-யாழ்நகர் நிருபர்-
வலிகாமம் மேற்கு மற்றும் வலி.தென்மேற்குப் பகுதிகளில் நேற்று முன்தினம் புதன் கிழமை பிற்பகல் வேளை மினிசூறாவளி தாக்கியுள்ளது. அத்துடன் கடும் இடி மின்னலுடன் கூடிய மழையும் பெய்தது. மின்னல் தாக்கியதில் பெண்மணியொருவர் உயிரிழந்துள்ளதுடன், பல வீடுகளும் சேதமாகியுள்ளன.
பண்டத்தரிப்பில் மின்னல் தாக்கியதில் அவ்விடத்தைச் சேர்ந்த புலேந்திரன்- சொலினம் (வயது 75) என்ற பெண்ணே உயிரிழந்துள்ளார்.
இதேவேளை, தொல்புரம் மேற்கிலுள்ள செந்திலக ஷ்ரீ ராஜேஸ்வரா என்பவரின் வீட்டினை மின்னல் தாக்கியதில் வீடு மிக மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளது. அத்துடன் வீட்டின் தகரச் சீற்றுகள் பிய்த்தெறியப்பட்டுள்ளதுடன், வீட்டிலுள்ளே தொட்டியில் உறங்கிக்கொண்டிருந்த அவரின் கைக்குழந்தையும் மனைவியும் தெய்வாதீனமாகக் காயங்களின்றித் தப்பியுள்ளனர்.
மேற்படி பிரதேசங்களில் மினி சூறாவளியின் தாக்கத்தால் பல வீடுகளின் கூரைகள் சேதமாகியுள்ளதுடன், பயன்தரு மரங்கள் பலவும் முறிந்து வீழ்ந்துள்ளன.