* அமைச்சர் மகிந்த சமரசிங்க
ரொஷான் நாகலிங்கம்
பிரெஞ்சு தன்னார்வ தொண்டர் நிறுவனமான பட்டினிக்கு எதிரான அமைப்பின் பணியாளர்கள் 17 பேரின் படுகொலை தொடர்பில் சுயாதீனமான விசாரணைக்குழு மூலம் அரசாங்கம் ஒளிவு மறைவின்றி விசாரணைகளை மேற்கொள்வதாக அனர்த்த முகாமைத்துவ மனித உரிமைகள் அமைச்சர் மகிந்த சமரசிங்க தெரிவித்தார்.
அத்துடன், இது தொடர்பில் சாட்சிகள் இருப்பின் தற்போது இடம்பெறும் விசாரணைகள் முன் சாட்சிகளை நிறுத்தமுடியுமெனத் தெரிவித்த அவர் சுயாதீனமாக விசாரணைகள் இடம்பெறுகையில் எதற்கு வேறொரு விசாரணை தேவையெனவும் கேள்வி எழுப்பினார்.
அவரது அமைச்சில் இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றிய அவர் மேலும் தெரிவித்ததாவது;
"கிழக்கு உள்ளூராட்சி தேர்தல் இடம்பெற்ற போது வன்முறைகள் அங்கு இடம்பெறவில்லை. இதனை பவ்ரல் அமைப்பும் தனது அறிக்கையில் உறுதி செய்துள்ளது. எதிர்வரும் மே 10 இல் மாகாண சபை தேர்தல் சுமுகமான முறையில் இடம்பெறும்.
சர்வதேச நிபுணர்களைக் கொண்ட சுயாதீன விசா ரணை ஆணைக்கழுவின் 11 வெளிநாட்டு உறுப்பினர்கள் வெளியேறிய போதும் அந்தப் பணி முடிவடைந்து விடவில்லை. இந்த அவதானிகள் குழுவை செயற்படுத்த அரசு நடவடிக்கை எடுக்கும்.தாம் வெளியேறுவது குறித்து தமது நிலைப்பாடுகளை அவர்கள் முன்வைத்துள்ளனர். இது தொடர்பில் நாமும் எமது நிலைப்பாடுகளை முன்வைத்துள்ளோம். அவர்கள் விசாரணைகளை மேற்கொண்டு அறிக்கை சமர்ப்பிப்பதற்கு கொடுக்கப்பட்ட காலப்பகுதிக்கு முன்னர் 8 மாதத்தில் அவர்கள் தமது பதவிகளை ராஜிநாமா செய்துள்ளனர்.
இந்த அவதானிகள் குழுவை செயற்படுத்த ஒரு வருடம் எடுத்தது. ஏனெனில், ஒரு பொறிமுறையை செயற்படுத்த தேவையான நடவடிக்கை எடுத்ததே காரணமாகும். எனவே, இருதரப்பு நிலைப்பாடுகளை மக்கள் தெரிந்து கொண்டுள்ளதால் அவர்கள் உண்மையை உணர்ந்து கொள்வர்.
சிறுவர்களை புலிகள் படையில் சேர்ப்பது குறித்து நாம் யுனிசெப்பின் கவனத்துக்கு கொண்டு வந்துள்ளதுடன் இதனை தடுப்பதற்கு நாம் யுனிசெப்புடன் இணைந்து பணியாற்ற அமைச்சு நடவடிக்கை எடுத்து வருகின்றது. இது குறித்து ஐ.நா.வுடனும் நான் பேச்சு நடத்தியுள்ளேன்.
பட்டினிக்கெதிரான அமைப்பின் பணியாளர்கள் 17 பேர் கொலை செய்யப்பட்டமை குறித்து நாம் மூடி மறைக்கவில்லை. அரசு தற்போது விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றது. இது குறித்த உண்மைகள் தெரிந்தால் தற்போது நடைபெற்று வரும் விசாரணைகளின் போது சாட்சிகளை மனித உரிமைக்கான பல்கலைக்கழக ஆசிரியர்கள் அமைப்பு நிறுத்த முடியும்.
தற்போது இது தொடர்பில் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றது. இக்குழு முன்வைக்கும் பரிந்துரைக்கமைய ஜனாதிபதி நடவடிக்கைகளை மேற்கொள்வார். இவ்வாறான நிலையில் எதற்கு மற்றொரு விசாரணை?
மனித உரிமைகளுக்கான பல்கலைக்கழக ஆசிரியர்கள் அமைப்பு சர்வதேச விசாரணை வேண்டுமென கோரியுள்ளமை தொடர்பில் ஊடகவியலாளர்களால் கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.