* குருவிட்ட சிறைச்சாலை உதவிப் பொறுப்பதிகாரி தெரிவிப்பு
பலாங்கொடை நிருபர்
குருவிட்ட சிறைச்சாலையிலிருந்து தப்பிச் செல்ல முயற்சித்த போது சுட்டுக்கொல்லப்பட்ட 6 கைதிகளும் கொலைக் குற்றச்சாட்டுக்களின் பேரில் சிறைவைக்கப்பட்டிருந்தவர்கள் என்று சிறைச்சாலையின் உதவிப் பொறுப்பதிகாரி ரொகான் ஜயசூரிய தெரிவித்துள்ளார்.
இவர்களில் ஐவர் சிறைச்சாலை வளவிலும் மற்றவர் காட்டுப்பகுதியிலும் மறைந்திருந்த போதும் சிறைச்சாலை காவலர்களால் சுட்டுக்கொல்லப்பட்டனர். கடந்த செவ்வாய்க்கிழமை குருவிட்ட சிறைச்சாலையிலிருந்து அவிசாவளை, ருவான்வெல்ல நீதிமன்றங்களுக்கு கைதிகளை வழக்குகளுக்காக அழைத்து சென்றுவிட்டு மீண்டும் அழைத்து வந்து அவர்களை வாகனத்திலிருந்து இறக்கும் போது கைதிகளில் ஒருவர் சிறைக்காவலர்களை நோக்கிக் கைக்குண்டொன்றை வீசிவிட்டு தப்பிச்செல்ல முற்பட்டுள்ளார்.
சம்பவம் இடம்பெறும் போது சிறைச்சாலை வாகனத்தில் 60 கைதிகள் இருந்ததாகவும் இவர்களில் 30 பேர் அதிகுற்றச் சாட்டுக்களையுடையவர்களெனவும் கொல்லப்பட்ட 6 பேரில் ஒவ்வொருவருக்கும் ஒன்றுக்கு மேற்பட்ட கிரிமினல் குற்றச்சாட்டுக்கள் உள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
சிறைக் கைதிகள் கைக்குண்டை வீசியெறிய முயற்சித்ததுடன் சிறைக்காவலர்களின் ஆயுதங்களை அபகரிக்கவும் முயற்சித்துள்ளனர்.
சிறைக்கைதிகள் எப்படியேனும் சிறைக்காவலர்களை ஆயுதங்களால் தாக்கிக் கொலை செய்துவிட்டு தப்பிச்செல்ல முயற்சித்தமையினாலும் இவர்கள் தப்பிச்சென்று ஆயுதங்களால் பொது மக்களுக்கு அக்கிரமங்களைச் செய்யும் சூழ்நிலை இருந்ததாலும் தற்காப்புக்காகவும் இவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்த நிர்ப்பந்திக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது.
அவிசாவளை, ருவன்வெல்லை நீதிமன்றங்களிலிருந்து மிகவும் பாதுகாப்புக்கு மத்தியில் அழைத்துவரப்பட்ட இவர்களுக்கு கைக்குண்டு எவ்வாறு கிடைத்தது என அறிய பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.