மாவட்ட முகாமையாளர் விக்டர் ஆகியோர் கலந்துகொண்ட இப் பத்திரிகையாளர் சந்திப்பில் யாழ். குடாநாட்டில் சிறுவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பாக ஊடகத் தொடர்பாளர் மேனகா பத்திரிகையாளர்களிடம் கேட்டறிந்தார்.
இச்சந்திப்பில் சிறுவர்கள் தொடர்பான துஷ்பிரயோகங்களைப் பத்திரிகையாளர்கள் எடுத்துக்கூறினர்.
அங்கு அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்; யாழ்.குடாநாட்டில் சிறுவர்கள் எதிர்நோக்குகின்ற பிரச்சினைகள் அவர்களைச் சமூக ரீதியாகவும் உளவியல் ரீதியாகவும் பின்னடைய வைக்கிறது. இது தொடரும் பட்சத்தில் எதிர்காலத்தில் பாரிய சவால்களை நாம் எதிர்நோக்க வேண்டியதாகவிருக்கும். இது தொடர்பான விளக்கங்களை சமூகத்தில் ஏற்படுத்துவதற்காக பிரதேச மட்டத்தில் பிரசாரங்கள் முன்னெடுக்கப்படவுள்ளன என்று தெரிவித்தார்.
இது தொடர்பாக அங்கு கலந்துரையாடப்பட்ட ஏனைய விடயங்களாவன, சிறுவர்கள் தங்களை அறியாமலேயே சில செயற்பாடுகளில் ஈடுபடுகிறார்கள்.
தங்களைக் கட்டுப்படுத்த எவரும் இல்லையென்ற அறியாமை நிலையில் சிறுவர்கள் செயற்படுவதாலேயே சில பிரச்சினைகள் ஏற்படுகின்றன.
யுத்தத்தால் பாதிக்கப்பட்டவர்களின் சிறுவர்கள் உளத் தாக்கங்களுக்கு உட்பட்டுள்ளனர். இவர்கள் விசேட தேவைக்குரியவர்களாவர்.
சிறுவர் துஷ்பிரயோகங்களை தடுக்க உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படாவிட்டால் எதிர்காலத்தில் அது பாரிய சமூகப் பிரச்சினையாக மாற்றம் பெறலாம் என்றும் தெரிவிக்கப்பட்டது.