* நடவடிக்கை எடுக்கப்போவதாக அரசு எச்சரிக்கை
-எம்.ஏ.எம்.நிலாம்-
இலங்கையின் அரசியலமைப்பில் திருத்தத்தை மேற்கொள்ளாமல் முன்னுரிமை அடிப்படையிலான சலுகைகளை வெளிநாட்டிலிருந்து அரசு பெற்றுக் கொள்ள முடியாதென மேற்கொள்ளப்படும் பிரசாரங்களை அரசாங்கம் முழுமையாக நிராகரிப்பதாகத் தெரிவித்துள்ளது.
எதிர்க்கட்சித் தலைவர் நாட்டின் சுயாதிபத்தியத்துக்கும் இறைமைக்கும் பங்கமேற்படுத்தும் விதத்தில் சர்வதேச மட்டத்தில் பிரசாரங்களை மேற்கொண்டு வருவதாக குற்றம்சாட்டியுள்ள அரசாங்கம், அவருக்கு எதிராக நடவடிக்கை எடுப்பது குறித்து கவனம் செலுத்தப்பட்டு வருவதாகவும் தெரிவித்திருக்கின்றது.
நேற்று வியாழக்கிழமை அரச தகவல் திணைக்களத்தில் இடம்பெற்ற அமைச்சரவைத் தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டில் அரசு விடுத்த விசேட அறிக்கையொன்றிலேயே மேற்கண்டவாறு குறிப்பிடப்பட்டிருக்கின்றது.
அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது;
இறக்குமதித் தீர்வை வரிச்சலுகை முறையொன்றின் அடிப்படையில் எமது நாட்டின் ஆடை உற்பத்திகள் ஏற்றுமதிக்காக கிடைக்கப்பெற்றுள்ள ஜீ.எஸ்.பி + அனுகூலத்தை நாட்டுக்குக் கிடைக்கமுடியாத விதத்தில் உள்நாட்டிலும் சர்வதேச மட்டத்திலும் கடந்த சில வாரங்களாக சில சக்திகளால் மேற்கொள்ளப்படும் பிரசார நடவடிக்கை தொடர்பாக அரசு தீவிர கவனம் செலுத்தி வருகிறது.
தங்களது குறுகிய நோக்கங்களை நிறைவேற்றிக் கொள்வதற்காக ஏற்றுக் கொள்ள முடியாத தர்க்கங்களை உருவாக்கி நாட்டுக்கு மிக மோசமான இழப்பை ஏற்படுத்துவதற்கு எமது நாட்டின் பிரஜைகள் சிலரே ஈடுபடுவது கவலை தரக் கூடியதாக உள்ளது.
இந்தப் பிரசார நடவடிக்கையின் மூலம் இலங்கை அரசியலமைப்பில் திருத்தம் கொண்டு வரப்படாமல் இந்த வரிச்சலுகைத் திட்டம் ஐரோப்பிய சமூகத்தால் முன் வைக்கப்பட்டிருக்கும் நிபந்தனைகள் நிறைவேற்றப்பட முடியாது என பிரசாரப்படுத்தப்பட்டுள்ளது.
உண்மைக்குப் புறம்பானதும் முறையற்ற தர்க்கத்தை முன் வைத்திருப்பது ஒரு அரச சார்பற்ற நிறுவனமாகும். அதை வைத்துக் கொண்டே எதிர்க்கட்சித் தலைவர் சர்வதேச மட்டத்தில் பிரசாரங்களை முன்னெடுத்துள்ளார்.
சிவில் மற்றும் அரசியல் உரிமைகள் தொடர்பான சர்வதேச சாசனத்தை இலங்கையில் அங்கீகரிப்பதும் நடைமுறைப்படுத்துவதும் இலங்கை அரசியலமைப்பின் மூலம் தடுக்கப்பட்டிருப்பதாகச் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.
அரசு இதனை முற்றுமுழுதாக நிராகரிக்கிறது. அரசின் நிலைப்பாட்டை சரியானதென்று உயர்நீதிமன்றம் உறுதிப்படுத்தியுள்ளது.
நாட்டுக்கு அபகீர்த்தியையும் இழப்பையும் ஏற்படுத்தக்கூடிய தவறான பிரசாரங்களை உள்நாட்டிலும் சர்வதேச மட்டத்திலும் முன்னெடுக்கப்படுவது கவலை தரக்கூடியதாகவே காணப்படுகின்றது.
இதனிடையே, 2008 மார்ச் மாதம் 16 ஆம் திகதியிடப்பட்டு விடுதலைப் புலிகளுடன் நெருக்கமான தொடர்பைக் கொண்ட நபரொருவரால் பிரிட்டிஷ் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்ட கடிதமொன்றில் மேற்படி வரிச்சலுகைத் திட்டத்தை உடனடியாக இரத்துச் செய்ய நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தப்பட்டுள்ளது.
எதிர்க் கட்சித் தலைவர் கூறுவது போன்று இத்திட்டத்துக்காக அரசியலமைப்புத் திருத்தம் அவசியப்படவில்லை. தற்போது நடைமுறையில் உள்ள சட்டவிதிகள் இதற்குத் தாராளமாகப் போதுமானதாகவே காணப்படுகிறது.
உள்நாட்டு அரசியல் நலன்களுக்காக சர்வதேச மட்டத்தில் நாட்டுக்கு கிடைக்கும் சலுகைகளை முறியடிப்பதற்கு எடுக்கப்படும் நடவடிக்கையானது அரசியல் நாகரிகமற்ற செயற்பாடாகவே நோக்க வேண்டியுள்ளது. நேர்மையான வழிமுறைகளைப் பின்பற்றாமல் குறுக்கு வழிகள் மூலம் நாட்டுக்கு அபகீர்த்தி ஏற்படுத்தும் விதத்திலும் பொருளாதார ரீதியில் பலவீனப்படுத்துவதிலும் செயற்பட முனைவது சிரேஷ்ட அரசியல் தலைவருக்குரிய அழகான செயலாக கருத முடியாதுள்ளது.
இதுபோன்ற செயற்பாடுகளுக்கு எவ்விதத்திலும் இடமளிக்க முடியாது. இச்செயற்பாடுகளுக்கு எதிராக அரசு கடுமையான நடவடிக்கை எடுக்க பின்வாங்கப் போவதில்லை. நாட்டின் வர்த்தக, வாணிப மேம்பாட்டை பாதுகாப்பதற்குரிய அனைத்து நடவடிக்கைகளையும் சர்வதேச மட்டத்தில் அரசு உறுதியுடன் மேற்கொள்ளத் தீர்மானித்துள்ளது.