கிழக்குமாகாண சபைத் தேர்தலை முழுப் பலத்துடன் எதிர்கொள்வதற்காக ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் அமைச்சர்கள், முதலமைச்சர்கள் களமிறங்கவுள்ளனர்.
ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் உத்தரவின் பேரில், கிழக்கு மாகாண சபைத் தேர்தலுக்காக மூன்று மாவட்டங்களிலும் பிரசார நடவடிக்கைகளுக்காக அமைச்சர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
தேர்தல் பிரசார வேலைகளுக்காக அமைச்சர்கள், பிரதி அமைச்சர்கள், எம்.பி. க்கள், முதலமைச்சர்கள், மாகாணசபை உறுப்பினர்கள் கிழக்கே செல்லவுள்ளனர்.
கிழக்கின் மூன்று மாவட்டங்களுக்கும் மூன்று நடவடிக்கை குழுக்கள் ஜனாதிபதியால் நியமிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய அமைச்சர்களான நிமால் சிறிபால டி சில்வா, ஏ.எச்.எம். பௌஸி ஆகியோர் திகாமடுள்ள (அம்பாறை) மாவட்ட பிரசார நடவடிக்கைகளுக்கும் அமைச்சர் சுசில் பிரேமஜயந்த மட்டக்களப்பு பிரசார நடவடிக்கைக்கும் அமைச்சர் ஜெயராஜ் பெர்னாண்டோ புள்ளே திருகோணமலை மாவட்ட பிரசார நடவடிக்கைக்கும் பொறுப்பாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
இதைவிட இந்த மாவட்டங்களிலுள்ள சகல மாநகர சபைகள் மற்றும் பிரதேச சபைகளிலும் பிரசார நடவடிக்கைகளுக்காக அமைச்சர்கள் மற்றும் பிரதி அமைச்சர்களும் பொறுப்பாக நியமிக்கப்படவுள்ளனர்.
தங்களின் இந்த நடவடிக்கை தொடர்பாக அனைத்து அமைச்சர்கள் மற்றும் பிரதி அமைச்சர்களுக்கு கட்சியின் செயலாளர் சுசில் பிரேமஜயந்த கடிதம் மூலம் அறிவித்துள்ளார். கடந்த சில தினங்களுக்கு முன் ஜனாதிபதி தலைமையில் கட்சியின் உயர் மட்டத் தலைவர்கள் கலந்து கொண்டகூட்டத்தில் கிழக்கு மாகாண சபைத் தேர்தல் தொடர்பான உத்திகள் வகுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.