தம்புள்ள பகுதியில் கடந்த 3 வாரங்களுக்கும் மேலாக பெய்து வரும் தொடர்ச்சியான மழையின் காரணமாக அறுவடைக்குக் காத்திருந்த `எச்' வலயம் மற்றும் `மீ' வலயத்தில் 15 ஆயிரம் ஏக்கருக்கும் அதிகமான நெல்வயல்கள் முற்றாக அழிவடைந்துள்ளதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.
மகாவலி `எச்' வலயத்தில் கல்னேவ, மடாட்டு கம, பலாகல மற்றும் எப்பாவெல, நொச்சியாகம ஆகிய பிரதேசங்களில் நெல் அறுவடை மேற்கொண்டிருந்த வேளையில் பெய்த கடும்மழையினால் தமது நெற்பயிர்களை வெள்ளம் அள்ளிச் சென்றிருப்பதாகக் தெரிவிக்கும் விவசாயிகள்; நெற்பயிர்ச் செய்கையின் பொருட்டு, வங்கிகளில் பெற்றுக்கொண்ட கடனை செலுத்த முடியாமல் நஞ்சருந்த நேருமோ என கவலை தெரிவிக்கின்றனர்.
நெற்கதிர்கள் முற்றாக நீரில் மூழ்கி முளைக்கத் தொடங்கியிருப்பதால், அறுவடை செய்ய முடியாத நிலையில் பல்லாயிரக்கணக்கான ஏக்கர் நெல்வயல்கள் விவசாயிகளினால் ஏலவே கைவிடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை, மகாவலி `ஜி' வலய விவசாயிகள் தமக்கு விவசாயி காப்புறுதித் திட்டத்தின் கீழ் முழுமைான இழப்பீட்டை விவசாயம் அமைச்சு, பெற்றுத்தர வேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.