* அமைச்சர் மகிந்த சமரசிங்க
ரொஷான் நாகலிங்கம்
ஐ.நா. மனித உரிமை பேரவையின் ஏழாவது அமர்வில் இலங்கைக்கு எதிராக தீர்மானம் எதுவும் எடுக்கவில்லையென மனித உரிமைகள் விவகார அமைச்சர் மஹிந்த சமரசிங்க தெரிவித்ததுடன், இதற்கு மனித உரிமையை பேணி பாதுகாக்க அரசாங்கம் மேற்கொண்ட நடவடிக்கையே காரணமெனவும் அவர் தெரிவித்தார்.
இது தொடர்பாக அவரது அமைச்சில் நேற்று வியாழக்கிழமை இடம் பெற்ற ஊடகவியலாளர் மகாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் அங்கு மேலும் உரையாற்றுகையில் ;
ஜெனிவாவில் நான்கு வாரங்களாகஇடம்பெற்ற ஐக்கிய நாடுகளின் மனித உரிமைக்கான ஆணைக்குழுவின் ஏழாவது அமர்வு கடந்த 3 முதல் 28 ஆம் திகதி வரை இடம் பெற்ற போது இலங்கைக்கு எதிரான முடிவுகள் மேற்கொள்ளப்படவில்லை.
மனித உரிமைக்கான பேரவையானது இலங்கை அரசு மற்றும் பாதுகாப்பு படையினரின் நிகழ்ச்சி நிரலில் மனித உரிமை மீறல் இல்லை என்பதுடன், மனித உரிமைகளை பாதுகாத்து மேம்படுத்துவதற்கு எடுத்த தீர்மானங்கள் மற்றும் நடவடிக்கைகள் தொடர்பில் அமர்வின் போது ஆராய்ந்தது.
இலங்கையின் மனித உரிமை நிலைமைகள் உரிய வகையில் முன்னெடுப்பதனை இந்த ஆராய்வில் கண்டறிந்ததன் காரணமாகவே எந்த எதிரான முடிவுகளையும் மேற்கொள்ளவில்லை.
பயங்கரவாதிகளுக்கு எதிராக நடவடிக்கைகளை இலங்கை மேற்கொண்டு வருவதுடன் மனித உரிமையைப் பாதுகாத்து மேம்படுத்துவதற்கு எடுத்த நடவடிக்கைகளை பேரவையின் பெரும்பான்மை உறுப்பினர்கள் ஏற்றுக்கொண்டனர்.
இந்த அமர்வில் உள்நாட்டு, சர்வதேச அரசசார்பற்ற நிறுவனங்கள் மற்றும் பல மேற்கு நாடுகளின் இலங்கை மனித உரிமை நிலைமைகள் குறித்த அறிக்கையை ஆராய்ந்த பின்னரே எந்த முடிவும் மேற்கொள்ளப்படவில்லை.
இதற்கு காரணம் அமர்வுக்கு முதல் கிழமை மேற்கொண்ட பிரசாரமே காரணமாகும். இலங்கை மனித உரிமை தொடர்பில் நீண்ட காலமாக ஐ.நா.வின் கொள்கையைக் கடைப்பிடிப்பதுடன் இதற்காக தன்னை அர்ப்பணித்து செயற்படுகின்றது.
இந்த அமர்வில் இலங்கை 5 விடயங்கள் தொடர்பில் தீர்மானங்களை முன்வைத்தது. அதாவது மனித உரிமை மற்றும் காலநிலை மாற்றம் மற்றும் பாரதூரமான வறுமை, சிறுவர் கடத்தல், விபசாரம், துஷ்பிரயோகம் மற்றும் உணவுக்கான உரிமை தொடர்பில் தீர்மானங்களை முன்வைத்தது.
ஆணைக்குழுவின் அடுத்த அமர்வு எதிர் வரும் ஜுன் மாதம் ஜெனிவாவில் இடம் பெறவுள்ளது எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.