* `இலங்கைக்கு கிரமமாக வருகைதரத் தவறிவிட்டது'
பிரெஞ்சு தன்னார்வ தொண்டர் நிறுவனப் பணியாளர்கள் 17 பேரின் படுகொலைகளை சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகள் மூடிமறைப்பதாக சுயாதீன மனித உரிமைகள் குழு குற்றம்சாட்டியிருக்கும் நிலையில், இது தொடர்பாக விசாரணை மேற்கொண்டுவரும் ஆணைக்குழுவை வெளிவிவகார அமைச்சர் ரோகித்த போகொல்லாகம தீவிரமாக ஆதரித்து கருத்து தெரிவித்திருக்கிறார்.
`உண்மை வெளிவர வேண்டும் என்று நாம் விரும்புகின்றோம்' என்று நேற்று முன்தினம் புதன் கிழமை தெரிவித்த வெளிவிவகார அமைச்சரிடம், 18 மாதங்களாக விசா ரணை ஆணைக்குழுவானது இன்னமும் விசாரணைகளை பூர்த்தி செய்யாதது ஏன் என்று கேட்டபோது,
`நீதிக்கான காரணம் இப்படித்தான் அமைய வேண்டும்' என்று நாம் பணிப்புரை விடுக்க முடியாது. அதன் பணிகளுக்கு அனுசரணை வழங்குவதன் மூலம் அதனை ஊக்குவிக்க மட்டுமே முடியுமென்று போகொல்லாகம கூறியுள்ளார்.
விசாரணைகள் சர்வதேச தரத்திற்கு அமைவாக இல்லையென சர்வதேச புகழ்பெற்ற சுயாதீன நிபுணர்கள் குழு கூறியிருப்பது பற்றிக் கேட்கப்பட்டபோது அக்குழுவானது ஒழுங்கான முறையில் இலங்கைக்கு வருகைதரத் தவறிவிட்டதாகவும் இதனால் நடைமுறை விடயங்களுக்கு தடங்கல் ஏற்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டிருக்கிறார்.
மனித உரிமைகளுக்கான பல்கலைக்கழக ஆசிரியர்கள் அமைப்பானது கடந்த செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிக்கையில், பாரதூரமான குற்றச்செயல்கள் தண்டிக்கப்படாமல் தொடர்ந்து இடம்பெறுகின்றன. திரும்பத்திரும்ப இடம்பெற்றுவரும் குற்றச் செயல்கள் தொடர்பாக விசேடமாக சிறுபான்மையினர் மீதான குற்றச் செயல்கள் குறித்து இலங்கை ஏன் இதுவரை நடவடிக்கைகளை மேற்கொள்ளாமல் இருக்கின்றது? மறுப்பதும் நிராகரிப்பதும் அச்சுறுத்துவதும் சாட்சிகள் கொல்லப்படுவதும் நிலைமையை மோசமாக்கியுள்ளது என்றும் குறிப்பிட்டுள்ளது.
இதற்கான பொறுப்பை அரசாங்கம் நிராகரித்திருக்கிறது. ்கண் கண்ட சாட்சிகள், நேரடி ஆதாரம் இருப்போர் முன்வர முடியும்' நாம் அதனை வரவேற்கிறோம் என்று அமைச்சர் போகொல்லாகம கூறியுள்ளார்.